“தமிழகத்தில் போதைப்பொருள் விற்பனையை தடுக்க வேண்டும்” - ஜி.கே.வாசன்


உடுமலை: தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. ஆட்சியாளர்கள் இவற்றை தடுத்து மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும் என தமாகா தலைவர் ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையில் இன்று தமாகா நிர்வாகியின் திருமண விழாவில் கலந்து கொண்ட ஜி.கே.வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: "தமிழகத்தில் கொலை, கொள்ளை, திருட்டு, போதைப்பொருள் நடமாட்டம் அதிகரித்துள்ளது. அதனால் மக்கள் அச்சத்தில் உள்ளனர். ஆட்சியாளர்கள் சமூக விரோத சக்திகளை தடுத்து அரசு மீது மக்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டும். திண்டுக்கல் - பொள்ளாச்சி தேசிய நெடுஞ்சாலை திட்டப் பணியில் , திண்டுக்கல் - மடத்துக்குளம் வரை பணி நிறைவடைந்துள்ளது.

மடத்துக்குளம் - பொள்ளாச்சி வரை பணி முடியவில்லை. பல ஆண்டுகளாக இப்பணிகளில் சுணக்கம் ஏற்பட்டுள்ளது. அதனால் கடும் போக்குவரத்து நெரிசல் மற்றும் விபத்து ஏற்படுகிறது. தேசிய நெடுஞ்சாலை ஆணையம் பணிகளை விரைவாக முடிக்க வேண்டும். உடுமலை, பொள்ளாச்சி சுற்று வட்டாரத்தில் இருந்து கல்வி, வேலை வாய்ப்புகளுக்காக ஏராளமானோர் சென்னை, பெங்களூரு நகரங்களை நோக்கிச் செல்கின்றனர்.

ஆனால், சென்னைக்கு ஒரே ஒரு ரயில் மட்டுமே இயக்கப்படுகிறது. எனவே கூடுதல் ரயில் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து விரைவில் மத்திய ரயில்வே அதிகாரிகளை சந்தித்துப் பேச உள்ளேன். உடுமலை சுற்று வட்டாரத்தில் பிஏபி பாசனத்தை நம்பி ஆயிரக்கணக்கான விவசாயிகள் உள்ளனர். தற்போது பாசனத்துக்காக தண்ணீர் திறந்தும் கடைமடைக்கு தண்ணீர் வந்து சேரவில்லை.

அது தொடர்பாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இது தொடர்பாக தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். உடுமலை, பொள்ளாச்சி பகுதிகளில் தென்னை விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. தென்னையில் ”வெள்ளை ஈ” தாக்குதல் காரணமாக தென்னை விவசாயிகள் கடும் இழப்பை சந்தித்தனர். தற்போது வாடல் நோய் தாக்குதலால் மிகப்பெரிய பொருளாதார பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தமிழக அரசு துறை சார் நிபுணர் குழுவை ஏற்படுத்தி வாடல் நோயை கட்டுப்படுத்த தக்க மருந்து, இடு பொருள்களை மானிய விலையில் வழங்கி தென்னையை பாதுகாக்க வேண்டும்.

நத்தம் வீட்டு மனைகளுக்கான புலவரி படம், கிராம நிர்வாக அலுவலகங்களில் இருந்து ஆன்லைன் மூலம் அறிந்து கொள்வதற்காக 6 மாதங்களுக்கு முன்பே ஆட்சியர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்டது. ஆனால் அவை இன்னும் கணினி மயமாக்கப் படவில்லை. அதனால் வீடுகள் அளவீடு பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன. பொதுமக்கள் ஆவணங்கள் கோரினால் கோப்புகள் இல்லை என வருவாய்துறையினர் பதில் அளிக்கின்றனர். இது ஏற்புடையது அல்ல.

கணினிமயமாக்கலை விரைந்து முடிக்க வேண்டும். அல்லது அதுவரை மீண்டும் கிராம நிர்வாக அலுவலர்கள் வசமே ஆவணங்களை ஒப்படைக்க வேண்டும். ஆசிரியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி நடைபெற்ற போராட்டம் நியாயமானது, அதற்கு தமிழக அரசு முக்கியத்துவம் அளிக்க வேண்டும். பூரண மதுவிலக்கு தமாகாவின் முதலாவது கொள்கை.அக்கொள்கையில் தனித் தன்மையுடன் இயங்குகிறோம். மது விலக்கு கோரி 1 கோடி பேரிடம் கையெழுத்து பெற்று ஆளுநரிடம் அளித்துள்ளோம்"என்று ஜி.கே.வாசன் கூறியுள்ளார்.

x