மதுரை: ஆதார் அட்டைகளை கட்டணமின்றி புதுப்பித்தல் மற்றும் திருத்தம் செய்ய செப்.14-ம் தேதி கடைசி என்பதால், மதுரையிலுள்ள ஆதார் சேவா கேந்திரத்தில் ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர்.
நாட்டில் அனைவருக்கும் ஆதார் அட்டை முக்கிய ஆவணமாக உள்ளது. இந்த அட்டையை புதுப்பித்தல், முகவரி மாற்றம், செல்போன் எண் மாற்றம் உள்ளிட்ட திருத்தங்களை அவ்வப்போது பொதுமக்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதற்காக, இ-சேவை மையம், தபால் நிலையம், வங்கி போன்றவற்றை நாடுகின்றனர்.
மதுரையில் தபால் நிலையம், இ-சேவை என 20-க்கும் மேற்பட்ட மையங்கள் செயல்பட்டாலும், பெரும்பாலான திருத்தங்களுக்கு மதுரை மாவட்ட நீதிமன்றம் எதிரே செயல்படும் ‘ஆதார் சேவா கேந்திரா’ என்ற சிறப்பு மையத்தையே அணுக வேண்டியுள்ளது.
இந்நிலையில், செப்.14-ம் தேதி வரை ஆதார் அட்டைகளை கட்டணமின்றி புதுப்பித்தல், திருத்தம் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இ-சேவை உள்ளிட்ட அரசு ஆதார் சேவை மையங்களில் ஏராளமானோர் திரள்கின்றனர். ஆதார் சேவா கேந்திராவில் நேற்று ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் குவிந்ததால், சாலையில் நீண்ட வரிசையில் வெயிலில் காத்திருந்தனர்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், ‘மதுரையில் ஆதார் சேவா கேந்திரா மையத்தில் அனைத்து திருத்தங்களும் விரைவாக மேற்கொள்ளப்படு கின்றன. இதனால் இங்கு மக்கள் அதிகமாக வருகின்றனர். எளிதாக வந்து செல்லும் இடமாக இருந்தாலும், கட்டிட வசதி போதுமானதாக இல்லை. மேலும், கூடுதல் பணியாளர்களை நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும். கட்டணமின்றி புதுப்பித்தல் தேதியையும் நீட்டிக்க வேண்டும்’ என்றனர்.
ஆதார் மைய நிர்வாகிகள் கூறுகையில், ‘கட்டணமின்றி திருத்தம் மேற்கொள்ள குறைந்த நாளே இருப்பதால் ஏராளமானோர் வருகின்றனர். மதுரைக்கு கூடுதல் மையம் தேவை என மாவட்ட நிர்வாகத்திடம் வலியுறுத்தி உள்ளோம்’ என்றனர்.