6 மாதங்களாக விமான சேவை இல்லை: புதுச்சேரி விமான நிலையத்தில் ஆளுநர் ஆய்வு


புதுச்சேரி: ஆறு மாதங்களாக விமானம் வராத சூழலில் புதுச்சேரி விமான நிலையத்தை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். அப்போது, “விமானநிலையத்தை விரிவாக்கம் செய்யவுள்ளோம்- நிலத்தை தமிழகம், புதுச்சேரியில் கையகப்படுத்த ஆராய்ந்து வருகிறோம்” என்றார்.

புதுச்சேரி லாஸ்பேட்டையில் உள்ள விமான நிலையம் புதுப்பிக்கப்பட்டு கடந்த 2013 ஜனவரியில் திறக்கப்பட்டது. 2013 ஜனவரி முதல் விமானங்கள் இயக்கப்பட்டன. புதுச்சேரியில் இருந்து பெங்களூருக்கு விமானங்கள் இயக்கப்பட்டன. பயணிகள் எண்ணிக்கை குறைவாக இருந்ததால் விமான சேவை கடந்த 2014 பிப்ரவரி முதல் நிறுத்தப்பட்டது.

அதைத்தொடர்ந்து கடந்த 2015ம் ஆண்டு ஏப்ரல் 14ம் தேதி முதல் விமான போக்குவரத்து சேவை தொடங்கியது. இந்த விமான சேவையும் முன் அறிவிப்பு ஏதுமின்றி 2015 அக்டோபரில் நிறுத்தப்பட்டது.

மத்திய அரசின் பிராந்திய இணைப்பு திட்டமான உதான் கீழ் விமான சேவை தொடங்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு கடந்த 2017ல் புதுச்சேரியிலிருந்து ஐதராபாத், பெங்களூருக்கு விமான சேவைகள் தொடங்கப்பட்டன. பின்னர் கரோனா காலத்தில் விமான சேவை நிறுத்தப்பட்டது. பின்னர், மீண்டும் விமான சேவை தொடங்கியது. புதுச்சேரி விமான நிலையம் பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்காக கடந்த ஆண்டு ஜூன் மாதம் மூடப்பட்டு விமான சேவைகளும் நிறுத்தப்பட்டன.

இந்த பணிகள் நிறைவடைந்து கடந்த ஆண்டு அக்டோபர் முதல் செயல்படத் தொடங்கின. இந்த நிலையில் புதுச்சேரியிலிருந்து விமானங்களை பெங்களூர், ஐதராபாத்துக்கு இயக்குவதை கடந்த மார்ச் 30ம் தேதியுடன் ஸ்பைஸ்ஜெட் நிறுத்தியது. கடந்த ஆறு மாதங்களாக விமானங்கள் ஏதும் புதுச்சேரியில் இருந்து இயக்கப்படவில்லை.

இதனால் மீண்டும் விமான நிலையத்தை செயல்பாட்டுக்கு கொண்டு வரும் சாத்திய கூறுகள் குறித்து துணைநிலை ஆளுநர் கைலாசநாதன் இன்று நேரடியாக வந்து ஆய்வு செய்தார். காலாப்பட்டு சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் லாஸ்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் வைத்தியநாதன் மற்றும் விமான நிலைய அதிகாரிகள் ஆகியோர் ஆய்வின் மீது உடனிருந்தனர்.

அதைத்தொடர்ந்து ஆளுநர் கூறுகையில், "விமானநிலையத்தை விரிவாக்கம் செய்ய இருக்கிறோம். தற்போது சிறிய ரக விமானங்கள் தான் இறங்க முடியும். போயிங் உட்பட பெரிய விமானங்கள் இறங்கும் வகையில் திட்டமிட்டு வருகிறோம். நிலத்தை கையகப்படுத்த வேண்டும். தமிழகம், புதுச்சேரியில் எவ்வளவு நிலம் தேவை என்பதை முழுவதும் ஆராய்வோம். புதுச்சேரிக்கு எவ்வளவு உபயோகமாக இருக்கும் எனவும் ஆராய்வோம். இதன் மூலம் மக்கள் வேலைவாய்ப்பு, புதுச்சேரிக்கான பயன் தொடர்பாக பார்ப்போம். விமான நிலையம் இங்கேயே இருக்கலாமா அல்லது வேறு இடத்துக்கு கொண்டு செல்லலாமா என்பதையும் பார்ப்போம்" என்றார்.

x