திண்டுக்கல்லில் ஜோதிமணி, மயிலாடுதுறையில் திருநாவுக்கரசர்?... தொகுதி மாறும் எம்.பி-க்கள்!


திருநாவுக்கரசர்

தற்போதைய காங்கிரஸ் எம்.பி-க்கள் திருநாவுக்கரசர், ஜோதிமணி ஆகியோர் எதிர்வரும் மக்ளவைத் தேர்தலில் தொகுதி மாறி போட்டியிட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஜோதிமணி

எதிர்வரும் மக்களவைத் தேர்தலைச் சந்திக்க திமுக தனது வழக்கமான கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீட்டை நிறைவு செய்துள்ளது. காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள், விடுதலை சிறுத்தைகள், மதிமுக, இந்திய யூனியன் முஸ்லிம் லீக், கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி, மக்கள் நீதி மய்யம் உள்ளிட்ட கட்சிகளுடன் தொகுதிப் பங்கீட்டு பேச்சுவார்த்தைகள் இறுதி செய்யப்பட்டுள்ளன. எனினும் காங்கிரஸ், மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகளுக்கு எந்தந்த இடம் என்பது இதுவரை முடிவு செய்யப்படவில்லை.

காரணம். தற்போது ஒரு கூட்டணி கட்சியிடம் உள்ள தொகுதியை வேறொரு கட்சி கேட்டு வருவது மற்றும் திமுக எடுத்து வைத்திருக்கும் சர்வே ஆகியவை காரணமாக தொகுதிகளை அடையாளம் காண்பதில் குழப்பம் நீடித்து வருகிறது. அது குறித்த விரிவான பேச்சுவார்த்தைகள் திமுக கூட்டணியில் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை

காங்கிரஸ் கட்சிக்கு தமிழகத்தில் ஒன்பது மற்றும் புதுச்சேரியில் ஒரு தொகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. அவை எந்தெந்த தொகுதிகள் என இன்னும் உறுதி செய்யப்படாத நிலையில் கரூர் மற்றும் திருச்சி ஆகிய இரண்டு தொகுதிகளும் இந்தமுறை காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட மாட்டாது என தகவல் வெளியாகியுள்ளது. இந்த இரண்டிலும் அங்குள்ள காங்கிரஸ்காரர்கள் மற்றும் திமுகவினர் மீண்டும் இவர்களுக்கு சீட் வழங்க அதிருப்தி தெரிவித்து வருகின்றனர்.

எனவே, அந்த தொகுதிகளில் ஏற்கெனவே போட்டியிட்டு வெற்றிப் பெற்ற ஜோதிமணி மற்றும் திருநாவுக்கரசர் ஆகிய இருவரும் வேறு தொகுதியில் மாறி போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. ஜோதிமணி, கரூருக்குப் பதிலாக திண்டுக்கல் தொகுதியிலும், திருநாவுக்கரசர் திருச்சிக்குப் பதில் மயிலாடுதுறை தொகுதியிலும் மாறி போட்டியிட உள்ளதாகவும் காங்கிரஸ் தரப்பிலிருந்து செய்திகள் வெளியாகியுள்ளன.

x