மதுரை: கீழத்தூவல் கிராமத்தில் நடைபெறும் ஐவர் நடுகல் வழிபாட்டில் ஆப்பநாடு மறவர் கிராமத்தினர் பங்கேற்க அனுமதி கோரிய வழக்கில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் பதிலளிக்க உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக ஆப்பநாடு மறவர் சங்க செயலாளர் குணசேகர பாண்டியன், உயர்நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், ‘கடந்த 1957ம் ஆண்டுகளில் காங்கிரஸ் மற்றும் ஃபார்வர்டு பிளாக் கட்சியினர் இடையே அரசியல் கலவரம் நடைபெற்றது. இந்த கலவரத்தில் கீழத்தூவல் கிராமத்தில் 1957 செப்டம்பர் 14-ல் ஃபார்வர்ட் பிளாக் கட்சியை சேர்ந்த தவசியாண்டி, ஜெகநாத், சிவமணி, சித்திரவேலு, முத்துமணி ஆகியோர் துப்பாக்கியால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
இதையடுத்து கீழத்தூவல் கிராமத்தில் ஒவ்வொரு ஆண்டும் செப். 14-ம் தேதி 5 பேர் நினைவாக அவர்கள் சுட்டுக்கொல்லப்பட்ட இடத்தில் நடுகல்கள் நடப்பட்டு ஆதித்தமிழர் முறைப்படி பொங்கல் வைத்தும், குலவை போட்டும், கும்மிப்பாட்டு பாடியும் வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.
இந்த வழிபாட்டில் கிராமத்தினர், சுற்றுவட்டாரத்தினர், அகில இந்திய ஃபார்வர்டு பிளாக் கட்சித் தலைவர்கள் பங்கேற்பர். 2012 வரை வழிபாடு அமைதியாக நடைபெற்று வந்தது. அதன் பிறகு ஐவர் நினைவு நிகழ்வில் கீழத்தூவல் கிராமத்தினர் தவிர மற்றவர்களை அனுமதிக்க போலீஸார் மறுத்து வருகின்றனர்.
ஆப்பநாடு மறவர்கள் பெரும்பாலானோர் ராமேஸ்வரம், மதுரை, காரைக்குடி, திருச்சி உட்பட பல்வேறு நகரங்களில் வாழ்ந்து வருகின்றனர். அவர்களும், அகில இந்திய ஃபார்வார்ட் பிளாக் இயக்கத் தலைவர்களையும் வழிபாட்டில் அனுமதிக்க வேண்டும்.
எனவே, ஆப்பநாடு மறவர் சங்கத்தின் வடக்கு மாகாணத்தின் தாய் கிராமமான கீழத்தூவல் கிராமத்தில் செப். 14-ல் நடைபெறும் நடுகல் மரியாதை, பொங்கல், கும்பிப்பாட்டு வழிபாட்டு நிகழ்வில் மற்ற மறவர் கிராமங்களிலிருந்து உறவினர்கள், ஃபார்வர்டு பிளாக் இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் சொந்த வாகனங்களில் வரவும், பங்கேற்கவும் அனுமதி வழங்க உத்தரவிட வேண்டும்’ எனக் கோரி இருந்தார்.
இந்த மனு நீதிபதி கே.முரளி சங்கர் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் கே.நீலமேகம் வாதிட்டார்.
அரசு தரப்பில், “நடுகல் மரியாதை நிகழ்வுக்கு அனுமதி வழங்க முடியாது. தற்போது ராமநாதபுரத்தில் இரு குரு பூஜைகள் நடைபெற்று வருகிறது. எனவே, காவல்துறை பாதுகாப்பு வழங்குவதில் சிரமம் ஏற்படும். சட்டம் - ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்பதால் அனுமதி வழங்கக் கூடாது” எனக் கூறப்பட்டது.
இதையடுத்து நீதிபதி, மனு தொடர்பாக ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பதிலளிக்க உத்தரவிட்டு விசாரணையை செப்.13-க்கு ஒத்திவைத்தார்.