கள்ளக்குறிச்சியில் அக்.2-ல் மது ஒழிப்பு மாநாடு: அதிமுக உள்ளிட்ட கட்சிகள் பங்கேற்க திருமாவளவன் அழைப்பு


சென்னை: மது ஒழிப்பு கொள்கையில் உடன்பாடுள்ள அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் விசிக மாநாட்டில் பங்கேற்கலாம் என அக்கட்சித் தலைவர் திருமாவளவன் அழைப்பு விடுத்தார். சென்னையில் செய்தியாளர்களிடம் மேலும் அவர் கூறியதாவது:

தமிழகத்தில் 2006-24 காலகட்டத்தில் 1,859 பேர் கள்ளச்சாராயத்தால் உயிரிந்துள்ளனர். அண்மையில் கள்ளக்குறிச்சியில் பாதிக்கப்பட்ட மக்களை சந்தித்தபோது, மதுக்கடைகளை மூட வேண்டும் என கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளும் மது ஒழிப்பு கொள்கையை வலியுறுத்தும்போது, மதுக்கடைகளை மூடுவதில் என்ன தயக்கம், முழுமையான மதுவிலக்கு என்பதுதான் தீர்வு என அனைத்து ஜனநாயக சக்திகளும் ஒருங்கிணைந்து குரல்கொடுக்க வேண்டிய தேவை இருக்கிறது. அரசமைப்புச் சட்டம் உறுப்பு 47-ல் கூறியபடி, மதுவிலக்கை தேசிய கொள்கையாக அறிவிக்க வலியுறுத்தி அக். 2-ம் தேதி கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் விசிகவின் மகளிர் விடுதலை இயக்கம் சார்பில் மது மற்றும் போதைப் பொருள் ஒழிப்பு மாநாட்டை நடத்துகிறோம்.

மதுவிலக்கை நடைமுறைப்படுத்தும் மாநிலங்களுக்கு சிறப்புநிதி வழங்க வேண்டும். போதைப்பொருள் நடமாட்டத்தை கட்டுப்படுத்த உறுதியான நடவடிக்கைஎடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைக்கிறோம். தமிழக அரசுக்கு ரூ.47 ஆயிரம் கோடி வருவாய் மது மூலம் கிடைக்கிறது. மது நோயாளிகளாக மக்களை மாற்றிவிட்டு, அவர்களுக்கு நலத்திட்டங்களை அறிவிப்பதில் எந்த பயனும் இல்லை.

எனவே, மதுக்கடைகளை முற்றிலுமாக மூடுவதற்கான கால அட்டவணையை அறிவிக்க வேண்டும். மனிதவளத்தை பாழ்படுத்தும் மதுவை அரசே விற்பது தேசத்துக்கு விரோதமான செயல்.

இதில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்தி, முழு மதுவிலக்கு என்னும் 2016-ம் ஆண்டு தேர்தல் அறிக்கையை உயிர்ப்பிக்க வேண்டும். மது ஒழிப்பில் உடன்பாடுள்ள அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளும் ஒரே மேடையில் இணையவேண்டிய தேவை இருக்கிறது.இதை தேர்தலோடு பொருத்திபார்க்க வேண்டியதில்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். நிகழ்வில், விசிக துணை பொதுச்செயலாளர்கள் எஸ்.எஸ்.பாலாஜிஎம்எல்ஏ, வன்னியரசு, ஆதவ் அர்ஜுனா உடனிருந்தனர்.

முன்னாள் அமைச்சர் டி.ஜெயக்குமார் கூறும்போது, ‘‘மது ஒழிக்கப்பட வேண்டும். மதுவுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்ற வகையில்மாநாடு நடத்துவது வரவேற்கத்தக்கது. மாநாட்டில் அதிமுக பங்கேற்பது பற்றி தலைமை முடிவு செய்யும். திமுக கூட்டணியில் புகைச்சல் ஏற்பட்டிருக்கிறது’’ என்றார்.

பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சவுந்தரராஜன், ‘‘திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் நம்பிக்கை இழந்து கொண்டிருக்கின்றன எனபது தெரிகிறது’’ என தெரிவித்துள்ளார்.

திமுக கூட்டணியில் மாற்றம்? - உதயநிதி ஸ்டாலின் பதில்: விசிக நடத்தும் மாநாட்டுக்கு அதிமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு திருமாவளவன் திடீர் அழைப்பு விடுத்தார். இதனால் கூட்டணியில் மாற்றம் ஏற்படலாம் என அரசியல் கட்சிகள் மத்தியில் சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் சிவகங்கையில் நேற்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் விசிக மாநாட்டில் பங்கேற்க அதிமுகவுக்கு திருமாவளவன் அழைப்பு விடுத்தது பற்றி செய்தியாளர்கள் கேட்டனர். இதற்கு பதிலளித்த உதயநிதி, "விசிக மாநாட்டில் பங்கேற்பது என்பது அதிமுகவின் தனிப்பட்ட விருப்பம். அது குறித்து அவர்களிடம்தான் கேட்க வேண்டும்" என்றார்.

x