விசிக மது ஒழிப்பு மாநாட்டில் அதிமுக பங்கேற்பா? - பழனிசாமி ஆலோசனை: பாஜக, பாமகவுக்கு அழைப்பில்லை


சென்னை/கள்ளக்குறிச்சி/நாமக்கல்: விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மகளிரணி சார்பில் அக். 2-ம் தேதிகாந்தி ஜெயந்தியன்று உளுந்தூர்பேட்டையில் மது, போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்பட உள்ளது.இதில் அதிமுக உள்ளிட்ட அனைத்துக் கட்சிகளும் பங்கேற்கலாம் என்று விசிக தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்திருந்தார். திமுக கூட்டணியில் இருக்கும் விசிக, எதிர்க்கட்சியான அதிமுகவுக்கு அழைப்பு விடுத்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில், மாநாட்டில் பங்கேற்பது தொடர்பாக அதிமுக மூத்த நிர்வாகிகளுடன் பழனிசாமி ஆலோசனை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

தேர்தல் கூட்டணியா? - கள்ளக்குறிச்சி கருணாபுரத்தில் கள்ளச்சாராயத்தால் உயிரிழந்த குடும்பங்களைச் சேர்ந்த 11 பேருக்கு தலா ரூ.10 ஆயிரம் நிவாரண உதவியை விசிக தலைவர்திருமாவளவன் நேற்று வழங்கினார். பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது: மதுவை ஒழிக்க வேண்டும் என்று பாதிக்கப்பட்டவர்கள் வலியுறுத்தியுள்ளனர். மதுவால் மனித சக்தியை இந்தியா இழக்கிறது. எனவேதான், விடுதலை சிறுத்தைகள் கட்சி மது ஒழிப்பு மாநாட்டை கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடத்துகிறது.

இந்த மாநாட்டின் மூலம்அரசியல் ஆதாயம் தேடவில்லை.தேர்தல் கூட்டணி என்பது வேறு, அரசி யல் என்பது வேறு. விசிக அரசியல் நிலைப்பாட்டை பலரும் கூட்டணியுடன் சம்பந்தப்படுத்தி விவாதிக்கிறார்கள். தேர்தல் நேரத்தில்தான் கூட்டணி குறித்து பேச வேண்டும்.

தற்போது மக்கள் பிரச்சினைக்காக குரல் கொடுக்கிறோம். தேசியஅளவில் மதுவிலக்கை அமல்படுத்தவேண்டும் என்று வலியுறுத்துகிறோம். ஜனநாயக சக்திகள் ஒன்றிணைந்து குரல் கொடுக்கும் கோரிக்கை மாநாடு இது. எனவே, கூட்டணிக்குத் தலைமை வகிக்கும் திமுகவும், மது விலக்கில் எங்கள் நிலைப்பாடு கொண்ட அதிமுகவும் பங்கேற்கலாம். எனினும், பாமக, பாஜகவுக்கு அழைப்பில்லை. திமுக, அதிமுக, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகள் மாநாட்டில் பங்கேற்கலாம். இவ்வாறு திருமாவளவன் கூறினார்.

மாநாட்டுக்கு ஆதரவு: அன்புமணி- பாமக தலைவர் அன்புமணிநாமக்கல்லில் செய்தியாளர்களிடம் நேற்று கூறியதாவது: மதுவால் கொலை உள்ளிட்ட குற்றச் சம்பவங்கள் அதிகரித்துள்ளன. பள்ளி, கல்லூரி மாணவர்களிடம் கஞ்சா புழங்குகிறது. விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு குறித்து கேட்கிறீர்கள். எங்களுக்கு யாரும் அழைப்பு விடுக்க வேண்டியஅவசியமில்லை.

கடந்த 45 ஆண்டுகளாக மது ஒழிப்பு தொடர்பான போராட்டத்தில் பாமக ஈடுபட்டு வருகிறது. விசிக உள்ளிட்ட கட்சிகள் மது விலக்கை கொள்கை ரீதியாக ஏற்றுக் கொண்டதற்கு பாமகதான் காரணம். மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தெரிவிப்போம். இவ்வாறு அன்புமணி கூறினார்.

x