ஓசூர்: ஓசூர் பகுதியில் உள்ள உணவகங்களில் பிளாஸ்டிக் காகிதங்களில் உணவு வழங்குவது அதிகரித்துள்ளது. இதை கண்காணித்து தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.
பிளாஸ்டிக் பயன்பாட்டால் மனிதர்கள் மட்டும் அல்லாமல் கால்நடைகளுக்கும் தீங்கு ஏற்படுகிறது. அதேபோல, சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது. இதனால், கடந்த 2019-ம் ஆண்டு ஜனவரி 1-ம் தேதி முதல் 50 மைக்ரானுக்கு குறைந்த பிளாஸ்டிக் கவர்கள் உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டுக்கு தமிழக அரசு தடை விதித்தது. தொடக்கத்தில் உள்ளாட்சி அமைப்புகள் மூலம் பிளாஸ்டிக் பயன்பாடு கண்காணிக்கப்பட்டு, கட்டுப்படுத்தப்பட்டது.
நாளடைவில் தொடர் நடவடிக்கை இல்லாததால், மீண்டும் பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரித்துள்ளது. ஓசூர் மாநகராட்சி பகுதிகளில் பிளாஸ்டிக் கவர்கள் மற்றும் பிளாஸ்டிக் காகிதங்கள், பேப்பர் கப்புகள் பயன்பாடு அண்மைக் காலமாக அதிகரித்துள்ளது. குறிப்பாக, ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள உணவகங்களில் பிளாஸ்டிக் காகிதங்களில் உணவுகள் வழங்குவது அதிகரித்துள்ளது.
பிளாஸ்டிக் காகிதங்களில் சூடான உணவுப் பொருட்களை வைத்து சாப்பிடுவதால், பொதுமக்களுக்கு பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, பிளாஸ்டிக் காகிதம் மூலம் உணவு வழங்கும் உணவகங்களை ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர்கள் கூறியதாவது: சுற்றுச்சூழலுக்கு தீங்கு விளைவிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பொதுமக்கள் பயன்படுத்துவதால், புற்றுநோய் உள்ளிட்ட நோய்களுக்குக் காரணியாக உள்ளதால், பிளாஸ்டிக் கவர்கள் பயன்படுத்த வேண்டாம் என அரசு விழிப்புணர்வு செய்தாலும், வியாபாரிகள் ஆபத்தை உணராமல் பிளாஸ்டிக் கவரில் உணவுப் பொருட்களை வழங்குகின்றனர்.
ஓசூர் பேருந்து நிலையம் மற்றும் தொழிற்சாலைகள் அதிகம் உள்ள பகுதிகளில் உள்ள உணவகங்களில் இலைக்கு பதில் பிளாஸ்டிக் காகிதங்களில் இட்லி, தோசை, பொங்கல், சாம்பார் உள்ளிட்ட சூடான உணவுகளை வழங்குகின்றனர். மேலும், பார்சலுக்கும் பயன்படுத்தி வருகின்றனர். இதனால், பிளாஸ்டிக் சூட்டில் காகிதம் உருகி உணவில் கலந்து விடுகிறது. இதை அறியாமல் அப்பாவி தொழிலாளர்கள் மற்றும் பொதுமக்கள் வாங்கிச் சாப்படுகின்றனர்.
இதுபோன்ற உணவகங்களில் இலைக்கு பதில் பிளாஸ்டிக் காகிதங்களை பயன்படுத்துவதை கண் காணித்து தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.