பவள விழாவை முன்னிட்டு வீடு, அலுவலகங்களில் திமுக கொடி ஏற்றி கொண்டாடுங்கள்: கட்சியினருக்கு மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்


சென்னை: திமுக பவள விழாவை முன்னிட்டு, கட்சியினர் தங்களது வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் திமுக கொடி ஏற்றி கொண்டாட முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.

அமெரிக்கா சென்றுள்ள முதல்வர் மு.க.ஸ்டாலின், அங்கிருந்தபடியே திமுகவின் சட்டப்பேரவை தேர்தல் ஒருங்கிணைப்புக் குழுவுடன் நேற்று முன்தினம் காணொலி வாயிலாக ஆலோசனை நடத்தினார்.

அப்போது, திமுக முப்பெரும் விழா மற்றும் பவளவிழா ஏற்பாடுகள் குறித்து குழுவினரிடம் கேட்டறிந்தார். மாநிலம் முழுவதும் நடைபெறும் திமுக உறுப்பினர் கூட்டங்கள், சுவர் விளம்பரங்கள், கொடியேற்றும் நிகழ்ச்சிகள் குறித்த விவரங்களையும் கேட்டறிந்தார்.

மேலும், பவளவிழாவை முன்னிட்டு, கட்சியினரின் வீடுகள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் திமுக கொடிகளைப் பறக்க விட வேண்டும் என்றும் அறிவுறுத்தினார். தொடர்ந்து, அமெரிக்காவில் கையெழுத்தாகும் முதலீடுகள், தமிழ் மக்களுடனான சந்திப்புகள் குறித்து பகிர்ந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் பேசிய குழு உறுப்பினரான அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், முதல்வர் தமிழகம் திரும்பியதும், திமுகவில் செய்ய வேண்டிய மாற்றங்கள் குறித்த பரிந்துரைகளை ஒருங்கிணைப்புக் குழு வழங்கும் என்று தெரிவித்தார்.

இந்நிலையில், முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்ட அறிக்கை: தந்தை பெரியாரின் கொள்கைகளை ஜனநாயக வழியில் சட்டங்களாகவும் திட்டங்களாகவும் நிறைவேற்றும் நோக்கத்துடன் பேரறிஞர்அண்ணாவால் கடந்த 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்டு, கருணாநிதியால் கட்டிக்காக்கப்பட்ட திமுக எனும் அரசியல் பேரியக்கம், 75 ஆண்டுகளாக மக்களுக்குப் பணியாற்றி, இந்த 2024-ம் ஆண்டு தனது பவள விழா நிறைவைக் கொண்டாடுகிறது.

பவள விழாவை ஒட்டி திமுக கொடிக்கம்பங்கள் அனைத்தும் புதுப்பிக்கப்பட்டு, அதில் அந்தந்தப் பகுதியில் கட்சிக்காக அல்லும் பகலும் உழைத்த மூத்த முன்னோடிகளின் கரங்களால் இருவண்ணக் கொடியை ஏற்றிபட்டொளி வீசி பறந்திடச் செய்ய வேண்டும் என மாவட்டச் செயலாளர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது.

அதன்படி வீதிதோறும் பறக்கும் இருவண்ணக் கொடி நம் வீடு தோறும் பறந்திட வேண்டும். திமுக கொடி பறக்காத திமுகவினரின் வீடுகளே இல்லை என்னும் வகையில் பவள விழாவை முன்னிட்டு நம் அனைவரது இல்லங்கள், அலுவலகங்கள், வணிக வளாகங்களில் கொடியை ஏற்றி கொண்டாடுவோம்.

x