`சேரி’ தப்பான வார்த்தை கிடையாது; அதனால் மன்னிப்பு கேட்க முடியாது- சொல்கிறார் குஷ்பு


குஷ்பு

``சேரி ஒன்றும் தப்பான வார்த்தை கிடையாது. அதனால் நான் யாரிடம் மன்னிப்பு கேட்க வேண்டிய அவசியமில்லை. காங்கிரஸ்காரங்க எப்போ என் வீட்டின் முன்பு போராட்டம் நடத்துவார்கள் என நான் காத்திருக்கிறேன்'' என்று நடிகை குஷ்பு தெரிவித்துள்ளார்.

சென்னை விமான நிலையத்தில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், ‘’சேரி என்பது தவறான வார்த்தை கிடையாது. வேளச்சேரி, செம்மஞ்சேரி என்பது போலதான். அதற்கான விளக்கத்தையும் நான் தெளிவாக கொடுத்துள்ளேன். ‘சேரி’ என்ற வார்த்தை அரசு ஆவணங்களில் இருக்கிறது. வேளச்சேரி, செம்மஞ்சேரின்னு எல்லாம் இருக்கே, அதுக்கு என்ன அர்த்தம்?

இதற்கு மட்டும் போராட்டம் நடத்துவோம் என கூறும் காங்கிரஸ்காரங்க, ஒரு பெண்ணான என்னை எவ்வளவு கீழ்த்தரமாக பேச முடியுமோ அவ்வளவு கீழ்த்தரமாக பேசும் திமுகவினரை கண்டித்து ஏன் போராட்டம் பண்ணல? நான் சந்திக்காத வழக்குகள் கிடையாது. விசாரணைக்கு அழைக்கட்டும் நிச்சயம் போவேன். நான் யாரையும் மரியாதைக் குறைவாக பேசவில்லை. எனக்கு தெரிந்த மொழியில் நான் பேசினேன்.

த்ரிஷா - மன்சூர் அலிகான்

இந்தியாவின் குடியரசு தலைவராக திரெளபதி முர்மு பதவியேற்ற போது அதனைத் தாங்கிக் கொள்ள முடியாமல் விமர்சனம் செய்தவர்கள் தான் இந்த காங்கிரஸார். நேருவுக்கும், இந்திராகாந்திக்கும் பாரத் ரத்னா வாங்கி கொடுத்தவர்களுக்கு அம்பேத்கருக்கு ஏன் கொடுக்க முடியவில்லை.

த்ரிஷா, மன்சூர் அலிகான் விவகாரத்தில் எங்களுக்கு புகார் வந்தது. அதன்பேரில் நடவடிக்கை எடுத்தோம். அதேபோல ரோஜா விவகாரத்திலும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் வந்தது. அதன்படி நடவடிக்கை எடுக்கப்பட்டது. மணிப்பூர் விவகாரத்தில் உங்கள் கைகளுக்கு வந்த பிறகுதான் எங்களுக்கே அந்த வீடியோ வந்தது. அதன்பின் நடவடிக்கை எடுத்தோம். என்ன நடவடிக்கை எடுத்தோம் என்பது போலீஸாருக்கு நன்கு தெரியும்’’ என்றார்.

x