“விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 100 பேருக்கு அரசு வேலை” - அமைச்சர் உதயநிதி தகவல்


காரைக்குடி: விளையாட்டு வீரர்களுக்கான இட ஒதுக்கீட்டில் 100 பேருக்கு அரசுப்பணி வழங்க உள்ளோம் என விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி தெரிவித்துள்ளார்.

முன்னாள் முதல்வர் கருணாநிதி நூற்றாண்டு விழாவையொட்டி, காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தில் ஊராட்சி களுக்கு விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் விழா நடைபெற்றது. ஆட்சியர் ஆஷா அஜித் தலைமை வகித்தார். அமைச்சர்கள் கே.ஆர்.பெரியகருப்பன், ராஜகண்ணப்பன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

இதில் அமைச்சர் உதயநிதி, 874 ஊராட்சிகளுக்கு ரூ.5.03 கோடி மதிப்பிலான விளையாட்டு உபகரணங்களை வழங்கினார். தொடர்ந்து, பல்வேறு துறைகள் சார்பில் ரூ.13.15 கோடி மதிப்பிலான 18 முடிவுற்ற பணிகளைத் தொடங்கி வைத்ததுடன், 1,607 பேருக்கு ரூ.34.96 கோடி மதிப்பிலான உதவிகளை வழங்கினார்.

பின்னர் அவர் பேசியதாவது: முதல்வர் கோப்பைக்கான போட்டிகளில் இந்த ஆண்டு ரூ.37 கோடி மதிப்பிலான பரிசுகள் வழங்கப்பட உள்ளன. தமிழக வீரர்கள் சர்வதேச அளவில் சாதனை படைக்கின்றனர். பாரிஸில் நடைபெற்ற பாராலிம்பிக் போட்டியில் 6 தமிழக வீரர்கள் பங்கேற்றனர். இதில் 4 பேர் பதக்கங்களை வென்றுள்ளனர்.

வரலாற்றிலேயே முதல் முறையாக தமிழகத்தில் கேலோ இந்தியா விளையாட்டுப் போட்டிகள் நடந்தன. இதில் 38 தங்கம், 21 வெள்ளி, 39 வெண்கலம் என 98 பதக்கங்களுடன் தமிழகம் முதல் முறையாக 2-ம் இடம் பெற்றது.

விளையாட்டு வீரர்களுக்கான இடஒதுக்கீட்டில் 100 பேருக்கு அரசு வேலைவாய்ப்பு வழங்க உள்ளோம்.விளையாட்டுக்கான வளர்ச்சியை கிராமங்களுக்கும் கொண்டு செல்ல வேண்டும் என்ற நோக்கில் தொடங்கப்பட்டதுதான் கலைஞர் விளையாட்டு உபகரணங்கள் வழங்கும் திட்டம். இவ்வாறு அவர் பேசினார்.

x