சீதாராம் யெச்சூரிக்கு புகழஞ்சலி முதல் மகாவிஷ்ணுவிடம் விசாரணை வரை: டாப் 10 விரைவுச் செய்திகள் 


மார்க்சிஸ்ட் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி மறைவு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார். அவருக்கு வயது 72. நிமோனியா போன்ற மார்புத் தொற்று சிகிச்சைக்காக ஆகஸ்ட் 19-ம் தேதி டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் அவர் அவசர சிகிச்சை பிரிவுக்கும், தொடர்ந்து தீவிர சிகிச்சை பிரிவுக்கு மாற்றப்பட்டார். அவரை பல்துறை நிபுணர்கள் அடங்கிய மருத்துவர்கள் குழு கண்காணித்து வந்தது. சுவாசக் கருவிகளின் உதவியுடன் அவர் சுவாசித்து வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார்.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் யெச்சூரி செயல்பட்டு வந்தார். மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் அக்கட்சியின் பொதுச் செயலாளருக்கான தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாவது முறையாக அந்தப் பொறுப்பை கவனித்து வந்தார். 2004-ல் ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசை உருவாக்குவதில் முக்கியப் பங்காற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

சீதாராம் யெச்சூரியின் உடல் தானம்: சீதாராம் யெச்சூரி உடல், மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு தானமாக வழங்கப்படுகிறது. இது குறித்து டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், ‘மருத்துவப் படிப்பு மற்றும் ஆராய்ச்சிக்காக அவரது உடலை டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அவரது குடும்பத்தினர் தானமாக வழங்கி உள்ளனர்’ என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சீதாராம் யெச்சூரியின் அரசியல் பயணம்: சீதாராம் யெச்சூரியின் அரசியல் பயணம் குறித்து விவரித்துள்ளார் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடியின் மாநில செயலாளர் கே.பாலகிருஷ்ணன். “மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய பொதுச் செயலாளர், செங்கொடி இயக்கத்தின் மகத்தான தலைவர் தோழர் சீதாராம் யெச்சூரி சென்னையில் 1952-ம் ஆண்டு பிறந்தவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் உயரிய தலைவராகவும், இடதுசாரி இயக்கத்தின் தனித்திறன் படைத்த தலைவராகவும் உலகறிந்த மார்க்சிய தத்துவ வாதியாகவும் விளங்கினார்.

ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் தலைவராக மூன்று முறை தேர்ந்தெடுக்கப்பட்டவர், அதன் தொடர்ச்சியாக இந்திய மாணவர் சங்கத்தை பல ஆண்டுகள் வழிநடத்தி அகில இந்திய அளவில் சக்திமிக்க அமைப்பாக மாற்றியதில் அவருக்கு முக்கிய பங்கு உண்டு. 1975-ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்ட தோழர் சீதாராம் யெச்சூரி தனது அரசியல் நடவடிக்கைகளுக்காக அவசர நிலை காலத்தில் கைது செய்யப்பட்டவர். 1985-ம் ஆண்டு முதல் மத்தியக்குழு உறுப்பினராகவும், 1992-ம் ஆண்டு முதல் அரசியல் தலைமைக்குழு உறுப்பினராகவும், 2015 முதல் பொதுச் செயலாளராகவும் செயலாற்றியவர்.

பல உலக நாடுகளின் கம்யூனிஸ்ட் கட்சி தலைவர்களோடு நெருக்கமாக பழகியவர். கம்யூனிஸ்ட் கட்சிகளின் மாநாடுகளில் கலந்து கொண்டு இன்றைய சூழ்நிலையில் உலக கம்யூனிஸ்ட் இயக்கத்தின் முன்னுள்ள கடமைகளை அழுத்தமாக வலியுறுத்தியவர். கட்சியின் அரசியல் நிலைபாடுகளை உருவாக்குவதிலும், செயல்படுத்துவதிலும் கடந்த 30 ஆண்டு காலமாக தனது முழு பங்களிப்பையும் செய்வதர் தோழர் சீதாராம் யெச்சூரி.

குறிப்பாக, தத்துவார்த்த தளத்திலும், மதச்சார்பற்ற பன்முகத் தன்மை கொண்ட கூட்டாட்சி இந்தியாவை பாதுகாக்க வேண்டும் என்பதிலும் முனைப்பு காட்டியவர். இண்டியா கூட்டணியை உருவாக்குவதில் அவருடைய பங்களிப்பு மகத்தானது.

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகாரப்பூர்வ ஏடான பீப்பிள்ஸ் டெமாக்கரசின் ஆசிரியராக செயலாற்றியுள்ளார். சிறந்த பேச்சாளர், எழுத்தாளர், இந்துத்துவாவை எதிர்த்த போராட்டத்தில் கூடுதலான பங்களிப்பு செய்தவர். இந்து ராஷ்டிரம் என்பது என்ன?, மதவெறியும், மதச்சார்பின்மையும் ஆகிய புத்தகங்கள் முக்கியமான பங்களிப்புகளாகும். இரண்டு முறை மாநிலங்களவை உறுப்பினராக பணியாற்றியவர். மிகச் சிறந்த நாடாளுமன்ற உறுப்பினராக திகழ்ந்தார். ஐக்கிய முன்னணி மற்றும் ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கங்களை உருவாக்கும் முயற்சியில் முக்கிய பங்களிப்பு செய்தவர். தமிழகத்தில் பிறந்தவர் என்பதோடு தமிழகத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியை வழிநடத்துவதில் பல்வேறு தருணங்களில் உதவி செய்தவர்” என்று கே.பாலகிருஷ்ணன் விவரித்துள்ளார்.

மேலும், “செங்கொடியின் மகத்தான புதல்வர் தோழர் சீதாராம் யெச்சூரிக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கொடி தாழ்த்தி அஞ்சலி செலுத்துகிறது. கட்சி கொடியினை ஒருவார காலத்துக்கு அரைக்கம்பத்தில் பறக்க விட்டு மரியாதை செலுத்துமாறும், மூன்று நாட்களுக்கு கட்சி நிகழ்ச்சிகளை ரத்து செய்யுமாறும் கட்சி அணிகளை மாநில செயற்குழு கேட்டுக் கொள்கிறது.

தோழர் சீதாராம் யெச்சூரியின் உடல் பொதுமக்கள் பார்வைக்காக செப்.14 அன்று காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை புதுடெல்லியில் கட்சியின் மத்தியக்குழு அலுவலகத்தில் வைக்கப்படும். மாலை 3 மணிக்குமேல் அவர் விருப்பத்தின் அடிப்படையில அவரது உடல் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு, மருத்துவ ஆராய்ச்சிக்காக ஒப்படைக்கப்படும்,” என்று அவர் தெரிவித்துள்ளார்.

சீதாரம் யெச்சூரிக்கு தலைவர்கள் புகழஞ்சலி: “சீதாராம் யெச்சூரியின் மறைவை அறிந்து கவலையடைந்தேன். இடதுசாரி கட்சிகளின் முன்னணி ஒளிவிளக்காக திகழ்ந்த அவர், அரசியல் வேறுபாடுகளைக் களைந்து அனைவரையும் அரவணைத்துச் செல்லும் திறமையைப் பெற்றிருந்தார். செயல்திறன் மிக்க ஒரு நாடாளுமன்றவாதியாகவும் அவர் முத்திரைப் பதித்தார். இந்தத் துயரமான நேரத்தில் அவரது குடும்பத்தினர் மற்றும் ஆதரவாளர்களுடன் எனது எண்ணங்கள் உள்ளன. ஓம் சாந்தி” என்று பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, “நமது நாட்டைப் பற்றி ஆழமான புரிதல் உள்ள அவர், இந்தியா என்ற சித்தாந்தத்தின் பாதுகாவலர்” என்று குறிப்பிட்டுள்ளார்.

“இந்திய அரசியலில் தலை சிறந்த ஆளுமையான சீதாராம் யெச்சூரியின் மறைவு அதிர்ச்சியையும், வேதனையும் அளிக்கிறது. இளம் வயதில் இருந்தே நீதிக்காக போராடிய பயமறியா தலைவரான அவர், மாணவர் தலைவராக இருந்தபோது, அவசர நிலைக்கு எதிராக அவர் நின்றார். தொழிலாளர் வர்க்கம், மதச்சார்பின்மை, சமூக நீதி, சமத்துவம் மற்றும் அவரது முற்போக்கு சிந்தனைகள் வருங்கால சந்ததியினருக்கு வழிகாட்டும். அவர் உடனான எனது நினைவுகளும்,பேச்சுகளும் எப்போதும் போற்றுதலுக்குரியவை” என்று முதல்வர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

இதேபோல் ராஜ்நாத் சிங், சரத் பவார், எடப்பாடி பழனிசாமி, மாயாவதி, முத்தரசன், வைகோ உள்ளிட்ட தலைவர்கள் பலரும் யெச்சூரிக்கு புகழஞ்சலி செலுத்தியுள்ளனர்.

ம.பி.யில்பாலியல் வன்கொடுமை: மத்தியப் பிரதேசத்தில் ராணுவ அதிகாரிகள் இருவர் தாக்கப்பட்டதோடு, அவர்களுடன் வந்த இரண்டு பெண்களில் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஹரியாணா பாஜகவில் சலசலப்பு: ஹரியாணா மாநில சட்டப்பேரவை தேர்தலுக்கு இன்னும் சில வாரங்களே உள்ள நிலையில், அம்மாநில பாஜகவின் துணைத் தலைவர் சந்தோஷ் யாதவ், கட்சியில் இருந்து விலகி உள்ளார். இது ஆளும் பாஜக தரப்புக்கு பின்னடைவாக அமைந்துள்ளது. கட்சிக்கு உண்மையாக பணியாற்றுபவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படவில்லை என அவர் குற்றச்சாட்டு வைத்துள்ளார்.

வேலூர் சிறைத் துறை டிஐஜி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்: வேலூர் மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதி மீதான திருட்டு புகாரில் தனிச்சிறையில் அடைத்து துன்புறுத்தியதாக சிபிசிஐடி போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ள நிலையில், சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றி சிறைத்துறை டிஜிபி மகேஷ்வர் தயாள் உத்தரவிட்டுள்ளார். அதேபோல், வேலூர் ஆண்கள் மத்திய சிறை மற்றும் பெண்கள் தனிச்சிறையின் பொறுப்பு கண்காணிப்பாளராக இருந்த கூடுதல் கண்காணிப்பாளர் அப்துல் ரகுமான், சென்னை புழல் 2-க்கு அயல் பணியாக மாற்றப்பட்டுள்ளார்.

மதுவிலக்கு சாத்தியமா? - அமைச்சர் பதில்: “விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினர் மதுவிலக்கு கொள்கையை மக்களிடம் கொண்டு செல்வதற்காக ஒரு மாநாட்டை நடத்துகின்றனர். அவர்கள் நடத்தும் மதுவிலக்கு மாநாட்டை நாம் தவறு என்று சொல்ல முடியாது. அவர்கள் அரசை எதிர்த்தோ, முதல்வர் ஸ்டாலினை எதிர்த்தோ மாநாடு நடத்தவில்லை.
முதல்வர் ஸ்டாலினுக்கு டாஸ்மாக் கடையை தொடர்ந்து நடத்துவதில் எள் அளவுக்கும் விருப்பம் இல்லை. டாஸ்மாக் கடைகள் என்றைக்காவது ஒரு நாள் மூடப்படவேண்டும் என்பது தான் அவரின் எண்ணம். ஆனால், உடனடியாக இதனைச் செய்தால் எந்த நிலைமை ஏற்படும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே அப்படிப்பட்ட கடுமையாக சூழ்நிலையை நிதானமாக அணுக வேண்டும் என்பது தான் அரசின் நோக்கமாக உள்ளது” என்று தமிழக மதுவிலக்கு ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சு.முத்துசாமி கூறியுள்ளார்.

தமிழக அரசு ஊழியர்கள் பணிக்கொடை ரூ.25 லட்சமாக உயர்வு: மத்திய அரசு உயர்த்தியதைத் தொடர்ந்து, தமிழக அரசு ஊழியர்களுக்கான பணிக்கொடை ரூ.20 லட்சத்தில் இருந்து ரூ.25 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த உயர்வு கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் அமலுக்கு வந்துள்ளது. இதன் மூலம் கடந்த ஜனவரி 1ம் தேதி முதல் ஒய்வு பெற்ற அரசு ஊழியர்கள் இதில் பயன்பெறுவார்கள் என்று அரசு தெரிவித்துள்ளது.

மகாவிஷ்ணுவிடம் விசாரணை: சென்னை அரசுப் பள்ளியில் சர்ச்சைக்குரிய கருத்துகளை பேசிய விவகாரம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பேச்சாளர் மகாவிஷ்ணுவை, போலீஸார் வியாழக்கிழமை அவரது பரம்பொருள் அறக்கட்டளைக்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அறக்கட்டளைக்கான நன்கொடை விவரங்கள், என்னென்ன மாதிரியான பணிகளில் அறக்கட்டளை ஈடுபடுகிறது, எந்தெந்த பள்ளிகளில் மகாவிஷ்ணு சொற்பொழிவு ஆற்றியுள்ளார், என்னென்ன தலைப்புகளில் அவர் சொற்பொழிவு செய்து வருகிறார் என்பது உள்ளிட்ட தகவல்களை போலீஸார் திரட்டினர்.

x