அனாதீன நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி விவசாயிகள் உண்ணாவிரதம் @ காஞ்சிபுரம்


காஞ்சிபுரம் கீழ்கதிர்பூரில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துகிறார் வட்டாட்சியர் சத்யா.

காஞ்சிபுரம்: கீழ்கதிர்பூர் கிராமப் பகுதியில் விவசாயிகள் பயிர் செய்து வரும் அனாதீன நிலங்களுக்கு பட்டா வழங்கக்கோரி கீழ்கதிர்பூர் கிராம விவசாயிகள் நலச்சங்கம் சார்பில் இன்று (செப்டம்பர் 10-ம் தேதி) உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

கீழ்கதிர்பூர் கிராமம் மாரியம்மன் கோயில் அருகே நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பல்வேறு விவசாயிகள் கலந்து கொண்டனர். விவசாயிகள் பயன்படுத்தி வரும் அனாதீன நிலங்களுக்கு ரயத்துவாரி பட்டா வழங்க பரிசீலனைகள் நடைபெற்று மாவட்ட நிர்வாகத்திடம் உள்ள கோப்புகளை நில நிர்வாக ஆணையருக்கு அனுப்ப வேண்டும். அனாதீன நிலங்களில் பயிர் செய்து வரும் விவசாயிகளுக்கு கிராம நிர்வாக அலுவலரால் ஏற்கெனவே வழங்கி வந்த அடங்கல் சான்று உண்மை நகல்களை தொடர்ந்து வழங்க வேண்டும். அனாதீன நிலங்களில் பயிர் செய்பவர்களுக்கு பயிர்கடன்கள், உரங்கள், விதைகள், வேளாண் இடுபொருட்கள் வழங்க வேண்டும். விவசாயிகளிடம் உள்ள அனாதீன நிலங்களை கையகப்படுத்தும் முயற்சிகளை கைவிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து உண்ணாவிரதம் நடைபெறும் இடத்துக்கு வந்த வட்டாட்சியர் சத்யா, கோரிக்கைகள் தொடர்பான மனுக்கள், அனாதீன நிலங்களுக்கு பட்டா கேட்பதற்கான தார்மீக ஆவணங்கள் ஆகியவற்றை வழங்கும்படியும், அதனை உயரதிகாரிகளுக்கு அனுப்பி வைப்பதாகவும் தெரிவித்தார். ஆனால், விவசாயிகள் சங்கத்தினர் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

ஏற்கெனவே வட்டாட்சியரிடம் ஆவணங்கள் அளித்து கோட்டாட்சியர் விசாரணை முடிவு பெற்றுள்ளது. மீண்டும் விசாரணை செய்வது தேவையற்றது என்றும் தெரிவித்தனர். அப்போது அங்கு வட்டாட்சியருடன் வந்திருந்த அலுவலர்கள் அந்தக் கோப்புகள் திரும்பிவிட்டதாக தெரிவித்தனர். அதனையே பரிசீலனை செய்து திரும்ப அனுப்புவதாகவும் வட்டாட்சியர் தெரிவித்தார்.

ஆனால், விவசாயிகள் கோட்டாட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர் உள்ளிட்ட அதிகாரிகள் வராமல் போராட்டத்தை கைவிட முடியாது என்று தெரிவித்தனர். இதனைத் தொடர்ந்து சம்பவ இடத்தில் இருந்து வட்டாட்சியர் சத்யா புறப்பட்டுச் சென்றார். விவசாயிகள் உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்தனர்.

x