சென்னை: வடசென்னை-3 அனல்மின் நிலையத்தில், வணிக ரீதியான உற்பத்தி விரைவில் தொடங்குவதற்கான இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது.
மின்வாரியம் திருவள்ளூர் மாவட்டம், அத்திப்பட்டில் 800 மெகாவாட் திறனில் வடசென்னை-3 அனல்மின் நிலையம் அமைத்துள்ளது. ரூ.10,158 கோடி மதிப்பிலான இத்திட்டப் பணி கடந்த 2016-ம் ஆண்டு தொடங்கியது.
கடந்த 2020-21-ம் ஆண்டில் மின்னுற்பத்தி தொடங்க திட்டமிடப்பட்டது. ஆனால், பல்வேறு காரணங்களால் இப்பணி தாமதமாகி கடந்த மார்ச் 7-ம் தேதிதான் சோதனை மின்னுற்பத்தி தொடங்கியது. தினமும் சராசரியாக 250 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்ட நிலையில், ஜுன் 27-ம் தேதி முழு திறனான 800 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்பட்டது. பின்னர் அது குறைக்கப்பட்டு தினசரி 500 முதல் 600 மெகாவாட் மின்னுற்பத்தி செய்யப்படுகிறது.
ஒரு மின்நிலையத்தில் சோதனை உற்பத்தி தொடங்கிய பிறகு தொடர்ந்து 72 மணி நேரம் முழு உற்பத்தி செய்ய வேண்டும். அதைத் தொடர்ந்துதான் மின்நிலையம் வணிக ரீதியாக செயல்பட தொடங்கியதாக அறிவிக்கப்படும். ஆனால், வடசென்னை-3 அனல் மின் நிலையத்தில் சோதனை உற்பத்தி தொடங்கி 5 மாதங்கள் ஆகியும் வணிக உற்பத்தி தொடங்கப்படவில்லை.
இதுகுறித்து, மின்வாரிய அதிகாரிகள் கூறுகையில், ‘மின்வாரியத்துக்கு சொந்தமான ஆறு மின் நிலையங்களில் வடசென்னை-3 தான் அதிக திறன் கொண்டது. மிகப் பெரிய கட்டமைப்பை கொண்ட அந்த மின்நிலையத்தில் ஒவ்வொரு சாதனங்களையும் பரிசோதிக்க வேண்டி உள்ளது.
இதனால், மின்னுற்பத்தி தொடங்கிய நிலையில் சில பிரச்சினைகள் கண்டறியப்பட்டு சரிசெய்யப்பட்டு வருகிறது. தற்போது அனைத்து சோதனைகளும் இறுதி கட்டத்தை எட்டியுள்ளன. விரைவில் வணிக உற்பத்தி தொடங்கப்படும்” என்றனர்.