ஆகஸ்ட் சம்பளம் எப்போது வரும்? - புதுச்சேரியில் 5,000 சொசைட்டி கல்லூரி பேராசிரியர்கள், ஊழியர்கள் காத்திருப்பு


புதுச்சேரி: ஆகஸ்ட் மாத சம்பளம் எப்போது வரும் என செப்டம்பர் தொடங்கி பத்து நாட்களாகியும் புதுச்சேரியிலுள்ள சொசைட்டி கல்லூரியில் பணிபுரியும் 5 ஆயிரம் பேராசிரியர்கள், ஊழியர்கள் காத்துள்ளனர்.

புதுச்சேரி மாநிலத்தில் 2 உயர்கல்வி நிறுவனங்கள் தன்னாட்சி நிறுவனங்களாக செயல்பட்டு வருகின்றன. மாநிலத்தில் தலா ஓர் கலைக் கல்லூரி, தொழில்நுட்பக் கல்லூரி, சட்டக்கல்லூரி, மருத்துவக் கல்லூரி, நுண்கலை கல்லூரி ஆகியவை சொசைட்டி கல்லூரிகள் மூலம் நடத்தப்படுகின்றன. குறிப்பாக, 13 உயர் கல்வி குழுமங்களின் கீழ் 21 கல்லூரிகள் உள்ளன. இங்கு மொத்தமாக 5 ஆயிரம் பேராசிரியர்கள், ஊழியர்கள் பணிபுரிகின்றனர். இவர்களுக்கு கடந்த ஆகஸ்ட் மாத ஊதியம் செப்டம்பர் 10ம் தேதி ஆகியும் இன்னும் தரப்படவில்லை. இதற்காக தினமும் பேராசிரியர்கள் தலைமைச்செயலகத்திலுள்ள சார்புச் செயலர் அலுவலகத்தை அணுகி விவரம் கேட்டுச் செல்கின்றனர்.

இது பற்றி சொசைட்டி பேராசிரியர்கள் தரப்பில் கூறியதாவது:"புதுச்சேரியில் சொசைட்டி கல்லூரிகளுக்கு ஊதியம் முன்பு சரியான நேரத்துக்கு வந்தது. கடந்த 2017ல் அப்போதைய ஆளுநர் கிரண்பேடி மாதம் தோறும் அனுமதி பெற்றுத்தான் ஊதியம் தர வேண்டும் என்று உத்தரவிட்டார். அதன் பிறகு 3 மாதங்களுக்கு ஒரு முறை அனுமதி பெற உத்தரவிடப்பட்டது. ஆனால், அதன் பிறகும் ஊதியம் மாதந்தோறும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதையடுத்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தினோம். அதனால் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை அனுமதி பெற முடிவானது.

அதன்படி மார்ச் மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் அனுமதி பெற வேண்டும் என்று வந்ததால் மாதந்தோறும் ஊதியம் சரியாக வரத் தொடங்கியது. இந்த முறை மக்களவைத் தேர்தலால் இடைக்கால பட்ஜெட் ஐந்து மாதங்களுக்கு தாக்கலானது. அதனால் இரண்டு மாதங்கள் தாமதமாகி மே 23-ல் தான் ஊதியம் கிடைத்தது. தற்போது மீதமுள்ள 7 மாதங்களுக்கு பட்ஜெட் தாக்கலாகியுள்ளது. அதனால் ஆகஸ்ட் மாதம் ஊதியம் செப்டம்பர் 10 நாட்களாகியும் இதுவரை வரவில்லை. இதனால் 5 ஆயிரம் பேர் ஊதியம் தரப்படாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

சொசைட்டி கல்லூரிகளில் சில கல்லூரிகளில் நிதி இருந்ததால் அவர்கள் தற்போது ஊதியம் போட்டு விட்டனர். ஆனாலும் நிதி தட்டுப்பாடுள்ள 17-க்கும் மேற்பட்ட கல்லூரிகளில் பணிபுரிவோருக்கு இன்னும் ஊதியம் வரவில்லை. இதுதொடர்பான கோப்பு தலைமைச்செயலகத்தில் உள்ளது. ஒருவாரத்துக்கு மேல் கோப்பினை ஒருவர் தாமதப்படுத்தக் கூடாது என்று உத்தரவிருந்தும் அதை கடைபிடிப்பதில்லை. தலைமைச் செயலர் ஒப்புதல் தந்தபிறகு முதல்வர், அதைத்தொடர்ந்து ஆளுநருக்கு சென்று ஒப்புதலான பிறகே சம்பளம் கிடைக்கும். இதனால் தினமும் தலைமைச்செயலகம் சென்று விசாரித்து வருகிறோம்" என்று சொசைட்டி பேராசிரியர்கள் கூறினர்.

x