தேமுதிக தலைவர் விஜயகாந்த் நலமுடன் உள்ளதாகவும், தேவைப்படும் போது மட்டும் அவருக்கு ஆக்ஸிஜன் கொடுக்கப்படுகிறது என்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
தேமுதிக தலைவர் விஜயகாந்த் கடந்த சனிக்கிழமை இரவு உடல்நலக்குறைவு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வழக்கமான மருத்துவப் பரிசோதனைக்காக சென்றுள்ளதாக தேமுதிக தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் விஜயகாந்துக்கு அவ்வப்போது செயற்கை சுவாசம் அளிக்கப்படுவதாகவும் கூறப்பட்டது.
இந்த நிலையில் கோவை அரசு மருத்துவமனையில் பல்வேறு திட்டங்களை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று தொடங்கி வைத்தார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சரிடம், விஜயகாந்த் உடல்நிலை குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், ‘’ சம்பந்தப்பட்ட மருத்துவமனை நிர்வாகத்திடம் பேசினேன்.
ஏற்கெனவே சிறுநீரகம் மாற்று சிகிச்சை செய்யப்பட்டிருப்பதால், அவருக்கு இருமலும் தொடர் மூச்சு திணறலும் இருந்ததாக மருத்துவர்கள் கூறினார்கள். அதற்காக சிறப்பான சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகிறது. அவசர சிகிச்சை பிரிவில் உள்ளதால் தேவைப்படும் போது செயற்கை சுவாசமும் மற்ற நேரங்களில் நல்ல முறையில் அவர் இருக்கிறார். விரைவில் நலமுடன் வீடு திரும்புவார் என மருத்துவர்கள் தெரிவித்தனர்’’ என அமைச்சர் கூறினார்.