சிறை டிஐஜி உள்ளிட்ட 14 பேர் மீதான வழக்கு: வேலூர் சிறையில் சிபிசிஐடி எஸ்.பி. விசாரணை


வேலூர் சிறையில் விசாரணை நடத்த வந்த சிபிசிஐடி போலீஸார்.

வேலூர்: வேலூர் சிறையில் ஆயுள் தண்டனைக் கைதி சிவக்குமார் என்பவரை தனி சிறையில் அடைத்து சித்ரவதை செய்ததாக எழுந்த புகாரின் பேரில், சிறைத் துறை டிஐஜி ராஜலட்சுமி, எஸ்.பி. அப்துல் ரகுமான், ஜெயிலர் அருள்குமரன், டிஐஜியின் மெய்க்காவலர் ராஜு உள்ளிட்ட 14 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

விசாரணை அதிகாரியாக சென்னை சிபிசிஐடி எஸ்.பி.வினோத் சாந்தாராம் நியமிக்கப்பட்டுள்ளார். சேலம் மத்திய சிறைக்கு மாற்றப்பட்ட சிவக்குமாரிடம் நேற்று முன்தினம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், நேற்று வேலூர் மத்திய சிறையில் எஸ்.பி.வினோத் சாந்தாராம் தலைமையிலான சிபிசிஐடி போலீஸார் 13 பேர் நேற்று காலை முதல் மாலைவரை விசாரணை நடத்தினர்.

இதுகுறித்து போலீஸார் தரப்பில் கூறும்போது, "வேலூர் சிறை பெட்ரோல் நிலையம், உணவகம், தோட்டத்தில் 50 நன்னடத்தைக் கைதிகள் பணியில் ஈடுபடுத்தப்படுகின்றனர். அவர்கள் சிறையில் இருந்து வெளியே சென்று,மீண்டும் திரும்பும் நேரத்தைக் கண்காணிக்கும் தனி பதிவேட்டை சிபிசிஐடி போலீஸார் பறிமுதல் செய்துள்ளனர். மேலும், சிறை மருத்துவர் சரவணபாபு, சிவக்குமாருடன் இருந்த சக கைதிகள் அமல்ராஜ், மணிகண்டன் ஆகியோரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர். சிவக்குமார் அடைத்து வைக்கப்பட்டதாக கூறப்படும் தனி சிறையிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது" என்றனர்.

x