படோடோபமாகப் புறப்பட்ட பாஜக தலைவர் அண்ணாமலையின் பாதயாத்திரை இடையில் இரண்டு நாட்கள் திடீரென பிரேக்காகி மீண்டும் தொடர்கிறது. யாத்திரையில் கலந்துகொள்வதாக இருந்த மத்திய அமைச்சர் வர இயலாததால் அண்ணாமலையின் யாத்திரை இடையில் நிறுத்தப்பட்டதாக பாஜக தரப்பில் சொல்கிறார்கள். ஆனால், “ உண்மை அதுவல்ல... வேறு இரண்டு முக்கியமான காரணங்களால் தான் யாத்திரையை நிறுத்த வேண்டிய சூழல் ஏற்பட்டது” என்கிறது பாஜகவுக்குள்ளேயே இருக்கும் இன்னொரு தரப்பு.
அண்ணாமலையின் யாத்திரைக்கு பாஜகவினர் முழுமையாக ஒத்துழைக்கவில்லை என்பதும், அதிமுகவுடனான மோதல் தொடர்வதுமே யாத்திரைக்கு பிரேக் விழுந்ததற்கான உண்மைக் காரணங்கள் என்கிறார்கள்.
தமிழகத்தில் மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கும் என்ற எதிர்பார்ப்புடன் ராமேஸ்வரத்தில் இருந்து ஜூலை, 28-ம் தேதி அமித் ஷா தலைமையில் ‘என் மண்... என் மக்கள்’ யாத்திரையை அண்ணாமலை தொடங்கினார். ராமநாதபுரம், சிவகங்கை, புதுக்கோட்டை, மதுரை மாவட்டங்களில் முதல்கட்ட யாத்திரை மேற்கொண்டார். ஆகஸ்ட் 6-ம் தேதி இரவு திருப்பரங்குன்றத்தில் பொதுக்கூட்டம் ஏற்பாடாகி இருந்த நிலையில் திடீரென பொதுக்கூட்டம் ரத்தானது. அடுத்த இரண்டு நாட்களுக்கு யாத்திரையும் நடக்கவில்லை.
அதிமுகவுடனான மோதல் தான் யாத்திரைக்கு தடைவிழுந்தது என்று சொல்லப்படுவதற்கான காரணத்தின் பின்னணியை முதலில் பார்க்கலாம்.
“அண்ணாமலை ஒரு கத்துக்குட்டி” என்று விமர்சித்த அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜுவை, “அரசியல் விஞ்ஞானிக்கெல்லாம் பதில் சொல்லி என் தரத்தை தாழ்த்திக்கொள்ள நான் விரும்பவில்லை” என்று அண்ணாமலை பதிலடி கொடுத்தார். இதைக்கேட்டு அதிமுகவினர் கொதித்துப் போனார்கள். அதிமுகவின் முன்னணித் தலைவர்கள் பலரும் அண்ணாமலையை விமர்சித்தனர். அதற்கு தனது ஆதரவாளர்கள் மூலம் அண்ணாமலை பதிலடி கொடுக்கவும் தவறவில்லை.
அதுமட்டுமல்லாமல், யாத்திரைக்கு நடுவே செய்தியாளர்களிடம் பேசிய அண்ணாமலை, ” நாங்கள் ஓ.பன்னீர்செல்வத்தை ஒதுக்கி வைக்கவில்லை. அனைவரையும் அரவணைத்துச் செல்கிறோம்” என்று அதிமுகவினரை மேலும் வெறுப்பேற்றினார். இதற்கும் அதிமுக தரப்பிலிருந்து கடும் எதிர்ப்புக் கிளம்பியது. முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஜெயக்குமார் உள்ளிட்டோர் அண்ணாமலையைக் கடுமையாகச் சாடினர்.
இந்த விஷயத்தில் ஈபிஎஸ்ஸுக்கும் அண்ணாமலை மீது அடங்காத கோபம். அந்தக் கோபத்தை டெல்லி பாஜக தூதுவர்களிடம் அவர் காட்டியதாகச் சொல்கிறார்கள். இதையடுத்தே அண்ணாமலையை பாஜக தலைமை அவசரமாக டெல்லிக்கு அழைத்தது என்கிறார்கள்.
அண்ணாமலைய டெல்லிக்கு அழைத்ததற்கு இன்னொரு முக்கிய காரணமும் உண்டு என்கிறார்கள். பாதயாத்திரை தொடங்கிய நாளில் இருந்த எழுச்சியும், கூட்டமும் அடுத்தடுத்த நாட்களில் இல்லை. பாஜகவினர் சரியான ஒத்துழைப்பு இல்லாததால் அதிகபட்சம் இரண்டு மூன்று கிலோ மீட்டர் மட்டுமே நடக்கிறார். மற்றபடி வாகனத்தில் தான் பயணத்தைத் தொடர்கிறார் என்பதான தகவல்கள் எல்லாம் உளவுத் துறை மூலமாக டெல்லிக்குப் போனது. மேற்கு மண்டலத்தைச் சேர்ந்த பாஜக பெண் விஐபி-யும் அண்ணாமலை யாத்திரை குறித்த உண்மை நிலவரத்தை தலைமைக்கு அனுப்பியதாகச் சொல்கிறார்கள். இதற்கெல்லாம் விளக்கம் கேட்கவும் அப்படியே அதிமுக விவகாரம் பற்றி பேசவுமே அண்ணமலையை டெல்லிக்கு அழைக்கப்பட்டதாகச் சொல்கிறார்கள்.
டெல்லி செல்வதற்காக பாதயாத்திரையை மதுரையிலேயே நிறுத்திவிட்டு இரவோடு இரவாக சென்னைக்குப் புறப்பட்டார் அண்ணாமலை. ஆனால், "நீங்கள் டெல்லிக்கு வர வேண்டாம், சென்னையிலேயே தங்குங்கள்” என்று அடுத்த உத்தரவு வந்தது. அதன்படி சென்னையில் தங்கியிருந்த அண்ணாமலையை மறு நாள் காலையில் பாஜக மேலிட பொறுப்பாளர் எல்.கே.சந்தோஷ், முன்னாள் மேலிட பொறுப்பாளர் சி.டி.ரவி ஆகியோர் வந்து சந்தித்தனர். இருவரும் டெல்லி அறிவுறுத்திய விஷயங்களை அவரிடம் எடுத்துச் சொன்னதாகத் தெரிகிறது. டெல்லியில் இருந்து பாஜக தலைவர் ஜே.பி.நட்டாவும் அண்ணாமலையிடம் போனில் சில விவரங்களைக் கேட்டிருக்கிறார்.
இந்த ஆலோசனையின் போது, யாத்திரைக்கு பெரிய அளவில் ரெஸ்பான்ஸ் இல்லாதது குறித்து முதலில் விவாதிக்கப் பட்டிருக்கிறது. யாத்திரையில் இணைவதாக பதிவு செய்தவர்கள் எண்ணிக்கை ஒவ்வொரு மாவட்டத்திலும் மூவாயிரத்தில் இருந்து அதிகபட்சம் பத்தாயிரம் வரை இருந்தது. ஆனால், அந்த அளவுக்கு ஆட்கள் வரவில்லை என்கிறார்கள்.
இது ஏன் என்ற கேள்வி எழுந்த போது, கட்சி நிர்வாகிகள் தனக்கு முழுமையாக ஒத்துழைக்க மறுக்கிறார்கள் என்று அண்ணாமலை எடுத்துச் சொல்லியிருக்கிறார். திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டம் மாலை ஏழு மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில், மாலை ஐந்து மணி வரையிலும் முறையான ஏற்பாடுகள் எதுவும் செய்யப்படவில்லை. குறிப்பாக, இதை எடுத்துச் சொன்ன அண்ணாமலை, “கட்சியில் இருக்கும் சீனியர்கள் உள்ளிட்ட சிலர் எனக்கு பேர் கிடைத்துவிடக் கூடாது என திட்டமிட்டு வேலை செய்கிறார்கள்” என்று பகிரங்கமாகக் குற்றம்சாட்டினாராம்.
மாநில நிர்வாகிகளை மாற்ற வேண்டும் என்று இதுவரை 10 முறை பட்டியல் அனுப்பியும் அது கிடப்பில் இருக்கிறது என்பதையும் தனது ஆதங்கத்தின் ஊடே எடுத்துச் சொல்லி இருக்கிறார் அண்ணாமலை. இதையடுத்து, நிர்வாகிகளை மாற்றும் விவகாரத்தில் தலைமை உடனடியாக உங்களுக்கு நல்ல பதில் தரும் என்ற உத்தரவாதத்தை மேலிடப் பிரதிநிதிகள் இருவரும் அண்ணாமலைக்குத் தந்ததாகச் சொல்கிறார்கள். அத்துடன், அண்ணாமலை யாத்திரையை வெற்றி யாத்திரையாக்கும் வேலைகளை தீவிரப்படுத்தவும், அண்ணாமலைக்கு போதிய ஒத்துழைப்பு வழங்கவும் தென் மாவட்ட பாஜக நிர்வாகிகளுக்கு அறிவுத்தல்கள் பறந்ததாகச் சொல்கிறார்கள்.
அடுத்ததாக, அதிமுகவுடனான மோதல் குறித்து பேச்சு திரும்பி இருக்கிறது. இந்த விஷயத்தில் அதிமுக தலைவர்கள் மீதான தனது ஒட்டுமொத்த வருத்தத்தையும் ஆதங்கமாகக் கொட்டித் தீர்த்தாராம் அண்ணாமலை. அதையெல்லாம் கேட்டுக்கொண்ட மேலிட பிரதிநிதிகள், “பாராளுமன்ற தேர்தல் அதிமுகவுக்கு ஒன்றும் பெரிய விஷயமில்லை. நமக்குத்தான் அது முக்கியம். எனவே, அதிமுகவினர் எதிர் கருத்துப் பேச இடமளிக்காமல் அமைதியாகப் போய்விடுங்கள். அதுதான் நமக்கு நல்லது” என்று சொல்லி இருக்கிறார்கள்.
இந்த சமாதானத்தை அரைகுறையாக ஏற்றுக்கொண்ட அண்ணாமலை மீண்டும் ஆகஸ்ட் 9 ம் தேதியிலிருந்து தனது யாத்திரையை புதிய உற்சாகத்துடன் தொடங்கினார்.
“மத்திய பாஜக அரசு கொண்டுவரும் மக்கள் நலன் சார்ந்த மசோதாக்களுக்கு, தமிழகத்தின் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி ஆதரவு தெரிவிப்பதை, பல ஆண்டுகளாக தமிழக மக்களின் உரிமைகளை அடகுவைத்து, காங்கிரஸ் கட்சியின் உற்ற அடிமையாக இருக்கும் கொத்தடிமைக் கூட்டமான திமுக விமர்சிப்பது வெட்கக்கேடானது’’ என ஈபிஎஸ்ஸுக்கு ஆதரவாக அண்ணாமலை பேசியதுகூட சமாதானப்படலத்தின் ரியாக்ஷன் தான் என்கிறார்கள் உள் விவரம் அறிந்தவர்கள்.
அண்ணாமலை இப்படி இறங்கி வந்தாலும், அவரது யாத்திரையில் அதிமுகவினர் யாரும் பங்கேற்க வேண்டாம், எந்த ஆதரவும் தரவேண்டாம் என்று கட்சி நிர்வாகிகளுக்கு அதிமுக தலைமை அறிவுறுத்தி இருப்பதாகச் சொல்கிறார்கள்.
இதுகுறித்து பாஜக தரப்பில் அண்ணாமலையின் பாதயாத்திரை ஒருங்கிணைப்பாளர் அமர் பிரசாத் ரெட்டியிடம் பேசினோம். யாத்திரை தடைபட்டது என்று யார் சொன்னது? முன்னரே அறிவிக்கப்பட்டபடிதான் யாத்திரை நடைபெற்று வருகிறது. ஆறாம் தேதி ஓய்வு என்று அறிவிக்கப்பட்ட நிலையில் அன்று ஓய்வு இல்லாமல் யாத்திரை தொடர்ந்தது. அதனால் மறுநாள் ஒய்வு. 125 பேர் இந்த யாத்திரைக்கான வேலையை தொடர்ந்து செய்து வருகிறார்கள். சுமார் 40 டிகிரி வெயிலில் அவர்கள் பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கும் ஓய்வு கொடுக்கும் விதமாக மறுநாளும் சேர்த்து, அதாவது அடுத்த நாளும் யாத்திரைக்கு ஓய்வளிக்கப்பட்டது.
அதுமட்டுமில்லாமல் நாடாளுமன்றத்தில் முக்கிய நிகழ்வுகள் நடந்து வருகின்றன. அதனால், மத்திய அமைச்சர்கள், பாஜக எம்பி-க்கள் அனைவரும் டெல்லியில் இருக்கவேண்டும் என்று பிரதமர் உத்தரவிட்டிருந்தார். அதனால் திருப்பரங்குன்றம் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சர் மன்சுக் மாண்டவியா கலந்து கொள்ள இயலாத நிலை ஏற்பட்டது. அதனால் அந்தக் கூட்டம் ரத்து செய்யப்பட்டது. மற்றபடி யாத்திரை தடைபட்டது என்ற பேச்சுக்கே வேலையில்லை.
அதுபோல யாத்திரைக்கு கட்சியினர் ஒத்துழைக்கவில்லை என்பதும் உண்மையில்லை. மூத்த தலைவர்கள், தொண்டர்கள், நிர்வாகிகள் என்று அனைத்துத் தரப்பினரும் முழுமனதோடு யாத்திரையில் பங்கெடுத்து வருகிறார்கள். மதுரையில் அதிகாரபூர்வமான கணக்கின்படி 40 ஆயிரம் பேர் பங்கெடுத்துக் கொண்டார்கள். எல்லா இடங்களிலும் தொண்டர்களும் பொதுமக்களும் ஆர்வத்துடன் யாத்திரையில் இணைகிறார்கள். இன்னொரு விஷயம், அதிமுகவுடன் எங்களுக்கு எந்த மோதலும் இல்லை. அதுசம்பந்தமாக டெல்லி தலைமை மாநில தலைவரை அழைத்து கண்டித்ததாக சொல்லப்படும் தகவலிலும் துளியும் உண்மையுமில்லை” என்று விளக்கினார் ரெட்டி.
அண்ணாமலை உள்ளிட்ட பாஜக தலைவர்கள் தற்போது அடக்கி வாசிக்கிறார்கள். அண்ணாமலையின் விருதுநகர் யாத்திரையில் பாஜகவினரும் உள்குத்துகளை ஓரமாக வைத்துவிட்டு திரளான கூட்டத்தைக் கூட்டி இருக்கிறார்கள். இதுவும் எத்தனை நாளைக்கு நீடிக்கிறது என்று பார்க்கலாம்!