நடிகர் சத்யராஜின் மகள் திவ்யா சத்யராஜ் ஊட்டச்சத்து நிபுணராக பணியாற்றி வருகிறார். இவர் ‘மகிழ்மதி இயக்கம்’ என்ற பெயரில் தொண்டு நிறுவனம் ஒன்றையும் நடத்திவருகிறார். இந்த அமைப்பின் மூலம், தமிழகத்தில் வறுமைக்கோட்டிற்குக் கீழ் இருக்கும் மக்களுக்கு இலவசமாக ஊட்டச்சத்து நிறைந்த உணவை கடந்த மூன்று வருடங்களாக வழங்கிவருகிறார்.
இந்த நிலையில், அவர் தனியார் மருத்துவமனைகளில் நடத்தப்படும் தேவையற்ற மருத்துவ பரிசோதனைகள் குறித்து நேற்று இரவு வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த வீடியோவில், ”சில தனியார் மருத்துவமனைகள் லாப நோக்கத்துக்கான, தேவையற்ற ரத்தம், ஸ்கேன், எம்ஆர்ஐ பரிசோதனைகளை செய்கின்றனர். நோயாளி குணமடைந்தாலும் கூட, ஓரிரு நாட்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னரே டிஸ்சார்ஜ் செய்யப்படுகின்றனர். இதனால், தனியார் மருத்துவமனைக்குச் சென்றால் நோய் குணமாகும் என்ற எண்ணத்தைவிட பணம் செலவாகும் என்ற எண்ணமே நோயாளிகளுக்கு உருவாகிறது” என்று சொல்லி இருக்கிறார் திவ்யா.
மேலும், நோயாளிகள் வருவாயை உருவாக்கும் இயந்திரங்கள் கிடையாது என்று தனியார் மருத்துவமனைகள் மீது சரமாரி குற்றச்சாட்டுகளையும் அடுக்கியுள்ளார் திவ்யா சத்யராஜ்.
மேலும், “தனியார் மருத்துவமனைகளில் நடக்கும் இந்த பித்தலாட்டம் குறித்து தன்னுடைய மருத்துவ நண்பர்கள் சொன்ன தகவல்களே இவை. எனவே, தனியார் மருத்துவமனைகள் நோயாளிகளை மனிதாபிமானத்துடன் நடத்த வேண்டும்” என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.