மாறி வரும் தமிழக அரசியல் சூழலில் 2024 மக்களவைத் தேர்தலில் திமுக, அதிமுக தலைமையிலான கூட்டணிகளைத் தவிர்த்து மூன்றாவதாகவும் ஒரு அணி அமைவதற்கான வாய்ப்புக்கள் அதிகமாகியிருப்பதாக அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர்
தமிழகத்தில் அதிமுக, திமுக கூட்டணிகள் மட்டும் தான் எப்போதுமே பிரதானம் என்றாலும் தேர்தலுக்குத் தேர்தல் மூன்றாவது அணி முயற்சிகளும் தலைதூக்கும். மூன்றாவது அணிக்கு இங்கே ஒருபோதும் முகாந்திரம் இல்லை என்றபோதும் அந்த முயற்சிகள் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன.
இம்முறையும் ஓபிஎஸ் தினகரன் அணியை அதிமுகவுக்குள் சேர்க்க மறுக்கும் ஈபிஎஸ்ஸின் பிடிவாத அரசியலால் மீண்டும் மூன்றாவது அணி பேச்சுகள் அலையடிக்கின்றன. தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையோ, தமிழகத்தில் பாஜக தலைமையில் தான் கூட்டணி அமைத்து போட்டியிட வேண்டும் என்ற கருத்தில் தெளிவாக இருக்கிறார். அதனால் தான் அவர் அதிமுக தலைமையிலான கூட்டணியை ஏற்கமறுக்கிறார்.
இன்னொருபுறம், பாஜக கூட்டணியில் இருக்கும் பாமகவும், தேமுதிகவும், “அதிமுகவுடன் நாங்கள் கூட்டு இல்லை” என்பதை மீண்டும் மீண்டும் சொல்லி வருகின்றன. “தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட்டணி குறித்த முடிவை அறிவிப்போம்” என்றும் இந்தக் கட்சிகள் இப்போதுவரை சொல்லி வருகின்றன.
இந்தத் தேர்தலில் அதிமுக கரைசேராது என்று நன்கு தெரிந்ததாலேயே அதிமுக கூட்டணி வேண்டாம் என்கிறார் அன்புமணி. அதிமுக, திமுக கூட்டணி இல்லாமல் புதிதாக ஒரு கூட்டணியை கட்டமைத்து அதற்கு தாங்கள் தலைமை ஏற்க வேண்டும் என்பதே அன்புமணியின் அஜெண்டாவாக இருக்கிறது.
ஆனால் அப்படி பாமக தனி ரூட்டில் பயணிப்பதை பாஜக விரும்பவில்லை. அதிமுக ஒத்துவராத பட்சத்தில் இரண்டு முக்கிய கூட்டணிகளாலும் ஒதுக்கப்படும் பாமக உள்ளிட்ட கட்சிகளைச் சேர்த்து மூன்றாவது அணியை தங்கள் தலைமையில் அமைக்கும் திட்டமும் பாஜக வசம் இருப்பதாகச் சொல்கிறார்கள்.
தேமுதிகவுக்கும் அதிமுகவுடன் தனிப்பட்ட கசப்பு இருக்கிறது. கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாமகவை வலியச்சென்று கூட்டணிக்கு கூப்பிட்ட அதிமுக, தேமுதிகவை திண்டாட்டத்தில் விட்டது. அதனால் அதிமுக மீது பிரேமலதாவுக்கு ஏற்பட்ட மன வருத்தம் இன்னும் போகவில்லை என்று சொல்பவர்கள், அவருக்கு பாஜக தலைமையிலான கூட்டணியில் இணைவதில் எந்தத் தயக்கமும் இருக்காது என்கிறார்கள்.
தேமுதிகவைப் பொறுத்தவரை விஜயகாந்த் ஆக்டீவ் அரசியலில் இல்லாததால் அதன் வாக்குவங்கி சுத்தமாக குறைந்து போய்விட்டதாக ஈபிஎஸ் கருதுகிறார். அக்கட்சியை வழிநடத்தும் பிரேமலதாவும் அரசியல் நம்பகத்தன்மை இல்லாதவராக இருக்கிறார் என்று ஈபிஎஸ் நினைக்கிறார். அதனால் தேமுதிகவையும் கூட்டணிக்குள் இழுக்க அவர் விரும்பவில்லை என்கிறார்கள்.
அதேபோல பாமக மீதும் ஈபிஎஸ் தீராத வருத்ததில் இருக்கிறாராம். அண்மையில் பாமக பொதுக்குழு கூட்டத்தில் பேசிய அன்புமணி, “அதிமுக இப்போது 5 பாகங்களாக உடைந்துவிட்டது. பலரும் இங்கே சத்தம்தான் போட்டு வருகிறார்கள். பாமகதான் மக்கள் பிரச்சினைகளுக்காக குரல் கொடுத்து வருகிறது. பாமக ஒரு அறிக்கை விட்டால் போதும் முதல்வர் ஸ்டாலின் அதை நிறைவேற்றி விடுகிறார்” என்று சொன்னதை ஈபிஎஸ் ரசிக்கவில்லை.
ஏற்கெனவே பலமிழந்த நிலையில் இருக்கும் அதிமுகவுக்கு ஓரளவுக்கு வாக்குவங்கியை வைத்திருக்கும் தேமுதிகவும் பாமகவும் கூட்டணியில் இணைந்தால் அது பக்கபலமாக இருக்கும். அவர்களைக் கூட்டணிக்குள் சேர்க்காவிட்டால் கூட்டணியின் வெற்றி எப்படி சாத்தியமாகும் என யோசிக்கிறது பாஜக. தங்கள் எண்ணப்படி, இந்தக் கட்சிகளை அதிமுக கூட்டணியில் சேர்க்காமல் ஒதுக்கினால், மூன்றாவது அணிக்கு தலைமை ஏற்கும் நிலைக்குக்கூட பாஜக வரலாம் என்கிறார்கள்.
பாஜக தலைமையிலான அந்தக் கூட்டணியில் ஓபிஎஸ், சசிகலா, தினகரன் உள்ளிட்ட அதிமுக அதிருப்தியாளர்களும், தேமுதிக, பாமக, புதிய தமிழகம், தமாகா, ஐஜேகே உள்ளிட்ட பாஜகவின் தோழமைக் கட்சிகளும் இணைந்து போட்டியிடும் சூழல் உருவாகலாம்.
இப்படியான ஒரு கூட்டணியை கடந்த 2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலிலேயே பாஜகவால் கட்டமைக்கப்பட்டு பரிசோதித்துப் பார்க்கப்பட்டுள்ளது. இதேபோல், பாஜக, தேமுதிக, பாமக மதிமுக உள்ளிட்ட கட்சிகளை உள்ளடக்கிய அந்தக் கூட்டணியால் பெரிதாக சாதிக்கமுடியவில்லை என்றாலும் பாஜகவும், பாமகவும் தலா ஒரு தொகுதியில் வெற்றிபெற்று திமுக, அதிமுகவை திரும்பிப் பார்க்க வைத்தன. அந்தத் தேர்தலில் திமுக கூட்டணி ஒரு இடத்தில்கூட வெற்றிபெற முடியவில்லை.
தமிழ்நாட்டில் பாஜக வலுப்பெறாத அந்தக் காலகட்டத்திலேயே மாநிலம் முழுவதும் குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றதோடு இரண்டு தொகுதிகளை வென்றதையும் வைத்து தற்போதுள்ள சூழலை பாஜக கணக்குப்போடுகிறது. தமிழிசையும், எல்.முருகனும் தமிழ்நாட்டில் பாஜகவை உயிர்ப்பித்தார்கள். அண்ணாமலையோ மூலை முடுக்கெல்லாம் கட்சியை கொண்டுபோய் சேர்த்துள்ளார். மத்திய அரசின் நலத்திட்டங்களால் பலனடைந்த பல்லாயிரக் கணக்கானோர் தமிழ்நாட்டில் உள்ளனர். அதனால் பிரதமர் மோடியின் பெயரைப் சொல்லி மூன்றாவது அணி மூலம் தமிழகத்தில் தாங்கள் நினைக்கும் வெற்றியை சாத்தியமாக்கிவிட முடியும் என பாஜக கருதுகிறது.
இப்படியான சூழலில் மூன்றாவது அணி முயற்சிகள் குறித்து பாமக வழக்கறிஞர் கே.பாலுவிடம் பேசினோம். ”மூன்றாவது அணி அமைப்பதா, அல்லது யாருடனும் கூட்டணி அமைப்பதா என்பதையெல்லாம் எங்களுடைய நிறுவனரும், தலைவரும் தேர்தலுக்கு ஆறுமாதம் முன்பாக முடிவு செய்வார்கள். அதற்கு முன்னதாக இப்போதே பாமக தலைமையில் கூட்டணியா, இல்லையா, தமிழ்நாட்டில் மூன்றாவது அணி அமையுமா என்பதையெல்லாம் இப்போது கூறமுடியாது.
ஆனால் ஒன்றைமட்டும் உறுதியாகச் சொல்லமுடியும். யாருடன் கூட்டணி அமைக்க வேண்டும் என்பதையும், யார் எங்களுடன் கூட்டணியில் சேர வேண்டும் என்பதையும் நாங்கள் தான் முடிவு செய்வோம். அதையும் தேர்தல் நெருக்கத்தில்தான் முடிவு செய்வோம்.
அதிமுகவுடன் எங்களுக்கு மோதல் என்று கூறப்படும் செய்திகளில் உண்மையில்லை. நாங்கள் கூட்டணியில் இல்லை என்பதற்காக எங்களுடைய கடமையை செய்யத் தவறவும் மாட்டோம். கூட்டணியில் இருக்கிறோம் என்பதற்காக எதையும் பார்த்துக் கொண்டு அமைதி காக்கவும் மாட்டாம்” என்றார் பாலு.
அதிமுகவின் பிடிவாதப் போக்கு, பாஜக தலைவர் அண்ணாமலையின் அதிமுக விமர்சனப் பேச்சு, பாமகவின் திடீர் கூட்டணி பிரகடனம் - இதெல்லாமே தமிழகத்தில் மூன்றாவது அணி அமைவதற்கான சாத்தியத்தை மறுப்பதற்கில்லை என்பதையே நமக்கு உணர்த்துகின்றன.