திருச்சி பயிற்சி மருத்துவர்கள் விடுதியில் 50 சிசிடிவி கேமராக்கள்: பாதுகாப்பை அதிகரிக்க நடவடிக்கை


திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள பயிற்சி மருத்துவர்களுக்கான விடுதியில் அமைக்கப்பட்டுள்ள சிசிடிவி கேமராக்கள்.படம்: தீ.பிரசன்ன வெங்கடேஷ்

திருச்சி: பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், திருச்சி கி.ஆ.பெ. விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் உள்ள அவர்களுக்கான விடுதியில் கூடுதலாக 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.

மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தா ஆர்.ஜி.கர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கடந்த மாதம் பயிற்சி பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். இதைக் கண்டித்து நாடு முழுவதும் போராட்டத்தில் ஈடுபட்ட மருத்துவர்கள், பணியில் உள்ள மருத்துவர்களுக்கு போதிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

இதனால், நாடு முழுவதும் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் மருத்துவர்கள் மற்றும் பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொள்ள இந்திய மருத்துவ கவுன்சில் அறிவுறுத்தியுள்ளது. இதைத்தொடர்ந்து, தமிழகத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை சுகாதாரத் துறை மேற்கொண்டு வருகிறது.

அதன்படி, திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் கூடுதல் பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக மருத்துவக் கல்லூரி டீன் (பொறுப்பு) அர்ஷியா பேகம் தெரிவித்தார்.

இதுகுறித்து அவர் ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் கூறியது: திருச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள புறநோயாளிகள் பிரிவு, அறுவை சிகிச்சை அரங்கம், கல்லூரி ஆய்வுக் கூடங்கள், வகுப்பறைகள் உள்ளிட்ட இடங்களில் 333 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. டெல்லியில் உள்ள இந்திய மருத்துவ கவுன்சிலின் அலுவலகத்திலிருந்தும், இந்த கேமரா காட்சிகளை கண்காணிக்க முடியும்.

இந்நிலையில், பயிற்சி மருத்துவர்களின் பாதுகாப்பை அதிகரிக்கும் வகையில், திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்தில் உள்ள கட்டாய குடியிருப்பு மருத்துவ நுழைவு விடுதியில்(சிஆர்ஆர்ஐ) கூடுதலாக 50 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. அடுத்த கட்டமாக, மேலும் 10 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளன என்றார்.

இதுதவிர, மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள பாலியல் தொடர்பான உள்ளக புகார் குழு, விசாரணைக் குழு போன்றவை குறித்த விவரங்கள் அடங்கிய தகவல் பலகைகள் ஆங்காங்கே வைக்கப்பட்டுள்ளன.

x