சிறப்பு நிலை நகராட்சியாக பழநி தரம் உயர்த்தப்படுமா? - காரணமும் எதிர்பார்ப்பும்


பழநி நகராட்சி பகுதியில் உள்ள குடியிருப்புகள்

பழநி: பழநி நகராட்சியின் எல்லைகளை விரிவாக்கம் செய்து, வார்டுகளின் எண்ணிக்கையை உயர்த்தி சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்படுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

திண்டுக்கல்லுக்கு அடுத்ததாக பெரிய நகராக அறுபடை வீடுகளில் 3-ம் படை வீடான பழநி திகழ்கிறது. 1894-ல் நகராட்சியாக உருவான பழநி, 1988-ல் தேர்வு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. நகரத்தின் மொத்த பரப்பளவு 6.65 சதுர கி.மீ. தற்போது மொத்தம் 33 வார்டுகள் உள்ளன. 2011-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் நகராட்சி பகுதியில் வசிக்கின்றனர். பல்வேறு வரி இனங்கள் மூலம் நகராட்சிக்கு ஆண்டுதோறும் ரூ.22 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கிறது.

பழநி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு நாள்தோறும் வெளி மாவட்டங்கள், வெளி மாநிலங்களில் இருந்து அதிக அளவில் பக்தர்கள் வருகின்றனர். பூஜைப் பொருட்கள், பூக்கள், பஞ்சாமிர்த கடைகள், உணவகங்கள் என பல்வேறு தொழில்கள் நடந்து வருகின்றன. வணிக நிறுவனங்களின் எண்ணிக்கையும் அதிகரித்துள்ளன.

தேர்வு நிலை நகராட்சியாக அறிவிக்கப்பட்டு 36 ஆண்டுகளான நிலையில் இன்றளவும் நகராட்சி எல்லையை விரிவாக்கம் செய்யாமல் அதே 33 வார்டுகள்தான் உள்ளன. நகராட்சியையொட்டி உள்ள கோதைமங்கலம், சிவகிரிப்பட்டி, கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சிகளை இணைத்து எல்லை விரிவாக்கம் செய்யும் திட்டம் பல்வேறு காரணங்களுக்காக கிடப்பில் உள்ளன.

தேர்வு நிலை நகராட்சியாகவே இருப்பதால் தேவையான உட்கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்துவதிலும், அடிப்படை வசதிகளை விரைவாக செய்து கொடுப்பதிலும் சிரமம் உள்ளது.

பழநி நகராட்சி அலுவலகம்

வளர்ந்து வரும் நகரமாக பழநி இருப்பதால், சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்தப்பட்டால் அரசிடம் இருந்து கூடுதல் நிதி கிடைக்கும். அதன் மூலம் உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாக செய்து கொடுக்க முடியும். எனவே, பழநி நகராட்சியை எல்லை விரிவாக்கம் செய்து சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து நகராட்சி அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘பழநி நகராட்சியின் எல்லையை விரிவாக்கம் செய்யும் நோக்கத்தில் அருகிலுள்ள ஊராட்சிகளின் விவரங்கள் கேட்கப்பட்டுள்ளன. கோதைமங்கலம் ஊராட்சியில் 12 வார்டுகள், சிவகிரிப்பட்டி ஊராட்சியில் 15 வார்டுகள் உள்ளன.

இந்த 2 ஊராட்சிகளை நகராட்சியுடன் இணைக்க, அங்குள்ள மக்கள்தொகை, ஆண்டு வருமானம், எல்லையின் பரப்பளவு போன்ற விவரங்கள் சேகரிக்கப்பட்டு அரசுக்கு அனுப்பப்பட்டுள்ளன. விரைவில் பழநியை சிறப்பு நிலை நகராட்சியாக தரம் உயர்த்த வாய்ப்புள்ளது’ என்றனர்.

x