நடிகர் ரஜினிகாந்த் இமயமலைக்குப் புறப்பட்டு சென்றிருந்த நிலையில், தனது ஆன்மிக பயணத்தை முடித்துக் கொண்டு தமிழகம் திரும்புவார் என எதிர்பார்த்த நிலையில் இன்று திடீரென ஜார்கண்ட் மாநில ஆளுநர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்து பேசியுள்ளது அவரது ரசிகர்களிடையே மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே இமயமலைக்கு புறப்பட்டு சென்ற ரஜினிகாந்த், அங்கு ஒரு வார காலம் தங்கி இருந்து பல்வேறு ஆன்மிக தலங்களுக்கு சென்று வழிபட்டார்.
ரஜினிகாந்தின் இமயமலை பயணம் நேற்றுடன் முடிவடைந்த நிலையில், சென்னை திரும்புவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அவர் ஜார்க்கண்ட் மாநிலத்திற்கு சென்று விட்டார். அங்கு ஆளுநராக பதவி வகித்து வரும் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் தமிழக பாஜக தலைவர் சி.பி.ராதாகிருஷ்ணனை சந்தித்துள்ளார். ராஞ்சியில் உள்ள ஆளுநர் மாளிகையில் இந்த சந்திப்பு நிகழ்ந்துள்ளது.
ரஜினியுடனான சந்திப்பின் போது எடுத்த புகைப்படங்களை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள சி.பி.ராதாகிருஷ்ணன், இதுகுறித்து “என்னுடைய நெருங்கிய நண்பர், இந்தியாவின் தலைசிறந்த நடிகர், சிறந்த மனிதர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களை மரியாதை நிமித்தமாக நேற்று ராஜ்பவனில் சந்தித்தேன். ஜார்க்கண்ட்டிற்கு அவரை மனதார வரவேற்கிறேன்’’ என பதிவிட்டு உள்ளார்.
ஜார்கண்டில் உள்ள தனது குருவின் ஆசிரமத்திற்கு செல்வதற்காக ரஜினி வந்த போது நேற்று இந்த சந்திப்பு நடந்துள்ளது. இது முழுக்க முழுக்க மரியாதை நிமித்தமான சந்திப்பு என அவர் குறிப்பிட்டுள்ளார்.