ஜிஎஸ்டி பிரச்சினை: நிர்மலா சீதாராமன் உடனான கலந்துரையாடலில் தமிழக தொழில் அமைப்பினர் பேசியது என்ன?


கோவை: குறுந்தொழில்களுக்கென தனி துறையை ஏற்படுத்த வேண்டும் என மத்திய நிதி அமைச்சருடன் நடந்த கலந்துரையாடலில் கோவை தொழில் அமைப்பினர் வலியுறுத்தினர்.

பல்வேறு தொழில் அமைப்புகளின் நிர்வாகிகளுடன் மத்திய நிதியமைச்சர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவை கொடிசியா வளாகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசினார்.

பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் பேசும்போது, “நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கோவையில் ராணுவ தளவாட பூங்கா அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஏற்று கொடிசியா அமைப்புடன் இணைந்து தொடங்க நடவடிக்கை மேற்கொண்டார். தொடக்கத்தில் ரூ. 2 கோடி நிதியை எதிர்பார்த்த கொடிசியா அமைப்பினருக்கு ரூ.20 கோடி முதல்கட்ட நிதியுதவி அளித்தார்” என்றார்.

தொடர்ந்து, தொழில் அமைப்பினர் பேசியதாவது: கொடிசியா தலைவர் கார்த்திகேயன்: எம்எஸ்எம்இ தொழில் வளர்ச்சிக்கு தொடர்ந்து மத்திய அரசு உதவி வருகிறது. பட்ஜெட்டில் ‘முத்ரா’ திட்டத்தின்கீழ் சொத்து பிணையமின்றி கடனுதவி பெறும் உச்சவரம்பு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.20 லட்சமாக அதிகரித்தது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வரவேற்கத்தக்கவை.

தமிழகத்தில் மொத்தம் 40 லட்சம் குறுந்தொழில்முனைவோர் உள்ளனர். இவர்களில் 20 லட்சம் நிறுவனங்கள் தான் ‘உதயம்’ திட்டத்தின்கீழ் பதிவு செய்துள்ளனர். நிதியுதவி திட்டத்தின்கீழ் பல நிறுவனங்கள் பயன் பெற வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும். சூரியஒளி மின்உற்பத்தி திட்டத்தின்கீழ் கடனுதவி பெறும் உச்சவரம்பை குறைக்கவேண்டும்.

தென்னிந்திய மில்கள் சங்கத்தின் தலைவர் டாக்டர். சுந்தரராமன்: இஎல்எஸ் பருத்தி மீதான வரியை நீக்கியது உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு நன்றி. கடந்த நான்கு மாதங்களாக பருத்தி விலை உயர்வால் ஒட்டுமொத்த ஜவுளி சங்கிலி தொடரிலுள்ள அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இந்திய தொழில் வர்த்தக சபை, கோவை தலைவர் ராஜேஷ் லுந்த்: டெல்லியில் இருந்து ஜிஎஸ்டி, வருமான வரி உள்ளிட்ட பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் நேரடியாக வந்து பல்வேறு தொழில் அமைப்பினரிடம் பிரச்சினைகளை கேட்டறிந்தது மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. ஜிஎஸ்டி உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.

லகு உத்யோக் பாரதி தமிழ்நாடு தலைவர் சிவக்குமார்: ஜாப் ஆர்டர் செய்யும் நிறுவனங்களுக்கு வரியை 5 சதவீதமாக குறைக்க வேண்டும். குறுந்தொழில்களுக்கென தனி துறையை ஏற்படுத்த வேண்டும். நிதி சார்ந்த பிரச்சினைகளுக்கு தீர்வு காண பிரத்யேக சமாதான் திட்டம் செயல்படுத்த வேண்டும்.

‘கொடிசியா’ டிபென்ஸ் இன்னோவேஷன் மற்றும் அடல் இன்குபேஷன் மையத்தின் இயக்குநர் சுந்தரம்: நாட்டின் முதல் முறையாக தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ் தற்போது வரை பல்வேறு தொழில் நிறுவனங்கள் பயிற்சி மேற்கொண்டு பாதுகாப்புத்துறைக்கு பொருட்களை விநியோகம் செய்ய தொடங்கியுள்ளனர்.

தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவ தலைவர் சீனிவாசன்: வங்கி கடனுதவி நல்ல முறையில் கிடைக்கிறது. உணவு பொருட்களுக்கு பல வகை ஜிஎஸ்டி வரி விதிக்கப்படுகிறது. உதாரணமாக இனிப்புக்கு 5 சதவீதம், காரத்துக்கு 18 சதவீதம் என மாறுபடுகிறது. பன்னுக்கு வரி இல்லை. உள்ளே வைக்கப்படும் கிரீமுக்கு 18 சதவீத வரி விதிக்கப்படுகிறது. அனைத்து உணவு பொருட்களுக்கும் சீரான ஜிஎஸ்டி வரி விதிக்க வேண்டும்.

‘சீமா’ தலைவர் மிதுன் ராம்தாஸ்: தேசிய அளவில் பம்ப்செட் தேவையில் கோவை மாவட்ட தொழில் நிறுவனங்கள் 50 சதவீத பங்களிப்பு கொண்டுள்ளன. குஜராத் உள்ளிட்ட மாநிலங்களில் செயல்படும் பல தொழில் நிறுவனங்கள் ஜிஎஸ்டி வரி விதிப்பில் வராமல் செயல்படுகின்றன. இதனால் கோவையில் தயாரிக்கப்படும் பம்ப்செட் பொருட்களின் போட்டித்தன்மை பாதிக்கப்படுகிறது. ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

x