கரூரில் திமுகவா? காங்கிரஸா? தேர்தல் அறிவிப்பிற்கு முன்பே பரிசுப்பொருட்களை விநியோகிக்கும் திமுக?!


கரூரில் திமுகவினர் பரிசுப்பொருட்கள் கொடுப்பதாக புகார்

கரூரில் மக்களவைத் தேர்தல் அறிவிக்கப்படுவதற்கு முன்பே திமுகவினர் வீடு வீடாக சென்று பரிசு பொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

மக்களவைத் தேர்தல் விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், அரசியல் கட்சிகள், இப்போதிலிருந்தே தங்களை தயார்படுத்தி வருகின்றன. தமிழகத்தில் கூட்டணிப் பேச்சுவார்த்தைகள் முழுமையாக இன்னும் நிறைவடையவில்லை. குறிப்பாக திமுக கூட்டணியில் காங்கிரஸ், மதிமுக, விடுதலை சிறுத்தைகள் உள்ளிட்ட கட்சிகளுக்கான தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

இரவு நேரங்களில் திமுகவினர் வீடுவீடாக பரிசுபொருட்கள் விநியோகிப்பதாக குற்றச்சாட்டு

கடந்த மக்களவைத் தேர்தலின் போது திமுக கூட்டணியில் கரூர் மக்களவைத் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டது. இங்கு தற்போது காங்கிரஸ் கட்சியின் ஜோதிமணி மக்களவைத் தொகுதி உறுப்பினராக பதவி வகித்து வருகிறார். இந்த முறை கரூர் தொகுதி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்படுமா, அல்லது திமுக மீண்டும் போட்டியிடுமா என்பது இரு கட்சியினர் இடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

திமுகவினர் வழங்கிய பரிசுப்பொருள் பெட்டி

இந்த நிலையில் கரூர் மக்களவை தொகுதிக்குட்பட்ட பல்வேறு இடங்களில் ’இல்லந்தோறும் ஸ்டாலின் குரல்’ என்ற தலைப்பில் தமிழ்நாடு நிதிநிலை அறிக்கை குறித்தும், திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சிறப்பு திட்டங்கள் குறித்த துண்டறிக்கையுடன் திமுகவினர் வீடு வீடாக சென்று பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே இரவு நேரத்தில் திமுகவினர் வீடு வீடாக சென்று பரிசு பொருட்களை விநியோகம் செய்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக திமுக ஆட்சியில் செய்யப்பட்ட சிறப்பு திட்டங்கள் குறித்த துண்டறிக்கையுடன் அட்டைப் பட்டியில் வைத்து மூன்று சில்வர் சம்படங்கள் வீடு வீடாக விநியோகித்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

திமுகவினர் வழங்கிய பெட்டியில் இருந்த சம்படங்கள்

இந்த அட்டைப்பெட்டியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஆகியோரது புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. மேலும் முன்னாள் அமைச்சர் செந்தில்பாலாஜியின் புகைப்படமும், மின்சாரத்துறை அமைச்சர் என்ற பெயரிலேயே இடம்பெற்றுள்ளது. கரூர் மக்களவைத் தொகுதி எந்த கட்சிக்கு என்பது கூட்டணியில் இதுவரை முடிவு செய்யப்படாத நிலையில், திமுக சார்பில் இவ்வாறு பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு வருவதாக எதிர்க்கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.

x