வருகிறது ஓணம்... தேனி மாவட்டத்தில் பூ விவசாயம் மும்முரம்!


கோட்டூர், சீலையம்பட்டி பகுதிகளில் விளைந்துள்ள செண்டுப்பூக்கள். படம்: என்.கணேஷ்ராஜ்.

சின்னமனூர்: ஓணம் பண்டிகை விற்பனையைக் கணக்கிட்டு தேனி மாவட்டத்தின் பல பகுதிகளிலும் பூ விவசாயம் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

தேனி மாவட்டம் பல்லவராயன்பட்டி, கோட்டூர், பாலார்பட்டி, சீலையம்பட்டி, வேப்பம்பட்டி, புள்ளிமான்கோம்பை, தெப்பம்பட்டி, கன்னியப் பிள்ளைபட்டி, டி.ராஜகோபாலன்பட்டி, கொத்தபட்டி உள்ளிட்ட பல பகுதிகளில் பூ விவசாயம் அதிகளவில் நடைபெற்று வருகிறது. இங்கு விளையும் பூக்கள் ஆண்டிபட்டி, தேனி, சீலையம்பட்டி பூ மார்க்கெட்டுகளுக்கு கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுகிறது. குறுகிய காலத்தில் பலன் தருவதால் பலரும் பூ விவசாயத்தில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இப்பகுதிகளில் கோழிக்கொண்டை, செண்டு பூ, மல்லிகை, துளசி, சம்பங்கி, பட்டன்ரோஸ், பன்னீர் ரோஸ், ரோஜா உள்ளிட்ட பூக்கள் அதிகளவில் விளைவிக்கப் படுகின்றன. குறிப்பாக, சபரிமலை சீசன், பொங்கல் பண்டிகை, திருமண நிகழ்வுகள், ஓணம் உள்ளிட்டவற்றை கணக்கிட்டு கூடுதல் பரப்பளவில் இங்கு பூ விவசாயம் நடைபெறும். வரும் 15ம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளதால் அதை முன்னுறுத்தி பூ விவசாயம் இப்பகுதியில் இப்போது மும்முரமாக நடைபெற்று வருகிறது.

இது குறித்து பூ விவசாயிகள் கூறுகையில், "செடி நட்டு 50 நாளில் செண்டு உள்ளிட்ட பூக்கள் மகசூல் தரும். இரண்டு மாதம் வரை தினமும் பூக்களை பறிக்கலாம். ஓணம் பண்டிகைக்கு கேரளாவில் பூக்களின் தேவை அதிகம் இருக்கும் என்பதால் அதற்கேற்ப செடிகளை நட்டுள்ளோம். தற்போது அறுவடை நடைபெற்று வருகிறது. சில தினங்களில் ஓணத்துக்காக பூ பறிப்பு நடைபெறும்” என்று விவசாயிகள் கூறினார்.

ராஜா

சீலையம்பட்டி பூ மார்க்கெட் வியாபாரி ராஜா கூறுகையில், “ஒவ்வொரு ஆண்டும் ஓணம் பண்டிகைக்காக கேரள வியாபாரிகள் அதிக அளவில் இங்கு வந்து பூக்களைக் கொள்முதல் செய்வர். தற்போது வயநாடு நிலச்சரிவால், அரசு சார்பில் ஓணம் பண்டிகை கொண்டாடப்படவில்லை. இருப்பிலும் பொதுமக்கள், சுற்றுலா சார்ந்த பல்வேறு அமைப்புகள் சார்பில் ஓணம் பண்டிகையை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகள் செய்யப் பட்டுள்ளன. ஆகவே, இந்த வாரக் கடைசியில் பூக்களின் விலை அதிகரிக்க வாய்ப்புள்ளது” என்று வியாபாரி கூறினார்.

x