வெளுத்து வாங்கும் கனமழை; உருக்குலைந்த நீலகிரி! மீட்புப்பணிகள் தீவிரம்


மேட்டுப்பாளையம்-கோத்தகிரி மலைப்பாதையில் பல இடங்களில் நிலச்சரிவு

நீலகிரி மாவட்டத்தில் வெளுத்து வாங்கும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளதால் மலைப்பாதைகளில் நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்கின்றன. மலை ரயில் பாதையில் நிலச்சரிவு ஏற்பட்டு தண்டவாளம் சேதமாகியுள்ளதால் மலை ரயில் சேவை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை துவங்கியதில் இருந்தே நீலகிரி மாவட்டத்தில் அடிக்கடி கனமழை பெய்து வருகிறது. ஓரிரு மணி நேரங்கள் துவங்கி சில நேரங்களில் ஓரிரு நாட்கள் வரை பெய்யும் கனமழையால் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் நிலச்சரிவுகள் அதிகரித்து வருகிறது. கடந்த 8,9 தேதிகளில் நீலகிரியில் பெய்த தொடர் மழையால் மலை ரயில் பாதை கடுமையாக சேதமடைந்தது. இதையடுத்து தீவிர மீட்புப்பணிக்கு பிறகு மலை ரயில் சேவை கடந்த 19ம் தேதி துவங்கியது.

பேருந்துகள் மீது மரங்கள் விழுந்ததால் போக்குவரத்து பாதிப்பு

மீண்டும் 21ம் தேதி மழை துவங்கியதை அடுத்து, மலை ரயில் பாதையில் பாறைகள், மண் ஆகியவை சரிந்து விழுந்ததால் மேட்டுப்பாளையம்- குன்னூர் இடையேயான ரயில் சேவை மட்டும் வருகிற 25ம் தேதி வரை ரத்து செய்யப்பட்டிருந்தது. இதனிடையே நேற்று இரவும் மாவட்டம் முழுவதும் கனமழை வெளுத்து வாங்கியது. இதனால் மலை ரயில் பாதையின் பல்வேறு இடங்களில் மீண்டும் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.

மலைரயில் பாதையில் மரங்கள் விழுந்ததால் மலை ரயில் சேவை முற்றிலும் ரத்து

இதேபோல் மேட்டுப்பாளையம்-கோத்தகிரி இடையேயான மலைப்பாதையில் தொடர் மழையால் பல்வேறு இடங்களில் நிலச்சரிவுகள் ஏற்பட்டுள்ளது. குஞ்சப்பனை அருகே அரசுப்பேருந்து ஒன்று உதகை நோக்கி சென்று கொண்டிருந்த போது, சாலையோரம் நின்றிருந்த மரம், பேருந்தின் மீது விழுந்தது. இதில் நல்வாய்ப்பாக யாருக்கும் காயம் ஏற்படவில்லை. இருப்பினும் இடைவிடாமல் பெய்த கனமழையாலும், பல்வேறு இடங்களில் ஏற்பட்ட நிலச்சரிவால் வாகன போக்குவரத்து தடைபட்டதாலும், மீட்புப்பணிகள் தாமதமானது. இதனால் கொட்டும் மழையில் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் வாகனங்கள் காத்து நிற்கின்றன.

கொட்டும் மழையில் மலைப்பாதையில் நீண்ட வரிசையில் காத்திருக்கும் வாகனங்கள்

மலைப்பாதைகளில் ஆறு போல் மழை நீர் மண் மற்றும் சிறிய கற்களுடன் ஓடி வருவதால், வாகனங்கள் மிகவும் மெதுவாகவே இயக்கப்பட்டு வருகிறது. இதனால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. மலைப்பாதையில் விழுந்துள்ள மரங்கள் மற்றும் கற்களை அகற்றும் பணியில் வருவாய்த்துறையினர் மற்றும் நெடுஞ்சாலைத்துறையினர் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மீட்புப்பணிகள் மாவட்ட நிர்வாகம் தீவிரம்

வரும் நாட்களில் மழை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதால், சேதமும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. இதனால் மாநில பேரிடர் மீட்புப்படையினர், தீயணைப்புத்துறையினர், வருவாய்த்துறையினர், நெடுஞ்சாலைத்துறையினர் ஆகியோர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

தொடர் மழையால் உருக்குலைந்த நீலகிரி

x