காமராஜர் பல்கலை. நிதி நெருக்கடி: அமைச்சர் உதயநிதியிடம் சிண்டிகேட் உறுப்பினர்கள் மனு


மதுரை: மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நிதி நெருக்கடி நிலவுவதாகவும் அதை நிவர்த்தி செய்ய அரசு நிதி வழங்க வேண்டும் எனவும் அமைச்சர் உதயநிதியிடம் சிண்டிகேட் உறுப்பினர்கள் கோரிக்கை மனு அளித்தனர்.

மதுரை காமராஜர் பல்கலைக் கழகத்தில் நிதி நெருடிக்கடி தொடர்கதையாக உள்ளது. இதனால் மாதா மாதம் பேராசிரியர்கள், அலுவலர்களுக்கு சம்பளம், ஓய்வூதியர்களுக்கு ஓய்வூதியம் வழங்குவதில் சிக்கல் உள்ளது. தேர்வு நேரத்தில் மட்டும் அரசு நிதி வழங்குகிறது. இதற்கு முன்பு ஆண்டுக்கு ரூ.58 கோடி வரை அரசு நிதி வழங்கிய நிலையில், தணிக்கை ஆட்சேபனை உள்ளிட்ட காரணங்களால் அதில் பெரும் பகுதி குறைக்கப்பட்டதாகச் சொல்லப்படுகிறது.

தொலை நிலைக் கல்வி, ஆராய்ச்சி பிரிவுகளில் குறைவான மாணவர் சேர்க்கை உள்ளிட்ட காரணங்களால் பல்கலைக்கான வருவாயும் குறைத்துள்ளது. புதிய துணைவேந்தர் நியமிக்கப்படாததால் நிதி வருவாயை பெருக்க நிர்வாகத்தால் தகுந்த முயற்சி எடுக்க முடியவில்லை.

இந்நிலையில் பல்கலைக்கான நிதியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் வலியுறுத்தி மதுரையில் நலத்திட்ட உதவிகள் வழங்க வந்த அமைச்சர் உதயநிதியிடம் பல்கலை சிண்டிகேட் உறுப்பினர்கள் நேற்று முன்தினம் கோரிக்கை மனு அளித்தனர்.

அம்மனுவில், "காமராஜர் பல்கலை. தொடர்ந்து நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இதனால் பேராசிரியர்கள், அலுவலர்கள், ஓய்வூதியர்களுக்கு சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியாத நிலை நீடிக்கிறது. ஆகவே, பல்கலைக்கழகத்துக்கு போதிய நிதி வழங்கவும் நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்கவும் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்" என மனுவில் வலியுறுத்தப்பட்டுள்ளது.

இது குறித்து சிண்டிக்கேட் உறுப்பினர் புஷ்ப ராஜ் கூறுகையில், "அமைச்சர் உதயநிதியிடம் பல்கலை. நிதி ஆதாரத்தை பெருக்க கோரிக்கை வைத்துள்ளோம். ஆண்டு தோறும் ரூ.58 கோடி பல்கலைக்கு நிதியாக கிடைத்தது. ஆடிட் ஆட்சேபம் உள்ளிட்ட சில காரணத்தால் அது ரூ.8 கோடியாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர் சேர்க்கை உட்பட பல்கலைக்கான வருவாயை வைத்து 5 மாதங்களுக்கு மட்டுமே சம்பளம், ஓய்வூதியம் வழங்க முடியும். ஆராய்ச்சித் துறைகளில் மாணவர் சேர்க்கை அதிகரிப்பு உள்ளிட்ட சில வழிகளில் வருவாயை பெருக்கலாம்" என்று புஷ்ப ராஜ் கூறினார்.

x