அண்ணாமலையை பதவியில் இருந்து தூக்கத் தயார்... டீல் பேசிய பாஜக: புறக்கணித்த எடப்பாடி பழனிசாமி!


பிரதமர் மோடியுடன் எடப்பாடி பழனிசாமி

பாஜகவுடன் கூட்டணி அமைப்பதில் அண்ணாமலை தான் பிரச்சினை என்றால், அவரை மாற்றவும் தயார் என அதிமுகவுக்கு உத்தரவாதம் அளித்தும், அதனை எடப்பாடி பழனிசாமி ஏற்கவில்லை என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

எடப்பாடி பழனிசாமி

தமிழ்நாட்டில் நீடித்த அதிமுக, பாஜக கூட்டணி உடைந்ததால், இருவரும் தனி அணி அமைப்பதில் தீவிரம் காட்டி வருகின்றனர். தென் மாநிலங்களில் பாஜக முழுமையாக புறக்கணிக்கப்படும் என்ற கருத்துக் கணிப்புகள் வெளிவந்திருப்பதால் தங்கள் கூட்டணியை பலப்படுத்த அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. குறிப்பாக, தமிழகத்தில் அதிமுக கூட்டணியை புதுப்பிக்க பாஜக மேலிடம் முடிவு செய்தது. இதற்காக ஓ.பன்னீர்செல்வம், டி.டி.வி, தினகரன் ஆகியோரைக்கூட கூட்டணியில் சேர்க்காமல் காக்க வைத்துள்ளனர்.

எடப்பாடி பழனிசாமியை சமாதானப்படுத்தும் பணியில் பாஜக மேலிடத் தலைவர்கள் தொடர்ந்து முயற்சி செய்து வருகின்றனர். யாரும் எதிர்பாராத நிலையில் பிரதமர் மோடி நேற்று முன் தினம் இரவு எடப்பாடி பழனிச்சாமியின் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள வீட்டு எண்ணுக்குத் தொடர்பு கொண்டதாக கூறப்படுகிறது. ஆனால், டெல்லியில் இருந்து அழைப்பு என்பதால், பழனிச்சாமி பேச மறுத்து விட்டாதாக கூறப்படுகிறது.

பிரதமர் நரேந்திர மோடி

இதனால், மோடி தரப்பில் இருந்து அதிமுக மூத்த தலைவர்களும் முன்னாள் அமைச்சர்களுமான இருவரை தொடர்பு கொண்ட முக்கிய பிரமுகர், "மாலை 6 மணிக்குள் அதிமுக கூட்டணி குறித்த முடிவை தெரிவிக்க வேண்டும். அதுவரைதான் காத்திருக்க முடியும். அண்ணாமலைதான் உங்களுக்குப் பிரச்சினை என்றால் அதையும் சரி செய்து கொள்ளலாம். மோடியே தொடர்பு கொண்டு கேட்டுக் கொண்டதால் கூட்டணிக்கு நாங்கள் வருகிறோம் என்று வெளிப்படையாக அறிவியுங்கள். உங்களுக்காக எந்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்கிறோம். மாலைக்குள் கூட்டணிக்கான சாதகமான முடிவை தெரிவிக்க வேண்டும்" என்று கூறியுள்ளனர்.

பிரதமர் மோடியின் இந்த தகவலை எடப்பாடி பழனிசாமியிடம் அதிமுக மூத்த தலைவர்கள் தெரிவித்தனர். ஆனால் எடப்பாடி பழனிசாமியோ, இப்போதுதான் சிறுபான்மையினர் நம்மை நம்பத் தொடங்கியுள்ளனர். மேலும் தமிழகத்துக்காக பாஜக எதுவும் செய்யவில்லை. இப்போது பாஜகவுடன் சேர்ந்தால், நாமும் அழிந்து விடுவோம். மக்களுக்கு நம் மீது நம்பகத்தன்மை இல்லாமல் போய்விடும். இதனால் துணிந்து முடிவு எடுத்துள்ளோம்.

அதில் பின்வாங்க மாட்டோம் என்ற உறுதியான முடிவை பாஜக மேலிடத்தில் நீங்களே கூறிவிடுங்கள் என்று கூறிவிட்டார். இந்த தகவல் பாஜக மேலிடத்துக்கு தெரியப்படுத்தப்பட்டுள்ளது. நேற்று மாலை 6 மணி வரை அவகாசம் அளித்தும் அதிமுக தரப்பில் இருந்து கூட்டணிக்கான ஒப்புதல் வரவில்லை என்பதால் அடுத்த கட்டமாக என்ன செய்வது என்ற ஆலோசனையில் பாஜக மேலிடம் இறங்கியுள்ளது.

ஆனால், எடப்பாடி பழனிச்சாமியோ, எதைப் பற்றியும் கவலை கொள்ளாமல் தனது அணிக்கு புதிய கட்சிகளைச் சேர்க்கும் பணியை தீவிரப்படுத்தி வருகிறார். இந்த நிலையில் அண்ணாமலையை மாற்றும் அளவுக்கு இறங்கி வந்தும் கூட எடப்பாடி பழனிசாமி கூட்டணிக்கு ஒப்புக் கொள்ளாததால் அவருக்கு எந்த வகையில் பாஜக நெருக்கடி கொடுக்குமோ என அதிமுக நிர்வாகிகள் அச்சத்தில் உள்ளனர்.

x