உத்தரவாதத்துக்கு மாறாக கிண்டி ரேஸ் கிளப் சீல் இன்னும் அகற்றப்படவில்லை: உயர் நீதிமன்றத்தில் நிர்வாகம் முறையீடு


சென்னை: நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத் துக்கு மாறாக கிண்டி ரேஸ் கிளப்புக்கு வைக்கப்பட்ட சீல் இன்னும் அகற்றப்படவில்லை என உயர் நீதிமன்றத்தில் ரேஸ் கிளப் நி்ர்வாகம் தரப்பில் முறையீடு செய்யப்பட்டது.

கிண்டி ரேஸ் கிளப்புக்கு குத்தகைவாடகை பாக்கி ரூ.730 கோடியை செலுத்தவில்லை. இதனால் குத்தகையை ரத்துசெய்த தமிழக அரசு, உடனடியாக சுவாதீனம் எடுக்கும் வகையில் ரேஸ் கிளப்புக்கு சீல் வைத்தது.

இதை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், குத்தகையை ரத்து செய்த தமிழக அரசு, காலி செய்ய அவகாசம் வழங்காமல் சுவாதீனம் எடுத்து சீல் வைத்ததற்கு கண்டனம் தெரிவித்திருந்தனர்.

அதையடுத்து குத்தகை ரத்து மற்றும் சுவாதீனம் தொடர்பாக தனித்தனியாக நோட்டீஸ் அனுப்பி உரிய அவகாசம் வழங்கி அதன்பிறகு நடவடிக்கை எடுக்கப்படும் எனதமிழக அரசு தரப்பில் உத்தரவாதம்அளிக்கப்பட்டது.

அதையடுத்து தமிழக அரசின் இந்த நடவடிக்கையை எதிர்த்து ரேஸ் கிளப் நிர்வாகம் தரப்பில் உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய நீதிபதிகள் அனுமதியளித்தனர். அதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என தமிழக அரசுக்கும் உத்தரவி்ட்டிருந்தனர்.

3 நுழைவாயில்களுக்கும் சீல் அகற்றம்: இந்நிலையில் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்துக்கு மாறாக ரேஸ் கிளப் நுழைவாயிலில் வைக்கப்பட்ட சீலை இன்னும் அதிகாரிகள் அகற்றவில்லை எனக்கூறி கிளப் நிர்வாகம் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஏ.எல்.சோமையாஜி சார்பில், நீதிபதிகள் எஸ்.எஸ்.சுந்தர், கே.ராஜசேகர் ஆகியோர் அடங்கிய அமர்வில் முறையிடப்பட்டது.

அதற்கு தமிழக அரசு தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் பி.வில்சன்மற்றும் அரசு கூடுதல் தலைமை வழக்கறிஞர் ஜெ.ரவீந்திரன் ஆகியோர் ரூ.730 கோடியை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளதை குறிப்பிட்டு எதிர்ப்பு தெரிவித்தனர்.

அப்போது அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன் ஆஜராகி, ரேஸ் கிளப்புக்கு செல்லும் 3 நுழைவாயில்களுக்கும் வைக்கப்பட்டி ருந்த சீல் அகற்றப்பட்டுவிட்டதாக தெரிவித்தார்.

இதையடுத்து உயர் நீதிமன்றத்தில் அளித்த உத்தரவாதத்தை அரசு மீறியிருந்தால் அதுதொடர்பாக வழக்கு தொடரலாம் என ரேஸ் கிளப் நிர்வாகத்துக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.

x