ஃபுளூ காய்ச்சல் பரவல் எதிரொலியாக இன்று முதல் கோவை மாவட்டத்தில் முகக்கவசம் கட்டாயம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோவையில் ஃபுளூ வைரஸ் பரவல் காரணமாக உள்நோயாளியாக சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளது. கோவை மாவட்டத்தில் அரசு, தனியார் மருத்துவமனைகளில் நாள் ஒன்றுக்கு சராசரியாக 100 பேர் காய்ச்சலுக்கு சிகிச்சை பெறுகின்றனர்.
காலநிலை மாற்றம், பண்டிகை கால கூட்ட நெரிசல் போன்றவை ஃபுளூ வைரஸ் பரவ காரணங்கள் என்று கூறப்படுகின்றன. இந்த வைரஸ் குழந்தைகள், முதியவர்களுக்கு விரைவாக பரவுகிறது.
இந்நிலையில், ஃபுளூ காய்ச்சல் பாதிப்பு எதிரொலியாக கோவையில் வெளியில் செல்லும்போது மக்கள் முகக்கவசம் அணிந்துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். முடிந்தவரை கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
பொதுமக்கள் மருந்து கடைகளில் சுயமாக மருந்து வாங்கி உட்கொள்ளக் கூடாது என்றும் மருத்துவரின் ஆலோசனை பெற்றே மருந்துகளை உட்கொள்ள வேண்டும் எனவும் மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.
சுவாசக் குழாய் மூலமாக இந்த வைரஸ் உடலுக்குள் செல்கிறது. ஒருவர் இருமும் போதும், தும்மும் போதும் மற்றவருக்கு பரவுகிறது. அதனால் மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிவது அவசியம் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.