உதயநிதிக்கு வெள்ளி செங்கோல் வழங்கிய அமைச்சர் மூர்த்தி - மதுரை நிகழ்வு ஹைலைட்ஸ்


மதுரையில் நடந்த விழாவில் அமைச்சர் உதயநிதிக்கு, அமைச்சர் பி.மூர்த்தி வெள்ளி செங்கோல் வழங்கினார். | படம் : எஸ்.கிருஷ்ணமூர்த்தி |

மதுரை: மதுரையில் நேற்று ரூ.3 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பிலான நலத்திட்டங்களை வழங்கிய அமைச்சர் உதயநிதிக்கு வெள்ளி செங்கோல் வழங்கி அமைச்சர் பி.மூர்த்தி வரவேற்றார்.

மதுரை யா.ஒத்தக்கடையில் நேற்று அரசின் சார்பில் நலத் திட்ட உதவி வழங்கும் விழா நடந்தது. மாநில அளவில் 3,74,277 மகளிருக்கு ரூ.2874.26 கோடியில் வங்கி கடன், 12,233 பயனாளிகளுக்கு ரூ.75 லட்சத்து 60 ஆயிரம் மதிப்பில் இலவச வீட்டுமனை பட்டாக்கள் உட்பட ரூ.,3 ஆயிரம் கோடிக்கும் அதிக மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி வழங்கினார்.

இதில் அமைச்சர் பி.மூர்த்தி உதயநிதிக்கு வெள்ளி செஙகோல் வழங்கி வரவேற்றார். விழாவில் அமைச்சர் பி.மூர்த்தி பேசியதாவது: எந்த தலையீடும் இல்லாமல் அரசு சுதந்திரமாக பயனாளிகளை தேர்வு செய்தது. வருங்கால தமிழகத்தை வழிநடத்தும் உதய நிதி ஸ்டாலினுக்கு யானை மலை ஒத்தக்கடை என்றால் மறக்க முடியாத இடம்.

அவருக்கு திருப்பு முனையை ஏற்படுத்திய இடம். அவர் 1333 பேருக்கு பொற்கிழி வழங்கிய இடம். பின்னர் 72 ஆயிரம் மகளிர் குழுக்களுக்கு கடனுதவி வழங்கிய இடம். தற்போது 12233 பேருக்கு இலவச பட்டாக்கள் உள்பட 22 ஆயிரம் நலத்திட்ட உதவிகள் வழங்கு கிறார். முதல்வர் வழியில் கட்சி வேறுபாடு, சமுதாய வேறுபாடின்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி கொண்டிருக்கிறார்.

கிராமப் புறங்களில் விடுபட்டவர்களுக்கு கலைஞர் உரிமைத்தொகை கிடைக்கச் செய்ய ஆவன செய்ய வேண்டும். மாநகராட்சிகளுடன் புதிதாக இணைக்கப்பட்ட பகுதியில் நத்தம் புறம்போக்கு இடங்களில் 50 ஆண்டுகளுக்குமேலாக குடியி ருந்து வருவோருக்கு பட்டா வழங்க ஆவன செய்ய வேண்டும், என்றார்.

அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியதாவது: யானைமலை ஒத்தக் கடையிலுள்ள இதே இடத்தில் கட்சியில் அமைச்சர் பொறுப்புக்கு வருவதற்கு முன்பே 2018-ம் ஆண்டு மூத்த முன்னோடிகளுக்கு பொற்கிழி வழங்கும் நிகழ்ச்சியை மாநாடு போல் நடத்திக்காட்டினார் பி.மூர்த்தி. கடந்தாண்டு 72 ஆயிரம் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி மாநிலத்திலேயே பிரம்மாண்டமாக நடத்தினார்.

தற்போதும் 22 ஆயிரம் பேருக்கு அரசு நலத்திட்டஉதவிகள் வழங்கும் விழாவை ஒரு மாநாடு போல் விழா ஏற்பாடு செய்துள்ளார். மதுரை என்றால் அண்ணன் மூர்த்திதான், மூர்த்தி என்றாலே கிட்டத் தட்ட ஒரு மாநாடு போல் ஒரு நிகழ்ச்சிதான் நினைவுக்கு வரும். தமிழக முதல்வரிடம் அமைச்சர் பி.மூர்த்தி பல திட்டங்களை கேட்டுபெற்று மக்களிடம் சேர்த்துக் கொண்டிருக்கிறார். கட்சியும், ஆட்சியும் சிறப்பாக நடக்க உண்மையான உழைப்பை வழங்கி வருகிறார். அவரைப்போல் சுறுசு றுப்பாக கட்சிப்பணியாற்ற வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

25 ஆயிரத்திற்கும் மேல் பெண்கள் மற்றும் உள்ளாட்சி பிரதி நிதிகள், திமுகவினர் திரண்டனர். இவ்விழாவில் அமைச்சர் பி.டி.ஆர்.பழனிவேல் தியாகராஜன், எம்பி.சு.வெங்கடேசன் ஆகியோர் பேசினர். மாநகராட்சி மேயர் இந்திராணி, மாநகராட்சி ஆணை யாளர் ச.தினேஷ்குமார், எம்பி.தங்க தமிழ்ச்செல்வன், எம்எல்ஏக்கள் ஆ.வெங்கடேசன், மு.பூமிநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

வழிநெடுகிலும் திமுகவினர் சாலைகளில் திரண்டு வரவேற்பு அளித்தனர். சாலையோரங்களில் மேடை அமைத்து பாரம்பரிய, நாட்டுப்புறக் கலைஞர்கள் ஆடல், பாடலுடன் வரவேற்றனர். அமைச்சர் உதயநிதிக்கு வர வேற்கும் விழா மேடை அருகே செங்கரும்பு, வாழைமரங்களுடன் இருபுறமும் தோரண வாயில் அமைத்திருந்தனர். அதனை விழா முடிந்ததும் வந்திருந்து பயனாளிகள் செங்கரும்பு, வாழைக்காய்களை எடுத்துச் சென்றனர்.

உதயநிதியின் கையில் காயம்: முன்னதாக மகளிர் குழுவினர் கைவினைப்பொருட்களின் அரங்குகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பார்வையிட்டார். கூட்டத்திலிருந்த பயனாளிகளான பெண்கள் அமைச்சரிடம் கை குலுக்கினர். மேலும் சிலர் ‘செல்பி’ எடுத்துக் கொண்டனர். அப்போது கூட்டத்திலிருந்து தடுப்புக்காக வைத்திருந்த கம்பி அமைச்சரின் கையில் கீறலை ஏற்படுத்தியது. இதற்கு மேடையில் சிகிச்சை பெற்றார்.

பாரா தடகள வீரருடன் சந்திப்பு: மதுரை அச்சம்பத்து பகுதியைச் சேர்ந்த பாரா தடகள வீரர் மனோஜ். மாற்றுத்திறனாளியான இவர் உயரம் குறைந்த மாற்றுத் திறனாளிகள் விளையாட்டுப் போட்டியில் மாநில, தேசிய மற்றும் சர்வதேச போட்டிகளில் பதக்கங்களை வென்றுள்ளார். 2023-ல் ஜெர்மனியில் நடந்த சர்வதேச அளவிலான போட்டியில் குண்டு எறிதலில் தங்கப் பதக்கம் வென்றார்.

நடப்பாண்டு தாய்லாந்தில் நடந்த போட்டிகளில் குண்டு எறிதலில் தங்கம், வட்டு எறிதலில் வெள்ளி, ஈட்டி எறிதலில் வெண்கலம் வென்றார். இவரது திருமணம் செப்.5-ம் தேதி மதுரையில் நடந்த நிலையில், நேற்று மதுரை வந்த உதயநிதி இவரது வீட்டுக்கு சென்று புதுமணத் தம்பதியை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்தினார்.

x