“ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரூருக்கு வாய்ப்பு மறுப்பு” - பாஜக மீது ஜோதிமணி எம்.பி குற்றச்சாட்டு


ஜோதிமணி எம்.பி | கோப்புப் படம்

கரூர்: ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரூருக்கு வாய்ப்பு மறுத்து தமிழகத்திற்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது என மத்திய அரசு மீது ஜோதிமணி எம்.பி. குற்றம்சாட்டினார்.

இது தொடர்பாக இன்று கரூரில் செய்தியாளர்களிடம் பேசிய ஜோதிமணி கூறியதாவது: "கரூர் வேளாண்மை கல்லூரிக்கான கட்டிடப் பணிகள் விரைவில் தொடங்கும். கரூர் பேருந்து நிலைய கட்டுமானப் பணி தொடர்பான வழக்கு நீதிமன்றத்தில் உள்ளது. இதுதொடர்பான நடவடிக்கைகளை மாநகராட்சி நிர்வாகம் மேற்கொண்டு வருகிறது. விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது ஒழிப்பு மாநாடு சமூக நடவடிக்கையை ஊக்கப்படுத்த வேண்டும். அதன் பின்னால் இருக்கும் அரசியல் தேவையில்லை.

ராகுல் பொறுப்பான அரசியல் தலைவராகவும், எதிர்க்கட்சித் தலைவராகவும் செயல்படுகிறார். அதனால் ஆளுங்கட்சியினர் பதற்றமடைகின்றனர். இந்த அரசு அம்பானி, அதானிகளுக்கான அரசு. 10 ஆண்டுகளாக இதேநிலை தான் தொடர்கிறது. பாலியல் குற்றவாளிகளை மத்திய அரசு பாதுகாக்கிறது. வெளி நாடுகளுக்குச் செல்லும் பிரதமர் மோடி, தமிழக முதல்வர் போல முதலீடுகளை எதனையும் ஈர்க்கிறாரா? போட்டோ ஷூட் மட்டுமே நடத்துகிறார்.

கரூர் நாட்டின் 4-வது ஏற்றுமதி நகரம். அந்நிய செலவாணியை ஈட்டித் தரும் நகரம். ஆனால், ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் கரூரை சேர்க்க கோரிக்கை வைத்தபோது புறக்கணிக்கப்பட்டது. தற்போது 12 நகரங்கள் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு தேர்வு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்ட நிலையில் கரூரை சேர்க்க கோரிக்கை வைக்கப்பட்டபோதும் வாய்ப்பில்லை என நிராகரித்து விட்டனர். இதன் மூலம் தமிழகத்திற்கு பாஜக தொடர்ந்து துரோகம் செய்து வருகிறது" என்று ஜோதிமணி எம்.பி கூறினார்.

x