திருவள்ளூரில் 152 ஏக்கரில் திரைப்பட நகரம் அமைக்க விரைவில் பணிகள் தொடக்கம்: அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தகவல்


சென்னை: சென்னை தரமணியில் உள்ள தமிழ்நாடு அரசு எம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தில் ரூ.7 கோடியில் குளிரூட்டப்பட்டு சீரமைக்கப்பட்ட படப்பிடிப்பு தளம், மாணவர்கள் உணவருந்தும் அறை, படப்பிடிப்புக்கான நீதிமன்றம், சிறைச்சாலை உள்ளிட்ட பல்வேறு கட்டிடப் பணிகள், புதிய படப்பிடிப்பு தளங்கள் அமைக்கப்படும் இடங்கள் ஆகியவற்றை தமிழ் வளர்ச்சி, செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் நேற்று ஆய்வு செய்தார்.

பிறகு, செய்தியாளர்களிடம் அமைச்சர் சாமிநாதன் கூறியதாவது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பின்படி, திருவள்ளூர் மாவட்டத்தில் சுமார் 152 ஏக்கரில் ரூ. 500 கோடி மதிப்பில் திரைப்பட நகரம் உருவாக்கப்பட உள்ளது. அந்த இடத்தை அமைச்சர் உதயநிதியும் பார்வையிட்டுள்ளார். திரைப்பட நகர் அமைப்பதற்கு உகந்த இடமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதற்கான நிலம் மாற்று பணிகள் நடந்து வருகிறது, விரைவில் பணிகள் தொடங்க உள்ளன என்றார்.

செய்தித் துறை செயலர் வே.ராஜாராமன், துறை இயக்குநர் இரா.வைத்திநாதன், அரசுஎம்ஜிஆர் திரைப்படம், தொலைக்காட்சி பயிற்சி நிறுவனத்தின் தலைவர் நடிகர் ராஜேஷ் உடனிருந்தனர்.

x