“அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை ‘ஏடிஎம் கார்டு’ போன்றது” - வி.வி.ராஜன் செல்லப்பா


மதுரை: "2026 சட்டமன்றத் தேர்தலில் திமுகவும், அதன் தலைவர் ஸ்டாலினும் தனிமைப்படுத்தப்படும்," என்று அதிமுக அமைப்பு செயலாளரும், கிழக்கு மாவட்ட செயலாளருமான வி.வி.ராஜன் செல்லப்பா கூறியுள்ளார்.

மதுரை புறநகர் கிழக்கு மாவட்டம் கிழக்கு தொகுதியில் உள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றியம் சார்பில் உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்ச்சி கருப்பாயூரணியில் நடைபெற்றது. ஒன்றிய செயலாளர் கார்சேரி கணேசன் தலைமை வகித்தார். உறுப்பினர் அடையாள அட்டைகளை அமைப்புச் செயலாளரும், மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வி.வி. ராஜன் செல்லப்பா வழங்கினார்.

இந்நிகழ்ச்சிகளில் மதுரை புறநகர் கிழக்கு மாவட்ட இளைஞர் அணி செயலாளர் வழக்கறிஞர் ரமேஷ், ஒன்றிய செயலாளர்கள் நிலையூர் முருகன், வாசு என்ற பெரியணன், பகுதி செயலாளர் வண்டியூர் செந்தில்குமார், மாவட்ட கலை பிரிவு செயலாளர் கா.அரசு மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

வி.வி.ராஜன் செல்லப்பா பேசுகையில், "அதிமுக உறுப்பினர் அடையாள அட்டை ஏடிஎம் கார்டு போல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதில் பணம் வருமா என்று கேட்க வேண்டாம். நிச்சயம் 2026 தேர்தலில் இந்த கார்டு பயனுள்ளதாக இருக்கும். தங்களை தேடி தாலிக்கு தங்கம் திட்டம், மடிக்கணினி திட்டம், உழைக்கும் பெண்களுக்கு இருசக்கர வாகனத் திட்டம் இது போன்ற அனைத்து திட்டங்களும் உங்களுக்கு கிடைக்கும். திமுக கூட்டணி கட்சிகளை சேர்ந்த செல்வப் பெருந்தகை ஒரு கருத்தை சொல்கிறார், கம்யூனிஸ்ட் மற்றொரு கருத்தை சொல்கிறது.

அவர்கள் கூட்டணிக்குள் பூசல் ஏற்பட்டுள்ளது. திமுக அரசுக்கு எதிராக போராட்டத்தை நடத்த ஆரம்பித்துவிட்டார்கள். இப்படியே சென்றால் 2026 தேர்தலில் திமுக தனிமைப்படுத்தப்பட்டு விடும். தினந்தோறும் கொலைகள் நடைபெற்று வருகிறது. கூலி படைகள் அதிகரித்து வருகிறது. முக்கிய பிரமுகர்கள் மட்டுமில்லாது பொதுமக்கள் கூட நிம்மதியாக நடைப் பயிற்சி கூட செய்ய முடியவில்லை" என்று ராஜன் செல்லப்பா கூறினார்.

x