திண்டுக்கல்: முருங்கை காய்கள் விலை சரிவால் மார்க்கெட்டுக்கு கொண்டு வந்த காய்களை விவசாயிகள் வீதியில் வீசிச் சென்றனர். திண்டுக்கல் காந்தி மார்க்கெட் சாலை ஓரம் வீசிச்சென்ற முருங்கைக்காய்களை எடுக்கும் பெண்கள். திண்டுக்கல் மாவட்டத்தில் திண்டுக்கல், பழநி, ஒட்டன்சத்திரம், தொப்பம்பட்டி, வடமதுரை, வேடசந்தூர் உள்ளிட்ட பகுதிகளில் முருங்கை சாகுபடி நடக்கிறது.
இதில் மர முருங்கை, செடி முருங்கை, கரும்பு முருங்கை என 3 வகை முருங்கை காய்கள் விளைவிக்கப்படுகின்றன. விளைந்த முருங்கைக்காய்களை ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் உள்ளிட்ட மொத்த மார்க்கெட்களுக்கு விவசாயிகள் கொண்டு வந்து விற்பனை செய்கின்றனர். இங்கிருந்து சிறு வியாபாரிகள் வாங்கிச் சென்று மக்களுக்கு விற்கின்றனர். தென்மேற்கு பருவமழை போதிய அளவு பெய்ததால் முருங்கை விளைச்சல் அதிகரிக்கத் தொடங்கியது. இதையடுத்து கடந்த வாரம் முதல் மார்க்கெட்களுக்கு முருங்கைவரத்து அதிகரிக்கத் தொடங்கியது.
இந்நிலையில் வரத்து அதிகரித்ததால் நேற்று ஒட்டன்சத்திரம், திண்டுக்கல் மொத்த மார்க்கெட்டில் கரும்பு முருங்கை ஒரு கிலோ ரூ.17-க்கும், செடி முருங்கை ரூ.13, மர முருங்கை ரூ.11-க்கும் விற்பனையானது. சராசரி யாக ஒரு முருங்கைக்காய் ரூ.2 வரை விற்றது. இந்த விலை சற்று அதிகரித்து வெளிமார்க்கெட்டில் விற்கப்படுகிறது.
வரத்து அதிகரிப்பால் அனைத்து ரக முருங்கையும் விலை குறைந்து விவசாயிகளிடம் வாங்கப்பட்டதால் விவசாயிகள், தங்கள் தோட்டத்தில் இருந்து மார்க்கெட்டுக்கு வாகனத்தில் முருங்கை காய்களை கொண்டுவரும் செலவு, கமிஷன் தொகை, சுங்கக் கட்டணம், பராமரிப்பு செலவு என கணக்கு பார்த்தால் தங்கள் பணத்தை கூடுதலாக செலவழிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டனர். இதனால் விவசாயி களுக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.
திண்டுக்கல் மார்க்கெட்டுக்கு முருங்கை காய்களை கொண்டு வந்த விவசாயிகள் சிலர் கட்டுப்படியாகாத விலை என்பதால் காய்களை வீதியில் கொட்டிச் சென்றனர். இதனால் அப்பகுதியில் சென்றவர்கள் முருங்கை காய்களை எடுத்து சென்றனர்.