வழக்கமாக தமிழக தேர்தல் களத்தில் திராவிடக் கட்சிகள் தான் ஆதிக்கம் செலுத்தும். இரண்டு முக்கிய கழகங்களுடன் யாரெல்லாம் கூட்டணி வைப்பார்கள் என்பதுதான் முன்பெல்லாம் பிரதான பேச்சாக இருக்கும்.
ஆனால், இந்தத் தேர்தலில் நிலைமை தலைகீழாகி இருக்கிறது. கழகங்கள் இரண்டும் அடக்கி வாசிக்க, குட்டிக் கட்சிகள் எல்லாம் இரண்டு கழகங்களையும் போட்டுப் பார்க்கின்றன. திமுக, அதிமுக கட்சிகளின் தயவுக்காக சிறு கட்சிகள் காத்திருந்த நிலை மாறி, சிறு கட்சிகளுக்காக அந்தக் கட்சிகள் காத்திருக்க வேண்டிய கட்டாயம் உருவாகிப் போனதும் சரித்திர திருப்பம் தான்.
கூட்டணிப் பேச்சுவார்த்தைக்காக ஜெயலலிதா தங்களை எப்போது அழைப்பார் என்று பிற கட்சிகள் நாள் கணக்கில், வாரக்கணக்கில் கட்சிகள் காத்திருந்த காலமும் உண்டு. ஆனால் இப்போது, அதிமுகவின் கூட்டணி பேச்சுவார்த்தை குழுவினர் அலுவலகத்தை திறந்து வைத்து எந்தக் கட்சியாவது இந்தப் பக்க வருமா என்று வழிமேல் விழிவைத்துக் காத்திருக்கிறார்கள். மற்ற கட்சிகள் வேதா நிலையம் வாசலில் தவம் கிடந்த நிலை மாறி, இப்போது அதிமுக முன்னாள் அமைச்சர்கள் பிற கட்சித் தலைவர்களின் இல்லம் தேடிச் சென்று கூட்டணிக்கு அழைத்துக் கொண்டிருக்கிறார்கள்.
2011 சட்டமன்றத் தேர்தலின் போது கூட்டணிக் கட்சிகள் தான் இழுத்த இழுவைக்கு வரவில்லை என்றதும் தன்னிச்சையாகவே வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு மிரட்டினார் ஜெயலலிதா. இதைப் பார்த்துவிட்டு அதிமுக கூட்டணிக் கட்சிகள் அலறித் துடித்தன. ஆனால், ஜெயலலிதாவின் அந்த அதிரடிக்குப் பிறகுதான் தொகுதிப் பங்கீடு ஒப்பந்தம் ஒரு நிலைப்பாட்டுக்கு வந்தது. அதன் பிறகு முந்தைய வேட்பாளர் பட்டியலை திரும்பப் பெற்று புதிய பட்டியலை வெளியிட்டார் ஜெயலலிதா. அது அவருக்கு மட்டுமே சாத்தியமான ஒன்று.
அதிமுக வைத்துத்தான் மற்ற கட்சிகள் வெற்றிபெற முடியும். அதனால் தான் வந்தால் வரட்டும், வராவிட்டால் போகட்டும் என்ற நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தார் ஜெயலலிதா. அவரைப் பொறுத்தவரை யாருக்காகவும் காத்திருக்க மாட்டார், விட்டுக் கொடுக்கவும் மாட்டார். ஆனால் இப்போது, காத்திருக்கவும், விட்டுக் கொடுக்கவும் தயாராக இருந்தும்கூட தகுதியான கூட்டணி அமைக்க முடியாமல் தவித்து வருகிறது அதிமுக.
ஜெயலலிதாவைப் போல உறுதியான தலைமை இல்லாததால் தங்கள் கட்சி இந்தத் தேர்தலிலாவது கரைசேருமா என்ற கவலை அதிமுகவினருக்கே இருக்கிறது. அதனால் தான் தேமுதிகவையும், பாமகவையும் எப்படியாவது கூட்டணிக்குள் கொண்டுவர அவர்களை கையைப் பிடித்து இழுத்துக் கொண்டிருக்கிறார்கள். கூடவே, குட்டிக் குட்டிக் கட்சிகளையும் கூட்டணிக்குள் அள்ளிப்போட துடிக்கிறார்கள்.
ஒரு காலத்தில், நாமெல்லாம் ஜெயலலிதாவை சந்திக்க முடியுமா என்று காத்திருந்த கட்சிகள் எல்லாம் இப்போது, எங்களுக்கு இத்தனை தொகுதிகள் வேண்டும்... இன்னின்ன தொகுதிகள் வேண்டும் என அதிமுகவுக்கு டிமாண்ட் வைப்பதும் காலத்தின் கோலம் தான்.
தேமுதிகவும் பாமகவும் இம்முறை மிகுந்த நிதானத்தை கடைபிடித்து வருகின்றன. ஏனெனில் அவர்களுக்கு அதிமுக சைடில் மட்டுமல்லாது பாஜக பக்கமும் ஆஃபர் இருக்கிறது. இரண்டு கட்சிகளில் யாரைப் பிடித்துக்கொண்டால் தங்களுக்கு அதிக ‘லாபம்’ கிடைக்கும் என்ற கணக்கும் அதற்குள் இருக்கிறது. அதனால் தான் இந்தக் கட்சிகள் இரண்டு பக்கமும் பிடிகொடுக்காமல் காய் நகர்த்தி வருகின்றன.
இன்னொருபுறம், கடந்த 2016-லிருந்து தனது கூட்டணியை அப்படியே இறுகப் பிடித்து வைத்திருக்கும் திமுகவுக்கும் இதே நிலைதான் ஏற்பட்டிருக்கிறது. ஒரு முறை அழைப்பார்கள், பேச்சுவார்த்தை நடத்துவார்கள்; அடுத்த முறை ஒப்பந்தம் கையெழுத்தாகிவிடும். பிறகு அடுத்தகட்ட தேர்தல் வேலைகளை பார்க்கப் போய்விடுவார்கள். ஆனால் இந்தமுறை மூன்று கட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டும் முடிவுக்கு வராமல் இழுபறி நீடித்தது.
அடுத்த கட்டமாக பேசலாம் என்று திமுக அழைத்தும், மதிமுக, விசிக உள்ளிட்ட கட்சிகள் பேச்சுவார்த்தைக்குப் போகாமல் ஆட்டம் காட்டின. காங்கிரசுடனும் தொகுதிப்பங்கீடு அவ்வளவு சீக்கிரம் நடக்கவில்லை. எங்களுக்கு கட்டாயம் ஒரு சீட் வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி போன்ற கட்சிகள் அழுத்தம் திருத்தமாக அறிவாலய வாசலிலேயே பேட்டி கொடுத்தன.
திமுக தங்களை அழைக்குமா என எதிர்பார்த்திருந்த கட்சிகள் இம்முறை முறுக்கிக்கொண்டு நின்றன. தாங்கள் கேட்கும் தொகுதிகளை கொடுக்க வேண்டும், தனி சின்னத்தில் நிற்க தங்களை அனுமதிக்க வேண்டும் என்றெல்லாம் கூட கூட்டணிக் கட்சிகள் இம்முறை திமுகவுக்கு அழுத்தம் கொடுத்தன. இதனால், பத்து ஆண்டுகளுக்கும் மேலாக பந்தத்தில் இருக்கும் கட்சிகளிடம் கூட தொகுதிகளை இறுதிசெய்ய முடியாமல் திமுக பேச்சுவார்த்தைக் குழுவினர் தவித்தனர்.
கருணாநிதியை விட இணக்கமாக செல்லக்கூடியவர் என்று சொல்லப்படும் ஸ்டாலின், மூன்றுமுறை பேச்சுவார்த்தைக் குழுவினரை அழைத்து ஆலோசனை வழங்கிய பின்னரே மதிமுக, விசிக கட்சிகளுடன் உடன்பாடு எட்டப்பட்டன. தங்களை அரவணைத்துக்கொள்ள அதிமுக தயாராக இருந்ததால் அதை வைத்து கூட்டணித் தலைவனுக்கு போக்குக் காட்டின இந்தக் கட்சிகள். அனைத்தையும் சமாளித்து ஒரு வழியாக தொகுதிப் பங்கீட்டை இறுதி செய்திருக்கிறது திமுக.
சொல்லப் போனால், மிகவும் பொறுமைகாத்து, உணர்ச்சி வசப்படாமல் செயலாற்றி தொகுதிப் பங்கீட்டை சுமுகமாக முடிவுக்கு கொண்டு வந்திருக்கிறது திமுக. இதே நிதானத்துடன் அதிமுகவும் கீழ்மட்டம் வரைக்கும் இறங்கிப்போய் கூட்டணியை பலப்படுத்தி வருகிறது.
ஆக மொத்தத்தில், இந்தத் தேர்தலில் முக்கிய கழகங்களை விட அவர்களின் தோளில் தொத்தி வெற்றியைச் சுவைக்கும் கட்சிகள் தான் தாங்கள் நினைத்ததை எல்லாம் தந்திரமாக சாதித்து வருகின்றன.