பாமக, பாஜகவை மது ஒழிப்பு மாநாட்டுக்கு அழைக்காதது ஏன்? - திருமாவளவன் விளக்கம்


விழுப்புரத்தில்  தியாகி இமானுவேல் சேகரன் உருவப்படத்துக்கு விசிக தலைவர்  திருமாவளவன் மலர்தூவி அஞ்சலி செலுத்தினார்.

விழுப்புரம்: “அரசியல் வேறு, மது ஒழிப்பு என்பது வேறு என்று மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் கிடைக்கும் வருமானத்தைக் கொண்டு அரசு ஆட்சி நடத்துவதாக கூறுவது ஏற்புடையதல்ல. மக்களுடைய கோரிக்கையை தான் நாங்கள் முன் வைக்கிறோம். இதை ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம். அனைவரும் கை கோத்தால்தான் முடிவு எட்டப்படும்,” என்று விசிக தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார்.

மேலும், “பாஜகவுக்கும் பாமகவுக்கும் தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சிகள் என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை” என்று அவர் விளக்கம் அளித்தார்.

விழுப்புரத்தில் தியாகி இமானுவேல் சேகரனின் 67-ம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு இன்று (செப்.11) விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவன், இமானுவேல் சேகரன் புகைப்படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர் கூறியது: “இமானுவேல் சேகரனுக்கு மணி மண்டபம் அமைக்க சட்டமன்றத்தில் வலியுறுத்தப்பட்டது. அதன்படி, மணிமண்டபம் அமைக்க அரசானை வெளியிடப்பட்டதற்கு அரசுக்கு நன்றியை தெரிவித்து கொள்கிறேன். மது, போதை பொருள்களை ஒழிக்க காலங்காலமாக போராடி வருகிறோம். பவுத்தத்தை தழுவியர்கள் பின்பற்ற வேண்டிய 22 கொள்கைகளில் மதுவை தொடக்கூடாது என்பதும் ஒன்று.

மது ஒழிப்பு போராட்டம் என்பது தமிழகத்தில் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. மதுவை ஒழிக்க மகளிரின் குரல் ஒலிக்க வேண்டுமென்பதால் மது போதை ஒழிப்பு மாநாடு நடத்தப்படுகிறது. கட்சி அரசியல் என்பது வேறு. சமுகம் மக்கள் நலன் சார்ந்த அரசியல் வேறு . மதுவை ஒழிக்க அனைவரும் எங்களுடன் போராட வேண்டும். மக்கள் நலன் சார்ந்து செயல்பட வேண்டியுள்ளதால் அனைவரும் இணைந்து மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்க வேண்டும். திமுகவுக்கும், அதிமுகவுக்கும் மதுவை ஒழிக்க வேண்டும் என்ற கருத்துள்ளபோது படிப்படியாக தமிழகத்தில் ஏன் மதுவிலக்கை கொண்டு வர இயலாது?

இந்தி திணிப்பு, நீட் எதிர்ப்பு போன்றவைகளில் தமிழகம் முதன்மையாக இருக்கும் போது தமிழகம் ஏன் மது ஒழிப்பில் முதன்மையாக இருக்க கூடாது? மது ஒழிப்புக்கு அறை கூவல் விடுப்பது மதுவை ஒழிக்க மட்டுமே இது 2026-ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலை முன்னிறுத்தியது இல்லை. அரசியல் வேறு மது ஒழிப்பு என்பது வேறு என்று மதுக்கடைகளை வைத்து கொண்டு அதன் மூலம் வருமானத்தை கொண்டு அரசு ஆட்சி நடத்துவது என்று கூறுவது ஏற்புடையதல்ல. மக்களுடைய கோரிக்கையை தான் முன் வைக்கிறோம். இதை ஒரு கட்சியின் கோரிக்கையாக பார்க்க வேண்டாம் எல்லோரும் கை கோத்தால் தான் முடிவு எட்டப்படும்.

கள்ளச் சாராய புழக்கம் இன்னும் இருக்கிறது. பள்ளி வரை போதை பொருள் பழக்கம் உள்ளது . பெண்களுக்கு எதிரான குற்றங்கள் அனைத்தும் போதை பொருட்களில் அடிமையானவர்களால் நடைபெற்றுள்ளது. போதை என்பது அமைதியாக நடைபெறும் பேரழிவாகும். மதுக்கடைகளை மூடினாலே நல்லது நடக்கும் என பொதுமக்கள் நம்புகிறார்கள் . தேர்தல் அரசியல் மற்றும் கூட்டணி அரசியலோடு மது ஒழிப்பு மாநாட்டினை முடிச்சி போட வேண்டாம். இது எல்லோருக்குமான மது ஒழிப்பு மாநாடு.

கூட்டணியில் இருந்தாலும் பிரச்சினைகளை எதிர்த்து போராடுவோம். அதன்படி அதிமுக மது ஒழிப்பு மாநாட்டில் பங்கேற்று மேடையில் பேசலாம். பாஜகவுக்கும் பாமகவுக்கும் தான் நாங்கள் அழைப்பு விடுக்கவில்லை. அவர்கள் மதவாத, சாதியவாத கட்சிகள் என்பதால் அவர்களுக்கு அழைப்பு விடுக்கவில்லை. எப்போதும் அவர்களுடன் இணைய மாட்டோம். தமிழக வெற்றிக் கழகத்தைதொடங்கியுள்ள நடிகர் விஜய்யும் இந்த மது ஒழிப்பு மாநாட்டில் கலந்து கொள்ளலாம். தமிழகம் கல்விக் கொள்கையில் சிறந்து விளங்குவதாக கொள்கை எதிரிகளாக உள்ள பாஜக அமைச்சரே கூறியிருக்கிறார், என்று அவர் கூறினார்.

இதனிடையே, விசிக நடத்தும் மது ஒழிப்பு மாநாடு தொடர்பான கேள்விக்கு பதிலளித்த பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ், “எங்களுக்கு யாரும் அழைப்பும் விடுக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. கடந்த 45 ஆண்டுகளாக பாமக மது ஒழிப்பு தொடர்பாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. மது ஒழிப்பு மாநாட்டை யார் நடத்தினாலும் ஆதரவு தெரிவிப்போம்” என்றார் என்பது கவனிக்கத்தக்கது.

x