புதுச்சேரியில் விநாயகர் கோயிலை விரிவுப்படுத்த 800 சதுர அடி நிலத்தை தானமாக தந்த பக்தர்!


புதுச்சேரி: புதுச்சேரி அருகே விநாயகர் கோயிலை விரிவுபடுத்த சொந்த நிலத்தை தானமாக வழங்குவதற்கான ஆவணத்தை துணைநிலை ஆளுநர் முன்னிலையில் கோயில் நிர்வாகத்திடம் பக்தர் ஒப்படைத்துள்ளார்.

புதுச்சேரி வில்லியனூர் கணுவாப்பேட்டை பகுதியை சேர்ந்தவர் சக்திவேல் (50). பக்தர். சமூக ஆர்வலர். இவருக்கு கீழ்சாத்தமங்கலம் பகுதியில் 800 சதுர அடி நிலம் உள்ளது. அப்பகுதியில் உள்ள அருள்மிகு சக்தி கனக விநாயகர் கோயிலை விரிவுப்படுத்திட கோயில் நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.

ஆனால், போதிய நிலம் இல்லாததால் விரிவாக்கப் பணி நிறுத்தப்பட்டிருந்தது. மேலும், கோயில் அருகேயுள்ள நிலங்களை வாங்கும் பணியிலும் நிர்வாகம் ஈடுபட்டிருந்தது.

இந்த நிலையில், கோயில் கட்டுமானப் பணி நடைபெறாலிருப்பதை அறிந்த சக்திவேல், கோயில் அறங்காவலர் குழு நிர்வாகிகளைச் சந்தித்து, கோயில் விரிவாக்கத்துக்காக தானமாக தனது நிலத்தை தருவதாகக் கூறினார்.

அதன்படி சக்திவேல் தனது நிலத்தை அருள்மிகு சக்தி கனக விநாயகர் கோயில் பெயருக்கு தானமாக செட்டில்மெண்ட் எழுதி வைத்தார். தான் எழுதிய தானபத்திரத்தை புதுவை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் முன்னிலையில் ராஜ்நிவாஸில் வைத்து கோயில் நிர்வாகத்தினரிடம் அவர் வழங்கினார்.

கோயிலுக்கு நிலத்தை தானமாக வழங்கி ஆவணத்தை ஒப்படைத்த சக்திவேலை, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் பாராட்டினார். அப்போது பல கோயில் நிலங்களை தான் பாதுகாக்க போராடி வென்றதாக தனது அனுபவத்தை பகிர்ந்தார்.

x