முஸ்லிம்களுக்கு 7% இடஒதுக்கீடு கோரி நவ.16-ல் சென்னையில் எஸ்டிபிஐ பேரணி


திருச்சியில் நடைபெற்ற மாநில செயற்குழுக் கூட்டத்தில் பேசுகிறார் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக்.

திருச்சி: திருச்சி விமான நிலையம் பகுதியில் உள்ள தனியார் அரங்கில் எஸ்டிபிஐ கட்சியின் மாநில செயற்குழு மற்றும் மாவட்ட தலைவர்கள், பொதுச் செயலாளர்கள் கூட்டம் அக்கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் தலைமையில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாநில துணைத் தலைவர் அப்துல் ஹமீது, பொதுச்செயலாளர்கள் அகமது நவவி, நிஜாம் முகைதீன், அச.உமர் பாரூக், மாநில அமைப்பு பொதுச் செயலாளர் நஸுருதீன், மாநில செயலாளர்கள் அபு பக்கர் சித்திக், ரத்தினம், ஏ.கே.கரீம், ராஜா ஹூசேன், நஜ்மா பேகம் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். இக்கூட்டத்தில் நடப்பு அரசியல் சூழல், உட்கட்சி தேர்தல், பல்வேறு மக்கள் பிரச்சினைகள் குறித்து விரிவாக ஆலோசனை செய்யப்பட்டது.

இக்கூட்டத்தில், முஸ்லிம் சமூகத்தின் மத உரிமைகளை நசுக்கும், தீய நோக்கத்துடனும், வக்ஃப் சொத்துக்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரை வார்க்கும் எண்ணத்துடனும் கொண்டுவரப்பட்டுள்ள வக்ஃப் சட்டத் திருத்தத்தை திரும்பப் பெற வேண்டும். மக்களின் கடும் எதிர்ப்பையும் மீறி விளைநிலங்கள், குடியிருப்புகளை அழித்து காஞ்சிபுரம் அடுத்த பரந்தூர் அருகே 13 கிராமங்களை உள்ளடக்கி இரண்டாவது பசுமை விமான நிலையம் அமைக்க மத்திய, மாநில அரசுகள் திட்டமிட்டுள்ளது.

கார்ப்பரேட்டுகளின் நலனுக்காக விளை நிலங்களை அழித்து, சொந்த மாநில மக்களை அவர்களது சொந்த ஊரிலிருந்து விரட்டியடித்து, அகதிகளாக்கும் இத்திட்டத்தை மத்திய,மாநில அரசுகள் கைவிட்டு, மாற்று வழியில் திட்டத்தை செயல்படுத்த முன்வர வேண்டும். தமிழகத்தில் போதுமான நிரந்தர நெல் கொள்முதல் நிலையங்களையும், குடோன்களையும் அமைக்கும் செயல் திட்டத்தை தமிழக அரசு செயல்படுத்தி விவசாயிகளின் வாழ்வாதாரத்தை காக்க நடவடிக்கை எடுப்பதோடு, நெல் கொள்முதல் நிலையங்களில் தலைவிரித்தாடும் லஞ்சத்தை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு எதிராக தமிழகம் முழுவதும் எஸ்டிபிஐ கட்சி போராட்டத்தை முன்னெடுக்கும்.

முஸ்லிம்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் போன்ற சிறுபான்மை சமூகங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரம் மற்றும் தாக்குதல்கள் நாடு முழுவதும் அதிகரித்து வருகின்றன. சிறுபான்மை சமூகங்கள் நாட்டில் பாதுகாப்பற்ற நிலையில் வாழ்கின்றனர். கும்பல் கொலைகள், வீடுகள், மஸ்ஜித்கள் உள்ளிட்ட முஸ்லிம்களின் சொத்துக்கள் புல்டோசர் செய்யப்பட்டு தகர்க்கப்படுகின்றன. மாட்டிறைச்சியின் பெயராலும் முஸ்லிம்கள் தொடர்ந்து குறிவைத்து தாக்கப்படுகின்றனர்.

ஆகவே, நாட்டில் சிறுபான்மையினரின் உரிமைகள் மற்றும் உயிர்களைப் பாதுகாக்க சிறுபான்மையினர் பாதுகாப்புச் சட்டத்தை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். தமிழகத்திலும் இச்சட்டத்தை இயற்றி சிறுபான்மை பாதுகாப்பில் தமிழகம் முன் மாதிரியாக திகழ வேண்டும். தமிழக அரசுப் பள்ளிகளில் யோகா, தியானம், உடற்கல்வி, நல்லொழுக்கப் பயிற்சி என பல வழிகளில் பல மதவாத சிந்தனை குழுக்கள் நிகழ்ச்சிகளை நடத்தி வருகின்றன.

பள்ளிக் கல்வித்துறையில் தொடர்ச்சியாக நடைபெறும் சர்ச்சைகள் குறித்தும், அதன் பின்னணியில் உள்ளவர்கள் குறித்தும் விசாரணை நடத்த வேண்டும். கல்விக்கு சம்மந்தம் இல்லாத நிகழ்வுகள் பள்ளிகளில் நடைபெறுவதை உறுதியாக தடுக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

கல்வி மற்றும் வேலைவாய்ப்பில் முஸ்லிம்களின் இடஒதுக்கீட்டை 7 சதவீதமாக உயர்த்தித் தரக் கோரியும், தமிழக சிறைச் சலைகளில் உள்ள முஸ்லிம் ஆயுள் சிறைக் கைதிகளின் விடுதலைக்கான நடவடிக்கைகளை விரைவுப்படுத்தக் கோரியும் நவம்பர் 16 அன்று தலைநகர் சென்னையில் மாபெரும் பேரணியை நடத்துவது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

x