திருச்சி - சென்னை நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே மேம்பாலத்தில் மீண்டும் விரிசல்


திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில் வேபாலத்தையொட்டியுள்ள சாலை சாய்வுதள சுவரில் ஏற்பட்டுள்ள விரிசல். | படம் : எஸ்.கல்யாணசுந்தரம் |

திருச்சி: திருச்சி - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே மேம்பாலத்தின் மற்றொரு பகுதியில் மீண்டும் விரிசல் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்தை தடை செய்யாமல் சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து ஆய்வு செய்துவருவதாக இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அதிகாரிகள் தெரிவித்தனர்.

திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் பொன்மலை ரயில்வே மேம்பாலத்தின் ஒரு பகுதியில் விரிசல் ஏற்பட்டதால், கடந்த ஜன.12-ம் தேதி முதல் போக்குவரத்து தடை செய்யப்பட்டு சேதமடைந்த பகுதியை சீரமைக்கும் பணிகள் நடைபெற்றன. சுமார் 60 நாட்களாக நடைபெற்று வந்த இந்தப் பணிகள் நிறைவடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மார்ச் 12-ம் தேதி முதல் மீண்டும் போக்குவரத்து தொடங்கியது.

இந்நிலையில், இந்தப் பாலத்தையொட்டிய மற்றொரு பகுதியில்(பாலம் முடிவடைந்து சாலையின் சாய்வு தளம் தொடங்கும் இடத்தில்) சிமென்ட் பூச்சு மற்றும் சிமென்ட் பிளாக்குகளில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் பாலம் அருகே சாலை உள்வாங்கி விடுமோ என வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர்.

இதுகுறித்து இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணைய அதிகாரிகளிடம் கேட்டபோது, அவர்கள் கூறியது: ஏற்கெனவே சீரமைக்கப்பட்ட பாலம் அருகிலுள்ள மற்றொரு பாலத்தையொட்டியுள்ள சாய்வுதள சுவரில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இது தொடக்கநிலையில் தான் உள்ளது.

இதை ஐஐடி பேராசிரியர் அழகுசுந்தரம் மற்றும் பொறியாளர்கள் அடங்கிய குழுவினர் ஏற்கெனவே ஆய்வு செய்து முடித்து விட்டனர். இந்த சாலையில் போக்குவரத்தை நிறுத்தாமலேயே இந்த விரிசலை சீரமைக்க முடியுமா என திட்டமிட்டு வருகின்றனர்.

இதுதொடர்பான வல்லுநர்குழு அறிக்கையும் கிடைக்கப்பெற்றுள்ளது. அக்குழு அளித்துள்ள தொழில்நுட்ப பரிந்துரைகளின் அடிப்படையில் சீரமைப்புப் பணிகள் இன்னும் ஓரிரு நாட்களில் தொடங்கும். எனவே வாகன ஓட்டிகள் அச்சப்பட தேவையில்லை என்றனர்.

x