நேருவின் சாதனையை சமன் செய்வாரா... நீண்டகால பிரதமர்கள் வரிசையில் முன்னேறும் மோடி!


நேரு - மோடி

தேசத்தை ஆண்ட பிரதமர்களில், தற்போதைய பிரதமரான நரேந்திர மோடி புதிய சாதனை ஒன்றை படைக்கத் துடிக்கிறார். அதிலும் அவர் முறியடிக்கத் துடிப்பது, அரசியலில் தனது பரம வைரியான நேருவின் சாதனையை!

நாடு மற்றுமொரு ஜனநாயகத் திருவிழாவுக்குத் தயாராகி வருகிறது. மார்ச் மத்தியில் தேர்தல் அட்டவணை வெளியாக, அடுத்த சில வாரங்களில் மக்களவைத் தேர்தலுக்கு வாக்களிக்க மக்கள் தயாராக இருக்கின்றனர். கருத்துக்கணிப்புகள் அனைத்தும் சாதகமாக இருப்பதால், மூன்றாம் முறையும் பிரதமராகும் எதிர்பார்ப்பில் நடப்பு பிரதமர் மோடியும் தயாராகவே இருக்கிறார்.

காத்திருக்கும் கால இடைவெளியில், அரசியல் களத்தில் என்ன வேண்டுமானாலும் நடக்கலாம்; கருத்துக்கணிப்புகளை அடியோடு புரட்டிப்போடும் அதிசயமும் நிகழலாம். எனினும் மூன்றாவது முறையாக பிரதமராவதன் மூலம் மோடி தன்னளவில் அதிசயம் நிகழ்த்த தயாராக இருக்கிறார்.

மோடி - நேரு

அந்த சாதனை தனிப்பட்ட வகையில் மோடிக்கு உவப்பைத் தருவதும் கூட! அரசியல் சித்தாந்த ரீதியில் அடிக்கடி முரண்படும் நேருவின், சாதனை ஒன்றை சமன் செய்ய இருக்கிறார். தேசத்தின் முதல் பிரதமரான பண்டித ஜவஹர்லால் நேரு, தொடர்ந்து 3 முறை இந்தியாவின் பிரதமராக ஆட்சி புரிந்தார். தேசத்தின் விடுதலைக்காக போராடிய மூத்த தலைவர், சுதந்திர தேசத்தின் எதிர்காலத்துக்காக கனவு கண்டவர், ஆட்சிப் பொறுப்பேற்ற கையோடு அவற்றை நிறைவேற்றியவர் எனத் தொடங்கி ஏராளமான சாதனைக்கு சொந்தமானவர் நேரு! அந்த சாதனைகளோடு ஒப்பிடுகையில், தொடர்ந்தார்போல 3 முறை பிரதமராக இருந்த நேருவின் சாதனை வெகு சாதாரணம்.

எனினும் நேருவின் மறைவுக்குப் பின்னர் இதுகாறும் உடைக்கப்படாதிருந்த அந்த சாதனையை தற்போதைய பிரதமர் மோடி உடைக்கக் காத்திருக்கிறார். 1947 ஆகஸ்ட் 15 அன்று சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக பதவியேற்ற நேரு, 1964, மே 27 -ல் தான் காலமாகும் வரை பிரதமராக நீடித்தார். மொத்தம் 16 ஆண்டுகள் 286 நாட்கள் அவர் ஆட்சி புரிந்ததில், தொடர்ச்சியாக 3 முறை பிரதமராக பொறுப்பேற்றார்.

நேருவுடன் இந்திரா காந்தி

இந்தியாவின் பிரதமராக நீண்ட நாள் ஆட்சி புரிந்தவர்களில் நேருவுக்கு அடுத்தபடியாக இந்திரா காந்தி, மன்மோகன் சிங் ஆகியோர் வருகின்றனர். 1966, ஜனவரி 24 முதல் 1977 மார்ச் 24 வரையிலான 11 ஆண்டுகள் 59 நாட்கள் ஆட்சி புரிந்தார் இந்திரா காந்தி. பின்னர் மீண்டும் 1980, ஜனவரி 14 முதல், 1984 அக்டோபர் 31 அன்று படுகொலையாகும் வரையிலான 4 ஆண்டுகள் 291 நாட்கள் பிரதமராக வீற்றிருந்தார்.

இந்த வகையில் மொத்தம் 15 ஆண்டுகள் 350 நாட்கள் அவர் தேசத்தின் பிரதமராக இருந்திருக்கிறார். இடையில் எமர்ஜென்சியை அமல்படுத்தி நாட்டின் கருப்புப் பக்கங்களுக்கு காரணமானதில் மக்களின் அபிமானத்தை இழந்து திரும்பப் பெற்றார். கிட்டத்தட்ட தந்தை நேருவுக்கு இணையான நீண்ட கால பிரதமராக இந்திராவின் சாதனை அமைந்து போனது. ஆனால் தொடர்ந்தார் போன்று 3 முறை பிரதமரான நேருவின் சாதனை இந்திராவுக்கு வாய்க்கவில்லை.

மன்மோகன் சிங் - மோடி

நீண்ட கால பிரதமர் என்ற சாதனையில் தற்போதைய நிலவரப்படி, நேரு, இந்திராவுக்கு அடுத்தபடியாக மற்றொரு காங்கிரஸ் பிரதமரான மன்மோகன் சிங் வருகிறார். 2004, மே 22 முதல் 2014 மே 26 வரையிலான 10 ஆண்டுகள், 4 தினங்கள் மன்மோகன் சிங் ஆட்சிபுரிந்துள்ளார். 2004, 2009 என இருமுறை இந்தியாவின் பிரதமராக பொறுப்பேற்று, தேசத்தின் நீண்ட நாள் பிரதமராக மூன்றாவது இடம் பிடித்தார் மன்மோகன்.

பிரதமர் மோடி

மன்மோகன் சிங் சாதனையை மோடி சமன் செய்வது எளிது. ஆனால் நேரு, இந்திராவின் சாதனையைத் தொட, மோடி 2029 தேர்தலிலும் வென்றாக வேண்டும். எனினும், 2024 தேர்தல் வெற்றி மூலமே, தேசத்தின் தொடர்ந்து 3 முறை பிரதமரான நேருவின் சாதனையை மோடி சமன் செய்ய வாய்ப்புள்ளது. அறுதிப் பெரும்பான்மை, தனிப்பெரும் கட்சியின் ஆட்சி ஆகியவற்றோடு, நேருவின் சாதனையை நிரவியதில் மோடி அநேகமாக அலாதி மகிழ்ச்சி கொள்வார். அதற்கான சாத்தியங்களை காண தேர்தல் முடிவு வரை காத்திருப்போம்.

இதையும் வாசிக்கலாமே...

ரஹ்மானுக்கு இசையும் பணமும் தான் குறிக்கோள்!

மகா சிவராத்திரி : நான்கு கால பூஜைகளும், தரிசிப்பதன் பலன்களும்! வில்வாஷ்டகம் சொல்ல மறக்காதீங்க!

x