தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்களை பின்பற்றியே வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம்: தலைமை தேர்தல் அதிகாரி


சென்னை: வாக்காளர் பட்டியலில் இருந்து பெயரை நீக்குவது தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டுதல்கள் முழுமையாக பின்பற்றப்படுவதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு தெரிவித்துள்ளார்.

இந்திய தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, கடந்த ஆக.20 முதல்அக்.18-ம் தேதி வரை, வாக்காளர் பட்டியல் சரிபார்ப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தச் சூழலில், தேர்தல் ஆணையம் தன்னிச்சையாக வாக்காளர் பட்டியலில் பெயர்களை நீக்குவதாகவும், இறந்தவர்கள், முகவரி மாறியவர்கள், குறிப்பிட்ட முகவரியில் ஆய்வின்போது இல்லாதவர்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கம் செய்யும்போது, தேர்தல் ஆணையம் வகுத்துள்ள விதிகளை பின்பற்ற வேண்டும் என்றும் குறிப்பிட்டு திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி சமீபத்தில் சத்யபிரத சாஹுவுக்கு கடிதம் அனுப்பினார்.

இதற்கிடையில், தமிழக மாநில தேர்தல் ஆணையம் மாநிலம் முழுவதும் உள்ளாட்சித் தேர்தலை நடத்துவதற்கான ஆரம்பகட்டப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் ஒருபகுதியாக, வாக்காளர் பட்டியலை கேட்டு தலைமை தேர்தல் அதிகாரிக்கு கடிதம் அனுப்பியது. இவை தொடர்பாக சத்யபிரத சாஹு கூறியதாவது:

தன்னிச்சையாக வாக்காளர் பட்டியலில் இருந்து பெயர்களைநீக்க முடியாது. அதற்கென தேர்தல்ஆணையம் பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளது. வீடுகளில் இல்லாத நிலை, முகவரி மாற்றம், இறப்பு ஆகிய காரணங்களுக்காக பெயர் நீக்கம் செய்யப்படுகிறது. வீடுகளில் வாக்காளர் இல்லை என்பதும், முகவரி மாற்றம் என்பதும் பலமுறை களஆய்வு செய்து உறுதி செய்யப்படும். ஒருவர் இறந்துவிட்டால், உறவினர்களிடம் இருந்து படிவம்-7 பெற்ற பின்னரே நீக்கப்படும்.

மேலும், ஒருவர் பெயர் இரண்டுஇடத்தில் இருக்கும் பட்சத்தில், ஒரு இடத்தில் பெயரை நீக்க தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படி, வாக்காளருக்கு கடிதம் அனுப்பப்பட்டு, 2 வார கால அவகாசத்துக்குப் பின்னர், மீண்டும் களஆய்வில் உறுதி செய்த பின்னரே பெயர் நீக்கப்படு்ம். தற்போது திமுகசார்பில் அனுப்பிய கடிதத்தையும் தேர்தல் ஆணைய விதிமுறைகளையும் இணைத்து ஆட்சியர்களுக்கு அனுப்பியுள்ளோம்.

வாக்காளர் பட்டியல் கோரி மாநில தேர்தல் ஆணையம் கடிதம்அனுப்பியிருந்தது. வாக்காளர் பட்டியலை வழங்க இந்திய தேர்தல்ஆணையத்துக்குத்தான் அதிகாரம் உள்ளது. எனவே மாநில தேர்தல் ஆணையத்தின் கடிதம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பப்பட்டது. அந்த கடிதம் தொடர்பாக இந்திய தேர்தல் ஆணையம் தற்போது கடிதம் அனுப்பியுள்ளது.

மேலும், மாநிலங்கள் வாக்காளர் பட்டியலை கோரும்போது அதற்கென வழிகாட்டுதல்களையும் இந்திய தேர்தல் ஆணையம் வகுத்துள்ளது. புகைப்பட வாக்காளர் பட்டியலை மாநில தேர்தல் ஆணையம் கோருவதால், இதில் சில விஷயங்கள் குறித்து கேள்வி எழுப்பி அதற்கு மாநிலத் தேர்தல் ஆணையம் விளக்கம் அளித்த பின் பட்டியலை வழங்க தேர்தல் ஆணையம் அனுமதித்துள்ளது. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டு நெறிமுறைகள்படி வாக்காளர் பட்டியல் வழங்கப்படும்

x