இன்று இமானுவேல் சேகரன் நினைவு தினம்: ஏடிஜிபி தலைமையில் பாதுகாப்பு ஏற்பாடு தீவிரம்


ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இமானுவேல் சேகரனின் 67-வது நினைவு நாள் இன்று (செப்.11) அனுசரிக்கப்படுகிறது. பரமக்குடி சந்தைபேட்டை பின்புறம் அமைந்துள்ள இமானுவேல் சேகரன் நினைவிடத்தில் அமைச்சர் உதயநிதி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் திமுகவினர் மரியாதை செலுத்துகின்றனர்.

அதேபோல, அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம், அமமுக பொதுச் செயலாளர் டிடிவி.தினகரன், காங்கிரஸ் மாநிலத் தலைவர் செல்வப்பெருந்தகை, நாம்தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி, தமிழக மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் ஜான்பாண்டியன் உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் சமுதாயத் தலைவர்கள் மரியாதை செலுத்த உள்ளனர்.

மேலும், பல்வேறு மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கானோர் வருகைதர உள்ளனர். இதற்காக பல்வேறு கட்டுப்பாடுகளுடன், போலீஸார் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகளைச் செய்துள்ளனர்.

இதற்கிடையே, பரமக்குடியில் நேற்று பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து சட்டம்-ஒழுங்கு ஏடிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதம் ஆய்வு செய்தார். தொடர்ந்து, பாதுகாப்பு நடவடிக்கைகள் தொடர்பாக தென் மண்டல ஐ.ஜி. பிரேம் ஆனந்த் சின்ஹா, ராமநாதபுரம் எஸ்.பி.ஜி.சந்தீஷ் மற்றும் காவல் துறை அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

பின்னர் தென் மண்டல ஐ.ஜி.பிரேம் ஆனந்த் சின்ஹா செய்தியாளர்களிடம் கூறும்போது, "பரமக்குடி மற்றும் சுற்றுப்புறப் பகுதிகளில் 150 கண்காணிப்புக் கேமராக்கள், 5 ட்ரோன் கேமராக்கள் மூலம் காவல் துறையினர் கண்காணிப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர். ஏடிஜிபி தலைமையில், ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் 3 டிஐஜி-க்கள், 20 எஸ்.பி.க்கள், 26 கூடுதல் எஸ்.பி.க்கள் என 6 ஆயிரம் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்" என்றார்.

x