திமுக தொகுதிப் பங்கீட்டில் சிவகங்கை தொகுதி மீண்டும் சிவகங்கைக்கு ஒதுக்கப்பட்டிருப்பதாக உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. இம்முறையும் சிட்டிங் எம்பி-யான கார்த்தி சிதம்பரமே காங்கிரஸ் தரப்பில் வேட்பாளராக நிறுத்தப்படுவார் என்று சொல்லப்படும் நிலையில், இதற்கு திமுகவுக்குள் இருந்து கடும் எதிர்ப்பு கிளம்பி இருக்கிறது.
இம்முறை கார்த்திக்கு சீட் கொடுக்கக் கூடாது என சிவகங்கை காங்கிரஸார் பகிரங்கமாக தீர்மானமே நிறைவேற்றினார்கள். அத்துடன், தமிழக காங்கிரஸ் கட்சியின் ஒழுங்கு நடவடிகைக் குழு தலைவரான கே.ஆர்.ராமசாமி, முன்னாள் மத்திய அமைச்சர் சுதர்சன நாச்சியப்பன், முன்னாள் எம்எல்ஏ-வும் சிதம்பரத்தின் 35 ஆண்டுகால உதவியாளருமான சுந்தரம் உள்ளிட்டவர்கள் டெல்லி வரைக்கும் சென்று கட்சியின் முக்கிய தலைவர்களைச் சந்தித்து, “கார்த்தியை தவிர வேறு யாருக்காவது சீட் கொடுங்கள்; கார்த்திக்கு வேண்டாம்” என வலியுறுத்திவிட்டு வந்தனர்.
திமுக தரப்பிலும் கார்த்திக்கு சீட் கொடுத்தால் கரைசேர முடியாது என்று தலைமை வரைக்கும் சிலர் தகவலை தட்டிவிட்டார்கள். இந்த நிலையில், சிவகங்கை தொகுதிக்கு விருப்ப மனு கொடுத்திருந்த திமுகவினருக்கு நேற்று நேர்காணல் நடந்தது. அப்போது மாவட்ட துணைச் செயலாளர் ஜோன்ஸ் ரூசோ உள்ளிட்டவர்கள், “சிவகங்கையில் இம்முறை திமுக போட்டியிட்டால் ரெட்டிப்பு மகிழ்ச்சி. ஒருவேளை, கூட்டணி தர்மத்துக்காக சிவகங்கையை காங்கிரசுக்கு விட்டுத்தர முடிவெடுத்தால், கார்த்தி சிதம்பரத்தைத் தவிர வேறு யாரையாவது வேட்பாளராக தேர்வு செய்யச் சொல்லுங்கள். கார்த்தி நின்றால் சிரமம்” என்று ஸ்டாலினிடம் சொன்னார்களாம்.
“ஏன் கார்த்திக்கு சீட் கொடுக்க வேண்டாம் என்று சொல்கிறீர்கள்?” என்று ஸ்டாலின் கேட்டாராம். அதற்கு, ”தேர்தலில் ஜெயித்த பிறகு நன்றி சொல்லக்கூட வராத மனுசன் அவர்” என்று சொன்னார்களாம் சிவகங்கை திமுகவினர். அனைத்தையும் பொறுமையாக கேட்டுக்கொண்ட ஸ்டாலின், “கார்த்தியைப் பற்றி நீங்கள் சொல்லும் தகவல்கள் அனைத்தும் எனக்கும் முன்பே வந்துவிட்டது. அவர்களது கட்சித் தலைமைக்கும் தெரியும். தொகுதியை காங்கிரசுக்கு ஒதுக்கிய பிறகு, எங்களுக்கு வேண்டும் என்று கேட்பது சரியாக இருக்காது. இருந்தாலும் சிவகங்கை உள்ளிட்ட இரண்டு தொகுதிகளுக்கு மாற்று வேட்பாளர்களை நிறுத்தும்படி காங்கிரஸ் தரப்பிடம் சொல்லி இருக்கிறோம். அப்படி அவர்கள் வேட்பாளர்களை மாற்றாவிட்டால் அந்த இரண்டு தொகுதிகளையும் நமக்குக் கேட்ப்போம்” என்றாராம்.
இதனிடையே, காங்கிரஸ் தலைமை சிவகங்கைத் தொகுதியில் மீண்டும் ப.சிதம்பரத்தை போட்டியிட வலியுறுத்துவதாகவும் காங்கிரஸ் வட்டாரத்தில் ஒரு தகவல் உலவுகிறது.
kula shanmugasundaram - kamadenu digital
இதையும் வாசிக்கலாமே...
தத்துவமேதை சாணக்யரின் வம்சமா தோனி ?! வைரலாகும் ஆய்வு முடிவுகள்!
#Oscars2024 | 7 விருதுகளை வென்று மாஸ் காட்டிய ‘ஓப்பன்ஹெய்மர்’!