பள்ளி ஆய்வு பணியில் மெத்தனம்: வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலரை பணியிடை நீக்கம் செய்து உத்தரவு


சென்னை: பள்ளி ஆய்வு பணியில் மெத்தனமாக இருந்த வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலர் ஜெ.மேரி ஜோஸ்பினை பணியிடை நீக்கம் செய்து தொடக்கக்கல்வி இயக்குநர் பி.ஏ.நரேஷ் உத்தரவிட்டுள்ளார்.

இது தொடர்பாக தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் வெளியிட்டுள்ள உத்தரவில் கூறப்பட்டு இருப்பதாவது: திருவள்ளூர் வருவாய் மாவட்டம் பொன்னேரி கல்வி மாவட்டம் வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலகத்துக்கு உட்பட்ட பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி, மாணவர் எண்ணிக்கை பதிவில் முறைகேடு செய்துஆசிரியர் - மாணவர் எண்ணிக்கையில் தவறான தகவல்களை அளித்து அரசுக்குமிகப்பெரிய அளவில் பண இழப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்த பள்ளியை ஆய்வுசெய்ய வேண்டிய வில்லிவாக்கம் வட்டார கல்வி அலுவலரான மேரி ஜோஸ்பின், அப்பள்ளியை சரியாக கண்காணிக்காமலும், ஆய்வு மேற்கொள்ளாமலும் இருந்துள்ளார்.

மிகப்பெரிய அளவிலான குற்றச்சாட்டுகள் தொடர்பாக அவர் மீது விசாரணை நடத்த வேண்டியுள்ளதால் பொதுநலன் கருதி அவர் பணியிடைநீக்கம் செய்யப்படுகிறார். இதைத்தொடர்ந்து உரிய அதிகாரியின் முன்அனுமதி இல்லாமல் அவர் வில்லிவாக்கத்தை விட்டு வேறு எங்கும் செல்லக்கூடாது. இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே, தவறான மாணவர் விவர பதிவுக்காகவும், ஆசிரியர்-மாணவர் விகிதாச்சாரத்தில் தவறான தகவல்களை அளித்து அரசுக்கு பெரிய அளவில் நிதி இழப்பு ஏற்படுத்தியதற்காகவும் பம்மதுகுளம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.லதாவும் பணியிடை நீக்கம்செய்யப்பட்டுள்ளார். இதற்கான உத்தரவையும் தொடக்கக்கல்வி இயக்குநர் நரேஷ் வெளியிட்டுள்ளார்.

x