பேச்சாளர் மகாவிஷ்ணு மீதான வழக்கு தமிழக அரசுக்கு கரும்புள்ளியாக அமையும்: மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கருத்து


திருவாரூர்: பேச்சாளர் மகாவிஷ்ணு மீதான வழக்கு, தமிழக அரசுக்கு கரும்புள்ளியாக அமையும் என்று மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கூறினார்.

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடியில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று கூறியதாவது: மன்னார்குடியில் உள்ள பல்வேறு அரசுப் பள்ளிகளில் பயின்றுவரும் மாணவ, மாணவிகளுக்கு ஆண்டுதோறும் நோட்டுப் புத்தகம், எழுது பொருட்கள் வழங்கி வருகிறேன்.

இதையொட்டி, நான் மன்னார்குடியில் உள்ள அரசுப் பள்ளிக்கு சென்றபோது, மாவட்ட கல்வி அலுவலரின் அனுமதியின்றி, விநியோகிக்க முடியாது என்று ஆசிரியர்கள் தெரிவித்தனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் பேச்சாளர் மகாவிஷ்ணு என்பவர் சென்னை அரசுப் பள்ளி ஒன்றில் ஆன்மிக உரையாற்றிய விவகாரம் சர்ச்சையானதால், எனக்கு அனுமதி வழங்கவில்லையோ என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

மாணவர்களுக்கு தன்னம்பிக்கை உரையாற்றியவர் மீது வழக்குத் தொடர்வது தவறானது. அவர் ஜாதி, மதம் குறித்தோ, பிற மதங்கள் குறித்தோ தவறாக எதுவும் பேசவில்லை. அவர் மீது வழக்குத் தொடர்வது, தமிழக அரசுக்கு கரும்புள்ளியாக அமையும். எனவே, மகாவிஷ்ணு மீதான நடவடிக்கையை தமிழக அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

விநாயகர் சிலை ஊர்வலத்துக்கு அரசு பல்வேறு கட்டுப்பாடுகளை விதிப்பது, இந்து மதத்துக்கு விரோதமாக அரசு செயல்படுவதை வெளிப்படுத்தி உள்ளது. இவ்வாறு மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் கூறினார்.

x