நீலகிரி - குந்தாவில் குடிநீர் பிரச்சினைக்கு ‘குட் பை’


குந்தா பகுதியில் ஒசஹட்டி ஆறு உற்பத்தியாகும் மலைத்தொடர்.

மஞ்சூர்: நீலகிரி மாவட்டம் குந்தா தாலுகாவுக் குட்பட்டது கீழ்குந்தா பேரூராட்சி. இதில் மஞ்சூர் பஜார், மஞ்சூர் ஹட்டி, கரியமலை, பாக்கோரை, கீழ்குந்தா, மட்டக்கண்டி, தூனேரி, ஓணிக்கண்டி, குந்தா பாலம், முள்ளிமலை, காந்திபுரம், பெரியார் நகர், கெச்சிகட்டி, தொட்டக்கம்பை, கெத்தை உள்ளிட்ட பகுதிகளை உள்ளடக்கிய 15 வார்டுகள் உள்ளன. 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர்.

கீழ்குந்தா பேரூராட்சிக்கு அம்மக்கல், கட்லாடா உள்ளிட்ட நீராதாரங்கள் மூலமாக, ஆங்காங்கே அமைக்கப்பட்ட மேல்நிலை தொட்டியில் சேமிக்கப்படும் தண்ணீர் வார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்டு வந்தது. காலப்போக்கில் நீராதார பகுதிகளில் ஆக்கிரமிப்பு, பராமரிப்பு பணியில் தொய்வு, மழைக்காலங்களில் அடித்துவரப்பட்ட சேறும், சகதியும் தடுப்பணைகளில் நிறைந்து தூர்வாரப் படாதது உள்ளிட்ட காரணங்களால் தண்ணீர் சேமிக்கமுடியாத நிலை ஏற்பட்டது.

இதனால், வறட்சி காலங்களில் வார்டுகளில் கடும் குடிநீர் பஞ்சம் ஏற்பட்டது. ஊற்றுநீரை தேடி காலி குடங்களுடன் அலைய வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டனர். சில வார்டுகளில் கிணறு அமைத்து கொடுத்தாலும், அந்த குடிநீரை பயன்படுத்த முடிவதில்லை. இதனால், கீழ்குந்தா பேரூராட்சி மக்களின் குடிநீர் பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டுமென, பல ஆண்டுகளாக கோரிக்கை விடுக்கப்பட்டு வந்தது.

இந்நிலையில், நீண்ட கால குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், மஞ்சூர் அருகே குந்தாபாலம் சிவன் கோயில் அருகே குந்தா - ஒசஹட்டி நீராதாரத்திலிருந்து கொண்டுவரப்படும் தண்ணீரை, அங்கு தடுப்பணை கட்டி தண்ணீர் சேமிக்கப்படும் வகையில் கீழ்குந்தா பேரூராட்சி நிர்வாகம் புதிய கூட்டு குடிநீர் திட்டத்துக்கான திட்ட அறிக்கையை தயாரித்து, மாவட்ட நிர்வாகத்தின் ஒப்புதலுடன் அரசுக்கு அனுப்பிவைத்தது. இதையடுத்து, நடப்பு நிதியாண்டில் 'குந்தா - ஒசஹட்டி' கூட்டு குடிநீர் திட்டத்துக்கு ரூ.10. 32 கோடி நிதி ஒதுக்கி மாநில அரசு உத்தரவிட்டது.

இதுகுறித்து பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் முகமது ரிஸ்வான் கூறும்போது, ‘‘கீழ்குந்தா பேரூராட்சியில் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு காணும் வகையில், கலைஞர் நகர்ப்புறமேம்பாட்டு திட்டத்தின் கீழ் குந்தா - ஒசஹட்டி கூட்டு குடிநீர் திட்டத்துக்குரூ.10.32 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

திட்ட அறிக்கையில் உள்ளபடி, தடுப்பணை ஏற்படுத்தி தேவையான இடங்களில் 1 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டு, அங்கு தண்ணீர் சேமித்து வார்டுகளுக்கு விநியோகிக்கப்படுகிறது. இதுதவிர, பழைய குடிநீர் குழாய்கள் அனைத்தும் மாற்றப்பட்டு புதிய குழாய்கள் அமைக்கப்படுகின்றன. டெண்டர் விடப்பட்டு ஒப்பந்ததாரரிடம் பணிகள் ஒப்படைக்கப்பட்டன. விரைவில் பணிகள் தொடங்கும்’’ என்றார்.

பொதுமக்கள் கூறும் போது, ‘‘நீண்ட நாள் குடிநீர் பிரச்சினைக்கு தீர்வு கிடைக்க உள்ளது மகிழ்ச்சியை ஏற்படுத்துகிறது.அனைத்து பணிகளையும் தரத்துடன் மேற்கொள்ள மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றனர்.

x