‘இது அண்ணா திமுக… அண்ணாமலை திமுக இல்ல!’ - சீறும் செல்லூரார்


மனிதகுலம் சந்தித்திராத மாபெரும் மாநாடு மதுரையில் நடத்தப்படவிருப்பதில் மட்டற்ற மகிழ்ச்சிகொண்டிருக்கும் செல்லூர் ராஜூ, விழாவைச் சிறப்பிக்க விழுந்து விழுந்து வேலை பார்த்துக்கொண்டிருந்தார். பட்டிமன்றம் முதல் பாட்டுக் கச்சேரி வரை பல்கலை நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் நிலையில், தேவா குழுவின் ஒத்திகை ஒருபக்கம் நடந்துகொண்டிருந்தது. ‘அன்னக்கிளி... அன்னக்கிளி அத்த பெத்த வண்ணக்கிளி’ பாடலை ரசித்துக்கொண்டிருந்த ராஜூ, ‘அண்ணாமல… அண்ணாமல’ எனும் வரி வந்ததும் அதிருப்தியுடன் அங்கிருந்து அகன்று அலுவலகம் புகுந்தார்.

வந்திருந்த செய்தியாளர்களைக் காத்திருக்கச் சொல்லிவிட்டு, கைபேசியில் காணொலிகளைப் பார்க்க ஆரம்பித்தார். நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த உரையின்போது ராகுல் காந்தி ‘பறக்கும் முத்தம்’ தந்த காட்சியைப் பார்த்ததும் பதறியவர், “நாகரிகமற்ற செயல். புரட்சித் தலைவர்லாம் டூயட்லகூட இப்படியெல்லாம் செய்ய மாட்டார்” என்று சொல்லியபடி ஸ்க்ரோல் செய்தார். எம்ஜிஆரின் ‘என்னைவிட்டால் யாருமில்லை’ பாடல் தொடங்கிய நொடியில் செய்தியாளர்கள் நுழைய... செல்லூரார் செல்போனை அவசரமாக ஆஃப் செய்தார்.

“அண்ணாமலையோட அப்படி என்னதான் சார் பிரச்சினை? அவரைப் பார்த்து அதிமுக அச்சப்படுதா?” என்று வந்ததும் வராததுமாக வம்பிழுத்தார் பெண் நிருபர் ஒருவர்.

“நாங்க ஸ்ரெய்ட்டா டெல்லிகூட டீல் பேசுற கட்சிடாம்மா. மோடி ஜி, நட்டா ஜி, அமித் ஜி, பார்லேஜி… இவங்களைப் பார்த்துத்தான் நாங்க பயப்படுவோம். மாநிலத் தலைவரையெல்லாம் மதிச்சு பயப்பட வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லைடா” என்று சென்டிமென்ட் காட்டினார் செல்லூர் ராஜூ.

“இருந்தாலும் இப்ப எல்லாம் இலையும் தாமரையும் ஒண்ணா இருக்குதா, இல்லை பிச்சிக்கிச்சான்னுதான் எல்லாரும் கன்னாபின்னானு கன்ஃபியூஸ் ஆகுறாங்க. எலெக்‌ஷன் வரையாச்சும் அவங்ககூட அலயன்ஸ்ல இருப்பீங்களா?” என்று கேட்டார் இன்னொருவர்.

“தம்பி... இது அண்ணா திமுக… அண்ணாமலை திமுக இல்ல. இங்கே நாங்கதான் கிங்கு” என்று ‘ஜெயிலர்’ ரஜினியாக சீறிய செல்லூரார், “எங்க தலைமையிலதான் கூட்டணி அமையும். நாங்க அனுமதிச்சாத்தான் அண்ணாமலையெல்லாம் பிரச்சாரத்துலயே பேச முடியும்” என்று எகிறினார்.

“அமித் ஷாவுமா?” என்று அடுத்த கேள்வி வந்ததும், “நான் சொன்னது தமிழக பாஜகவைப்பா. டெல்லி பாஜகவை அப்படிச் சொல்ல முடியுமா? அமித் ஜி சொன்னா அமைதியா கேட்டுக்குவோம். ஆனா, அண்ணாமலை இத்தோட ஆயிரத்து ரெண்டாவது தடவை அதிமுகவைக் களங்கப்படுத்திப் பேசியிருக்கார். இன்னும் ஒரு ஆயிரம் தடவை அப்படிப் பேசுனா… இம்மீடியட்டா நாங்க டெல்லிக்கு ஃப்ளைட் புக் பண்ண வேண்டியிருக்கும்” என்றார் ராஜூ.

“திமுக அமைச்சர்களைத் திணறடிக்கிற மாதிரி ‘ஏடிஎம்கே ஃபைல்ஸ்’ வெளியிடுவோம்னு மதுரை பாஜககாரங்க எச்சரிக்கிறாங்களே?” என்று ஒருவர் கேட்க, “எட்டுக் கோடி மக்களின் இதயத்துடிப்பா இருக்கிறா எடப்பாடி எங்க தலைவரா இருக்கார். அவர் நினைச்சா... அண்ணாமலை மேலயே அமலாக்கத் துறை பாயும். டெல்லி மசோதாவரைக்கும் சொல்லிக்கொடுத்த மாதிரி சப்ஜாடா சப்போர்ட் பண்ற எங்களைவிட்டா பாஜகவுக்கு ஒரு நல்ல கட்சி கிடைக்காது. அதனால இவங்கள்லாம் எங்களுக்கு ‘ஜஸ்ட் லைக்’ தான்” என்று செல்லூரார் சிரித்தார்.

“கிருஷ்ணர் வாய்ல உலகம் தெரிஞ்ச மாதிரி செந்தில் பாலாஜி வாய் திறந்தா திமுக ஊழலெல்லாம் தெரியும்னு சொல்லிருக்கீங்களே… கொஞ்சம் அகலமா வாய் திறந்து அதிமுக ஆட்சியில செஞ்ச ஊழலையும் சேர்த்து சொல்லிட்டா?” என்று ஒருவர் கேட்டதும், “எனக்குக் கொஞ்சம் மாநாடு வேலை இருக்கு” என்று எண்டு கார்டு போட்டார் செல்லூர் ராஜூ.

x