பாதை மாறும் பாமக, தேமுதிக... பலமாகும் பாஜக கூட்டணி!


பிரதமர் மோடியுடன் டாக்டர் ராமதாஸ், அன்புமணி

மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணியில் பாமக மற்றும் தேமுதிக ஆகிய கட்சிகள் இணைய வாய்ப்பு அதிகரித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

தேமுதிக நிர்வாகிகளுடன் பிரதமர்

பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்துவந்த அதிமுக, தமிழ்நாட்டில் அக்கட்சியுடனான தங்கள் கூட்டணி உறவை முறித்துக்கொண்டு தனி அணி அமைத்து வருகிறது. பாஜக - அதிமுக கூட்டணியில் இருந்துவந்த புதிய தமிழகம் உள்ளிட்ட கட்சிகளை தங்கள் கூட்டணிக்கு கொண்டு வந்துள்ள அதிமுக, பாமக மற்றும் தேமுதிகவையும் கொண்டுவர கடந்த பெரும் முயற்சி மேற்கொண்டு வந்தது.

பாமக நிறுவனர் டாக்டர் ராமதாசை அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் சி.வி.சண்முகம் எம்பி இரண்டு முறை நேரில் சந்தித்து பேசி ஆதரவை கோரினார். அதனைத்தொடர்ந்து மறைமுகமாக இரண்டு கட்சிகளுக்கும் இடையே பேச்சுவார்த்தை நடந்துவந்தது. 7 தொகுதிகளையும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் பதவியும் பாமகவுக்கு வழங்க அதிமுக முன் வந்துள்ளதாக கூறப்பட்டது.

பிரேமலதா

இதற்கு நடுவே பாமக தலைவர் அன்புமணியை பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்பு கொண்டு பேசி வந்ததாகவும் கூறப்பட்டது. இந்த நிலையில், நேற்று அன்புமணி டெல்லி புறப்பட்டுச் சென்றுள்ளார். அவர் பாஜக மேலிடத் தலைவர்களுடன் கூட்டணி குறித்து பேச்சுவார்த்தை நடத்தயிருப்பதாக கூறப்படுகிறது. அதனால் பாஜக கூட்டணியில் பாமக இணையும் என்று எதிர்பார்ப்பு நிலவுகிறது.

இதேபோல் தேமுதிகவையும் தங்கள் கூட்டணிக்கு கொண்டு வரும் முயற்சியில் அதிமுக தோற்றுவிட்டதாகக் கூறப்படுகிறது. ஆரம்பம் முதலே அதிமுக - தேமுதிக பேச்சுவார்த்தை இணக்கமாகவே இருந்து வந்தது. முன்னாள் அமைச்சர்கள் வேலுமணி உள்ளிட்டவர்கள் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதாவின் வீட்டுக்குச் சென்று கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தினர். அடுத்த கட்டமாக தேமுதிக பேச்சுவார்த்தை குழுவினர் அதிமுக அலுவலகத்திற்கு வந்து தொகுதிப்பங்கீடு குறித்து பேச்சு நடத்தினர்.

தேமுதிகவுக்கு 3 தொகுதிகளை வழங்க அதிமுக முன் வந்ததாகவும், ஆனால் தேமுதிக சார்பில் கூடுதல் இடங்களும், ஒரு மாநிலங்களவை உறுப்பினர் இடமும் கேட்டதாகவும் சொல்லப்பட்டது. என்றபோதும் பேச்சுவார்த்தைக் குழுவில் இடம் பெற்றிருந்த பிரேமலதாவின் தம்பி சுதீஷ், அதிமுகவுடனான பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ளவில்லை. மாறாக அவர் டெல்லியில் பாஜக தலைவர்களுடன் பேச்சு நடத்தியதாக கூறப்பட்டது.

தற்போது அதிமுகவுடனான கூட்டணிப் பேச்சுவார்த்தையை தொடர தேமுதிக விரும்பவில்லை என்றும், டெல்லி பாஜக தலைவர்களுடன் அவர்கள் பேசி வருவதாகவும், அதன் விளைவாக அக்கட்சியும் விரைவில் பாஜக கூட்டணியில் இணையலாம் என்றும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது.

ஆக, காட்சிகள் மாறி கட்சிகள் இடம் மாறுவதால் தமிழ்நாட்டில் பாஜக கூட்டணி வலுவடைந்து வருகிறது.

இதையும் வாசிக்கலாமே...


தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!

x